துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்! அவர்களின் பின்னணி என்ன ?
Newstm Tamil May 21, 2025 10:48 AM

‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை 3,77,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களுடன் நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ராவை இன்ஸ்டாகிராமில், 1,32,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்கிறார்கள்.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவருடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த 33 வயதான ஜோதி மல்ஹோத்ரா, இந்திய ராணுவத் தகவல்களைப் பாகிஸ்தானுடன் பகிர்ந்து வந்துள்ளார்.   அவரை தொடர்ந்து உளவுத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ள ஜோதியின் மொபைல் போன் மற்றும் லேப்டாப்பில் சந்தேகத்துக்குரிய தகவல்கள் இருந்ததாகக் கூறியுள்ள காவல்துறை, அவரை தங்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

அதேபோல், ஹரியானாவை  சேர்ந்த  25 வயதான தேவேந்திர சிங் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளார்.

அடுத்ததாக, பட்டியாலாவில் உள்ள கால்சா கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்கும் 25 வயது மாணவரான தேவேந்திர சிங், ஃபேஸ்புக்கில் துப்பாக்கிகளின் புகைப்படங்களை பதிவேற்றியதற்காக கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, கடந்த நவம்பரில் பாகிஸ்தானுக்குச் சென்று, பாட்டியாலாவில் உள்ள இந்திய ராணுவ முகாமின் புகைப்படங்கள் உட்பட  முக்கியமான தகவல்களைப் பாகிஸ்தானின் ISI-யின் அதிகாரிகளுக்குக் கொடுத்தது தெரியவந்துள்ளது.

இதே போல், 24 வயதான நௌமான் இலாஹி, பாகிஸ்தான் பயங்கரவாதி இக்பாலுக்கு முக்கியமான தகவல்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI உடன் தொடர்பில் இருந்ததாகவும், உளவு சொல்வதற்காக, தனது மைத்துனரின் வங்கிக் கணக்கில், பாகிஸ்தானில் இருந்து பணம் பெற்று வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், கடந்த நான்கு மாதங்களாக ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில், பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார்.

மேலும், உத்தரப் பிரதேசத்தின் ராம்பூரில் வசிக்கும் தொழிலதிபரான ஷஹ்ஸத் வஹாப், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளார். பல முறை பாகிஸ்தானுக்குச் சென்று வந்துள்ள இவர்  அழகுசாதனப் பொருட்கள், துணிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார் என்றும் கூறப் படுகிறது.

தேசியப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களைப்  பாகிஸ்தான் ISI அதிகாரிகளுக்கு வழங்கி குற்றச்சாட்டில் தற்போது கைது செய்யப் பட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பிய 23 வயதான அர்மான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தானே உருவாக்கிய மொபைல் செயலி மூலம் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த முகமது முர்தசா அலி என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளார். அவரிடமிருந்து நான்கு மொபைல் போன்கள் மற்றும் மூன்று சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

இவர்களுடன்  கசாலா மற்றும் யாமின் முகமது என அடையாளம் காணப்பட்ட மேலும் இருவர் பஞ்சாபில் இதேபோன்ற உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க இளைஞர்களைத் தங்கள் உளவாளிகளாக மாற்றும் முயற்சியில் நீண்ட காலமாகவே பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை என இருநாடுகளுக்கும் இடையே போர் சூழல் அதிகரித்துள்ள நிலையில், உளவாளிகள் கைது நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.