“ப்ளீஸ்... விட்ருங்கண்ணா...” தமிழகத்தை கலங்கடித்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு!
Dinamaalai May 13, 2025 04:48 PM

அண்ணா அடிக்காதீங்க...கழட்டிடுறேன் என கண்ணீர் குரல்கள் இன்னமும் தமிழகத்தைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. எத்தனைப் பெண்கள், சிறுமிகள்? பொள்ளாச்சி முதல்முறையாக நாடு முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சிக்கியது. நூற்றுக்கணக்கான பெண்கள், கல்லூரி மாணவிகள் பாலியல் வலையில் சிக்கினார்கள். கடந்த 2019ல் நடைபெற்ற இந்த சம்பவம் அரசியலிலும் எதிரொலித்தது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக முக்கிய பிரமுகர்களின் உறவினர்கள் தான் குற்றவாளிகள் என கூறப்பட்டது.

இந்த வழக்கு கவனம் பெற்றதைத் தொடர்ந்து, வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, பின்னர் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு (25) முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அடுத்ததாக சபரிராஜன்(25), வசந்தகுமார்(27), மணிவண்ணன்(25) சதீஷ் (28) ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் போலீசாரின் தொடர் விசாரணையில் கடந்த 2021ம் ஆண்டு ஹேரேன் பால்(29), அருளானந்தம்(34), அருண்குமார் (30) பாபு என்ற பைக் பாபு(34),என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில், 50க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 40 மின்னணு தரவுகள், சுமார் 200 ஆவணங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுமார் 6 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இரு தரப்புக்குமான விசாரணை நிறைவடைந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினி தேவி அறிவித்திருந்தார்.

தற்போது சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் நீதிமன்ற தீர்ப்புக்காக கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகளா? என்ன தண்டனை என இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.