ஓர் ஆண்டாக அல்ல, 17 ஆண்டுகளாக ஆர்சிபி அணி ஐபிஎல் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்ற போராடி வருகிறது. 18-வது ஆண்டாக இந்த முறையும் ஆர்சிபி அணி தனது போராட்டத்தில் இருந்து தளர்ந்துவிடவில்லை. கோப்பைக்கான தனது தேடலிலும், முயற்சியிலும் சிறிதுகூட தொய்வில்லாமல் ஒவ்வொரு போட்டியையும் அணுகுகிறது, ப்ளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் 5 முறை ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ரசிகர்களும் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முடியவில்லேயே என்பதற்காக தங்களின் ஆதர்ச அணியின் மீதான ஈர்ப்பையும், ரசிப்பையும் சிறிதுகூட குறைக்கவில்லை. பாரம்பரிய ஆர்சிபி ரசிகர் இன்னும் ஆர்சிபி ரசிகராகவே இருந்து வருகிறார். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் "ஈ சாலா கப் நமதே" என்ற வாசகத்தை உற்சாகம் குறையாமல் உரக்கக் கூறி வருகிறார்கள்.
ஆர்சிபி அணி ஒவ்வொரு முறையும் கோப்பைக்காக தனது போராட்டத்தை உற்சாகமாக நடத்துவதற்கு அந்த அணியின் ரசிகர்களின் ஆதரவும் முக்கியக் காரணம்.
ஆர்சிபி அணியால் ஏன் இத்தனை ஆண்டுகளாக ஒரு கோப்பையைக்கூட வெல்ல முடியவில்லை?, கோப்பையை வெல்லும் தகுதி இல்லையா? வீரர்களுக்கு மன உறுதி இல்லையா என்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்தாலும் அதற்கான பதில்கள் வலுவாகவே இருக்கின்றன.
எந்த விதத்தில் குறைந்தது ஆர்சிபி?ஆர்சிபி அணி கடந்த 2008ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் 2009, 2011, 2016ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டிவரை சென்று கோப்பையை நழுவவிட்டது ஆர்சிபி. அது மட்டுமல்லாமல், இதுவரை 18 சீசன்களில் 10 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.
2011ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்று 2வது இடத்தை ஆர்சிபி பெற்றது. கடந்த 2020ம் ஆண்டிலிருந்து 2025 சீசன்வரை 6 சீசன்களில் 5 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேறியது. 2021ம் ஆண்டு சீசனில் 3வது இடம் வரை ஆர்சிபி பிடித்தததால் ஆர்சிபியின் ஃபார்ம் குறித்து சந்தேகம் எழுப்ப முடியாது.
ஆர்சிபி அணி 2012 முதல் 2014, 2017 முதல் 2019 ஆண்டுகள் சீசன்தான் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. இதைத் தவிர்த்துப் பார்த்தால் பெரும்பாலான சீசன்களில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.
ஆக, ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும்வரை பெரும்பாலும் சிக்கல் வந்தது இல்லை. ஆனால், அதன்பின்பு நடக்கும் ப்ளே ஆஃப் சுற்று, எலிமினேட்டர் சுற்றில்தான் ஆர்சிபியின் சொதப்பல் ஆட்டம் வெளிப்பட்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோயுள்ளது. கடந்த 6 சீசன்களில் ஆர்சிபி அணி 2021 சீசனில் மட்டும் 3வது இடம்வரை பெற்றுள்ளது, மற்ற சீசன்களில் 4வது இடத்துடன் திரும்பியது.
2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி சிறப்பான ஃபார்மில் இருந்தது கோப்பைக்கான வேட்கையும் தீவிரமாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே போட்டி நிறுத்தப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு போட்டிகள் மாற்றப்பட்டதும் ஆர்சிபி அணிக்கு ஆடுகளம் புதிது, சூழல் புதிது என்பதால் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் தோற்றது.
இந்த சீசனிலும் ஆர்சிபி அணி தொடக்கத்தில் இருந்தே மிரட்டலான ஃபார்மில் இருந்து டாப்-3 இடங்களுக்குள் பயணித்தது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரில் ஒருவாரம் ஒத்திவைப்புக்குப்பின் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஐபிஎல் மீண்டும் தொடங்கிய நிலையில், கொல்கத்தா-ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் ரத்தானதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது, ஆர்சிபி அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆனால், ஆர்சிபி அணிக்கு இனிமேல்தான் உண்மையான பரிசோதனையே இருக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பலர் தங்கள் சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்டனர். ஒருவார இடைவெளியில் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கிய நிலையில் வீரர்கள் பலர் வருவது சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஆர்சிபி அணிக்கு லீக் சுற்றுவரை வெளிநாட்டு வீரர்கள் சிலர் அணியில் இருப்பார்கள். அதன்பின், ப்ளே ஆஃப் சுற்று தொடங்கும்போது முக்கிய வீரர்கள் சிலர் தங்களின் தேசிய அணிக்கு ஆடச் செல்வதால் அவர்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தல், தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி ஆகியோர் லீக் சுற்றுவரைதான் விளையாடுவார்கள். அதன்பின், அவர்கள் தென்னாப்பிரிக்க அணிக்கு செல்கிறார்கள். இதில், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் மீண்டும் ஆர்சிபி அணிக்குள் வருவாரா என்பதுதான் விடைதெரியாமல் இருக்கிறது.
ஏனென்றால், பல போட்டிகளில் ஆர்சிபி அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியதற்கு ஹேசல்வுட்டின் பந்துவீச்சு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் ஆடிய ஹேசல்வுட் 18 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டலான ஃபார்மில் இருக்கிறார்.
ஆர்சிபி அணிக்கு புதிய பந்தில் பந்து வீச வேண்டுமா? டெத் ஓவர்களில் கட்டுக்கோப்பான பந்துவீச்சு தேவையா? விக்கெட் எடுக்க வேண்டுமா? என அனைத்துக்கும் ஒரே பதிலாக ஹேசல்வுட் இருந்துள்ளார். அவரை ஆர்சிபி அணி, முக்கியமான ப்ளே ஆஃப் சுற்றில் இழப்பது மிகப்பெரிய பின்னடைவாகும்.
அதுமட்டுமல்லாமல், தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடியும் ப்ளே ஆஃப் சுற்றில் இல்லாதது ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சை மேலும் பலவீனப்படுத்தும். லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் முசாபர்பானியை ரூ.75 லட்சத்துக்கு ஆர்சிபி அணி சேர்த்துள்ளது.
இவரின் தாக்கம் ப்ளே ஆஃப் சுற்றில் எந்த அளவு இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியும். வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், யாஷ் தயால் ஆகியோரும், வெளிநாட்டு பந்துவீச்சாளர்களில் துஷாரா, முசாஃபர்பானி மட்டுமே உள்ளனர்.
ஆதலால் ஆர்சிபி அணிக்கு லுங்கி இங்கிடி, ஹேசல்வுட் இல்லாமல் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது அந்த அணிக்கு சற்று பின்னடைவுதான். ஆனால், ரோமாரியோ ஷெப்பார்ட், பில் சால்ட், டிம் டேவிட், லிவிங்ஸ்டோன் ஆகியோர் இருப்பது அந்த அணிக்கு பேட்டிங்கில் ஓரளவுக்கு வலுகுறையாமல் இருக்கும்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபியின் அடையாளமாக இருந்து வருபவர் விராட் கோலி. ஒவ்வொரு சீசனிலும் ஆர்சிபி அணிக்கு கேப்டனாகவும், கேப்டன் இல்லாமல் இருக்கும்போதும் தனது முழுமையான பங்களிப்பை கோலி அளித்துள்ளார். அதிலும் கடந்த 2020ம் ஆண்டிலிருந்து கோலி சிறப்பாக ஆடி வருகிறார், ஒவ்வொரு சீசனிலும் 400 ரன்களுக்கு குறையவில்லை.
அதிலும், கடந்த 2023 சீசனில் கோலி 639 ரன்களும், 2024 சீசனில் 741 ரன்களும் சேர்த்துள்ளார். இதில், 2023 சீசனில் 2 சதங்களும், கடந்த சீசனில் ஒரு சதத்தையும் கோலி விளாசி தனது ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சீசனிலும் கோலி 7 அரைசதங்கள் உள்பட 500 ரன்களுக்கு மேல் குவித்து மிரட்டலான ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம், நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி அணி எந்த சீசனிலும் இல்லாத வகையில் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் அனைத்திலும் சமன் செய்யக்கூடிய வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது.
சுழற்பந்துவீச்சுக்கு குர்னல் பாண்டியா, ஸ்வப்னில் சிங், சூயஷ் சர்மா, லிவிங்ஸ்டோன் ஆகியோர் இருப்பது நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டத்தைத் திருப்பும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
வேகப்பந்துவீச்சில் தற்போது ஹேசல்வுட், இங்கிடி இல்லாத நிலையில், புவனேஷ்வர், ஷெப்பார்ட், யாஷ் தயால், துஷாரா, சலாம், முசாராபாணி ஆகியோர் இருப்பதும் வேகப்பந்துவீச்சில் சமநிலையை ஏற்படுத்துகிறது.
பேட்டிங்கில் அதிரடியான தொடக்கம் அளிக்க பில்சால்ட், விராட் கோலி, ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல், ஷெப்பர்ட், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னல் பாண்டியா, மயங்க் அகர்வால் இருப்பதும் பேட்டிங்கில் தேவையான மாற்றத்தை செய்யவும் ஏதுவாக இருக்கிறது. இதில் டெத் ஓவர்களில் விளையாடுவதற்காக ஷெப்பர்ட், டிம் டேவிட், ஜிதேஷ் இருப்பது கூடுதல் பலமாகும்.
சூழலுக்கு ஏற்றார்போல் விளையாடக்கூடிய வீரர்களையும், சமநிலையான அணியை உருவாக்கும் அளவுக்கு வீரர்கள் இருப்பதுதான் ஆர்சிபி மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் ஜாம்பவான்கள் பலரும் இந்த முறை ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என கணித்துள்ளது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஆர்சிபியின் முன்னாள் வீரர் ஏபிடிவில்லியர்ஸ் ஆகியோர் ஆர்சிபி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர்.
"ஆர்சிபி அணி ஃபைனல் வந்துவிட்டால் இந்தியா வந்துவிடுவேன், கோலியுடன் சேர்ந்து கோப்பையை தூக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று ஏபிடி தெரிவி்த்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா கூறுகையில் " 2025 சீசனில் ஆர்சிபி வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சு முக்கிய பலமாக இருந்துள்ளது. கேப்டன் பட்டிதார் தலைமை சிஎஸ்கே அணியை 2 முறை முதல்முறையாக வீழ்த்தியுள்ளது. சின்னசாமி அரங்கில் 150 ரன்களையும், 136 ரன்களையும் டிஃபெண்ட் செய்ததில் ஆர்சிபியின் பந்துவீச்சு திறமை வெளிப்பட்டுள்ளது.
ஆர்சிபி அணியின் ஓய்வறையும் நட்புடன் இருப்பதும் அந்த அணியின் தொடர்வெற்றிக்கு முக்கியக் காரணம். மும்பை, குஜராத், பஞ்சாப் அணிகள் சிறப்பாக ஆடினாலும், என்னைப் பொருத்தவரை 2025ம் ஆண்டு கோலியின் ஆண்டாக, ஆர்சிபியின் ஆண்டாக மாறும், 18 ஆண்டு கோப்பைக்கான பஞ்சம் மாறும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு