டாஸ்மாக் வழக்கு மேல்முறையீடு: நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..!!
Top Tamil News May 21, 2025 10:48 AM

தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் மே 22-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுவதாகவும், மதுபான ஆலைகள் மற்றும் டாஸ்மாக் நிறுவனம் கூட்டு சேர்ந்து பொய்யான கணக்குகள் மூலம் கோடிக்கணக்கில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், அண்மையில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

இந்தச் சோதனையில், டாஸ்மாக்கில் ₹1000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:

இருப்பினும், இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில், பெண் அதிகாரிகளையும் ஊழியர்களையும் கேடயமாகப் பயன்படுத்தி அரசு வழக்குகள் தொடர்ந்திருக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

தமிழக அரசு மேல்முறையீடு:

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும், குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறைக்கு முன்பாகவே பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றப் பதிவாளர், இந்த வழக்கு மே 22-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.