ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் பிறகு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த 10-ம் தேதி மாலை ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. தற்போது 19 நாட்கள் பதற்றத்துக்குப் பின் எல்லையில் மோதல்கள் அற்ற இரவு நீடித்ததாகவும், அமைதி திரும்பியுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மே-11 ஆம் தேதி இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், “நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நமது அண்டை நாடுகளைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நமது அண்டை நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது அவசியம். நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால், செயற்கைக்கோள்கள் மூலமாகவே நாம் கண்காணிக்க வேண்டும். தற்போது, நமது நாட்டின் 7,000 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள கடல் எல்லையை செயற்கைக்கோள் வழியாகவே கண்காணித்து வருகிறோம். நமது செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் இல்லாவிட்டால், பல்வேறு சாதனைகளை நாம் நிகழ்த்தியிருக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.