திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் சாய ஆலையில் சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 2 பேர் விஷவாயு தாக்கி இறந்தனர். 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்க சாய ஆலை நிறுவனம் ஒப்பதல் அளித்துள்ளது. வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் அந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் தனியாருக்கு சொந்தமான சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ள சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய திருப்பூர் சுண்டமேடு பகுதியை சேர்ந்த சரவணன் (31), வேணுகோபால் (30) மற்றும் முத்துக்குமார், ஹரிகிருஷ்ணன், சின்னச்சாமி ஆகிய 5 பேர் சென்றனர். அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொட்டிக்குள் இறங்கியபோது அவர்களை விஷவாயு தாக்கியது. இதில் 5 பேரும் தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர்.
இதை பார்த்து தொட்டிக்கு மேலே இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தொட்டிக்குள் விழுந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் சரவணன், வேணுகோபால் ஆகியோர் உயிரிழந்தனர்மேலும் மயக்க நிலையில் இருந்த முத்துக்குமார், ஹரிகிருஷ்ணன், சின்னச்சாமி ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடந்த சாயஆலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ், போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.