தமிழகம் முழுவதும் சமீப காலங்களாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், மதுரையில் வாகன சோதனையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆந்திராவில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் உத்தரவின் பேரில் தனிப்படைஅமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜோதில்நாயக்கணூர் விலக்கில் பேருந்தில் இருந்து மூட்டைகளுடன் இறங்கிய இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இந்த கடத்தல் தொடர்பாக தாடையம்பட்டியைச் சேர்ந்த செல்வம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து எழுமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவில் கொள்முதல் செய்து இரயில் மூலமாக மதுரைக்கும், மதுரையிலிருந்து பேருந்து மூலம் ஜோதில்நாயக்கணூர் பகுதிக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.