கனமழையால் பெங்களூரு சாலைகள், குடியிருப்புகளில் வெள்ளம்... படகுகள் மூலம் மக்கள் மீட்பு!
Dinamaalai May 20, 2025 10:48 PM

பெங்களூரில் கடந்த இரு தினங்களாக விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளிலும், பல குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய கனமழை அதிகாலை 5.30 மணி வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் சிவாஜிநகர், ஹென்னூர், கிருஷ்ணராஜாபுரம், கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சில்க் போர்ட், சாந்தி நகர், எலஹங்கா உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது. வீடுகளில் இருந்த பொருட்களும், அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் நீரில் மூழ்கின.

பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் 50-க்கும் மேற்பட்ட மரங்களும் மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. இதன்காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். சாந்தி நகரில் உள்ள பிஎம்டிசி பேருந்து டெப்போவில் மழை வெள்ளம் தேங்கியதால் பேருந்துகளை வெளியே கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் நீரேற்றி இயந்திரங்கள் மூலம் நீரை வெளியேற்றிய பின்னர், பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெங்களூருவில் உள்ள ஹொரமாவு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இங்கு மீட்புப் படையினர் ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்டனர். ஒயிட் ஃபீல்டில் தனியார் நிறுவனத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. இதில் சசிகலா (35) என்ற தனியார் நிறுவன ஊழியர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் சித்தராமையா நேற்று மாலை பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார்.

பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ''அடுத்த 48 மணி நேரத்துக்கு பெங்களூருவுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்தபட்சம் 64.5 மிமீ முதல் அதிகபட்சமாக 115.5 மிமீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக'' தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.