தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ரவி மோகனுக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சமீபமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார். ஆனால் இதை தான் எதிர்பார்க்கவில்லை என ஆர்த்தி கூறினார்.
அதன்பின்னர் இருவரும் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விவாகரத்திற்கு இருவரும் விண்ணப்பித்த நிலையில், கெனிஷாவுடன் ரவி மோகன் பொது இடங்களில் சுற்றி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்றது.விசாரணையின்போது, 'ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும். சேர்ந்து வாழ கோரிய ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்' என, ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவாகரத்திற்கு பிறகான ஜீவனாம்சமாக மாதம் ரூ.40 லட்சம் ரவி மோகன் வழங்க வேண்டும் என ஆர்த்தி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜூன் 12க்குள் ரவி மோகன் பதிலளிக்க குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.