திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விளாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (55). இவரது மனைவி ஜெயம்மாள். கடந்த 3 வருடங்களுக்கு முன் ஜெயம்மாள் காலமானார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன பாப்பா என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சின்ன பாப்பாவுடன் ராஜாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதற்கிடையே சின்ன பாப்பாவின் மூத்த மகளுக்குத் திருமணமாகி தனியே கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மகள் வீட்டுக்கு சென்றிருந்த சின்ன பாப்பா அங்கேயே தங்கிவிட்டார். இதனால், சின்ன பாப்பாவை தொடர்பு கொள்ள முடியாமல் ராஜா தவித்து வந்துள்ளார். பின்னர், சின்ன பாப்பாவை தொடர்புகொண்ட ராஜா, தன்னுடன் வரும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தவாசலில் மகள் வீட்டுக்கு வெளியே மாலை நேரத்தில் சின்ன பாப்பா நின்று கொண்டிருந்த போது, அங்குச் சென்ற ராஜா, சின்ன பாப்பா மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதில், தவறுதலாக சின்ன பாப்பாவின் 3 வயது பேத்தி ஆஷிகா அருகில் பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்துள்ளது. இதில், தீக்காயம் அடைந்த குழந்தை அலறி துடித்துள்ளது.
உடனடியாக பெட்ரோல் குண்டு வீசிய ராஜா அங்கிருந்து தப்பிய நிலையில், படுகாயம் அடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், சந்தவாசல் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய ராஜாவை பிடிக்கத் தனிப்படை அமைத்து, விசாரித்து வருகின்றனர்.