ஐபிஎல் 2025 தொடரின் கடைசி போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில், 14 வயதான சிறுவன் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக விளையாடி, 33 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். இப்போட்டி மூலம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளது.
போட்டி முடிந்ததும், இரு அணியினரும் கைகுலுக்கி சந்தித்து வாழ்த்து பரிமாறிக் கொண்டனர். அப்போது, வைபவ் சூரியவன்ஷி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கேவின் முக்கிய வீரருமான எம்.எஸ். தோனியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இந்த நெகிழ்வூட்டும் தருணம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மூத்தோர்களிடம் மரியாதை செலுத்தும் வைபவின் பாரம்பரிய நெறிமுறை உணர்வும், பணிவும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. “வயதில் சிறியவனாக இருந்தாலும் மதிப்பில் பெரியவனாக இருக்கிறார்” என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். மேலும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் எனும் நம்பிக்கையை வைபவ் தனது செயலால் உருவாக்கியுள்ளார் என்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.