மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை மகன் தமிழ்துரை (15). 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி நடைபெற்ற உத்திராபதியார் கோவில் திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த லைட் போஸ்ட் அருகில் தமிழ்துரை விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கை லைட் போஸ்டில் பட்டது.
இதில் தமிழ்துரை மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த தமிழ்துரையை அருகில் இருந்தவர்கள் மீட்டு மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் தமிழ்துரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியான நிலையில், மாணவன் தமிழ்துரை, 313 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். மகனின் தேர்வு முடிவை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.