இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் பேசியதை மையப்படுத்தி, ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்திய காங்கிரஸ் கட்சி, மத்திய அரசுக்குப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் பவன் கேரா திங்கள்கிழமை செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அப்போது, "எஸ். ஜெய்சங்கரின் அறிக்கையால், பாகிஸ்தானாலும் முழு உலகத்தாலும் இந்தியா ஏளனத்திற்கு ஆளாகியுள்ளது" என்று கூறினார்.
"தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். இதன் பொருள் என்ன? இவர்கள் தகவல் கொடுத்த பின்னரும் பயங்கரவாதிகள் அதே இடத்திலேயே அமைதியாக அமர்ந்திருக்கும் அளவுக்கு, பாகிஸ்தான் மீது வெளியுறவு அமைச்சருக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா? வெளியுறவு அமைச்சருக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு? அவர் ஏன் தாக்குதலுக்கு முன்பே தகவல் அளித்தார்?" என்று பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், வெளியுறவு அமைச்சரின் பேச்சு தவறான புரிதலுடன் அணுகப்படுவதாக இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) கூறியுள்ளது. காங்கிரஸ் 'போலி செய்திகளைப் பரப்புகிறது' என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
வெளியுறவு அமைச்சர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டுகாங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரப் பிரிவு தலைவர் பவன் கேராவும் தனது செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
"மசூத் அசார் உயிர் பிழைத்ததற்கும், ஹபீஸ் சயீத் உயிருடன் தப்பித்ததற்கும் இதுதான் காரணமா?
காந்தஹார் விமானக் கடத்தலின் போது மசூத் அசார் விடுவிக்கப்பட்டதால், தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்குத் தெரிவிப்பதன் மூலம் மசூத் அசார் மீண்டும் காப்பாற்றப்பட்டதை அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா?" என்று அவர் கூறினார்.
மேலும் வெளியுறவு அமைச்சரின் பேச்சு குறித்து பவன் கேரா கூறுகையில், "வெளியுறவு அமைச்சரின் இந்த அறிக்கை முக்கியமானது, ஏனென்றால் இந்த தகவல் கிடைத்ததால் பயங்கரவாதிகள் தங்களது மறைவிடங்களிலிருந்து தப்பி ஓடியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது ஏன் செய்யப்பட்டது என்பதற்கு பிரதமர் மோதியும் வெளியுறவு அமைச்சரும் பதிலளிக்க வேண்டும்." என்றார்.
இந்த விவகாரம் குறித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் இருந்து ஒரு விளக்கத்தை கேட்டுள்ளார்.
மேலும் இது ஒரு தவறு அல்ல, ஒரு குற்றம் என்றும், உண்மையை அறிய நாட்டிற்கு உரிமை உண்டு என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக எஸ். ஜெய்சங்கரின் அறிக்கை குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.
"நமது தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தும்போது பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது குற்றம். அரசாங்கம் இதைச் செய்தது என்பதை வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். யார் இதைச் செய்யச் சொன்னார்கள்? இதனால் நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழக்க நேரிட்டது?" என்று கேள்விகளை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி.
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பத்திரிகையாளர்களுடன் உரையாடல் ஒன்றை நடத்தினார்.
"தாக்குதலின் தொடக்கத்தில், நாங்கள் பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்குகிறோம் என்று பாகிஸ்தானுக்கு ஒரு செய்தியை அனுப்பினோம். நாங்கள் ராணுவத்தைத் தாக்க மாட்டோம். எனவே, ராணுவம் அதிலிருந்து விலகி இருக்கவும், தலையிடாமல் இருக்கவும் ஒரு வாய்ப்பு உள்ளது. அவர்கள் அந்த ஆலோசனையை பின்பற்ற வேண்டாம் என்று முடிவு செய்தனர்" என்று எஸ். ஜெய்சங்கர் கூறுவதை அந்தச் சந்திப்பின் காணொளியில் காணலாம்.
வெளியுறவு அமைச்சரின் இந்த அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர்கள் பகிர்ந்து, அது குறித்து கேள்விகளை எழுப்பியது மட்டுமல்லாமல், பலர் தங்களது சமூக ஊடகப் பக்கங்களிலும் அதனைப் பகிர்ந்து கொண்டனர்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கையில் "பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டன" என்று இந்தியா கூறியிருந்தது.
அதனையடுத்து, தாக்குதலின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு செய்தியை அனுப்பியதன் மூலம், இந்தியா குறிவைக்க விரும்பியவர்கள் தங்களது மறைவிடங்களை விட்டு வெளியேறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் தற்போது குற்றம் சாட்டுகிறார்கள்.
எஸ். ஜெய்சங்கரின் கருத்தால் ஏற்பட்ட சலசலப்புக்குப் பிறகு, இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) அதற்கு விளக்கமளித்தது.
"மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கருத்து தவறாக பொருள் கொள்ளப்படுகிறது. சமூக ஊடகங்களில் கூறப்படும் இதுபோன்ற கூற்றுகளை பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்புக் குழு மறுத்துள்ளது" என்று சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிஐபியின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு பதிவிட்டது.
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, ராகுல் காந்தியின் எக்ஸ் தளப் பதிவு முற்றிலும் தவறானது மற்றும் ஆபத்தானது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கூறினார்.
"இது உண்மையைத் திரித்து, நமது ஆயுதப் படைகளை அவதூறு செய்வதற்காக உண்மைகளைத் தவறாக சித்தரிக்கிறது..." என்று அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாஜக தலைவர் ஷாஜாத் பூனாவாலாவும் எஸ். ஜெய்சங்கருக்கு ஆதரவளிக்கும் விதமாக, "ராகுல் காந்தியும் காங்கிரஸும் போலிச் செய்திகளின் தொழிற்சாலை. அவர்கள் போலிச் செய்திகளின் தாய். காங்கிரஸ் கட்சி இதுபோன்ற பொய்யைப் பரப்புவது இது முதல் முறையல்ல, இதைப் பாகிஸ்தான் பயன்படுத்தலாம்" என்று கூறினார்.
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கருத்து வெளியிடப்பட்ட 'சூழல்' என்ன என்பது குறித்து பாஜகவோ அல்லது அக்கட்சியின் தலைவர்களோ வெளிப்படையாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
"இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நேரம் எது, என வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியது பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் அது முன்னதாகவே சொல்லப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் தாக்குதல் நடந்த நேரத்தில் தான் அது சொல்லப்பட்டிருக்கும், அதுதான் என் யூகம்" என்று பிபிசி செய்தியாளர் சந்தன் குமார் ஜஜ்வாரேவிடம் இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஷஷாங்க் கூறினார்.
"உண்மையில் இது ஒரு அணுசக்தி நாட்டிடமிருந்து மற்றொரு அணுசக்தி நாட்டுக்கு அனுப்பப்பட்ட தகவல். மேலும் நாங்கள் பயங்கரவாத மறைவிடங்களை குறிவைக்கிறோம் , நீங்கள் இதிலிருந்து விலகி இருங்கள் என்பதும் முக்கியமானது" என்று ஷஷாங்க் விவரிக்கிறார்.
இதுகுறித்து பேசிய பாதுகாப்பு நிபுணர் கமர் அகா, "இதுபோன்ற குற்றச்சாட்டுகளும் எதிர் குற்றச்சாட்டுகளும் தொடரும். தற்போது எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது, அரசாங்கம் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு