ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா விலகலா? - பிசிசிஐ மறுப்பு!
Top Tamil News May 19, 2025 11:48 PM

ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா விலக முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகியதாக தகவல் வெளியானது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும்  பெண்கள் ஆசிய கோப்பை மற்றும் ஆண்கள் ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஏசிசி) தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இருப்பதால் ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா விலக முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் குறித்து எந்த பேச்சுவார்த்தையோ, முடிவையோ 'இதுவரை' பிசிசிஐ செய்யவில்லை. ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து தொடர்கள் மீதுதான் தற்போது எங்களது முழு கவனம் உள்ளது என கூறியுள்ளார். 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.