அனல்மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... போலீசார் தீவிர சோதனை!
Dinamaalai May 17, 2025 07:48 PM

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில்  அனல்மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உதவி பொறியாளருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதையடுத்து அனல்மின் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.9,250 கோடியில் தலா 660 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அலகுகளுடன் கூடிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்படுகிறது.

உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் பணிகள் நிறைவுற்று கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனல்மின் நிலையம் திறக்கப்பட்டு முழுவீச்சில் மின்உற்பத்தி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் உடன்குடி அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் உதவி பொறியாளருக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதில், ‘உடன்குடி அனல்மின் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக’ தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உயர் அதிகாரிகளுக்கும், குலசேகரன்பட்டினம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே மோப்ப நாயுடன் போலீசார் வந்து அனல்மின் நிலைய வளாகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் வந்து அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

உதவி பொறியாளருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.