தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவருக்கும், ஆலங்குளம் அருகே கடங்கநேரியைச் சேர்ந்த இலக்கியாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுடைய மகள் ஜமித்ரா (5). கோடை விடுமுறையையொட்டி, இலக்கியா தனது பெற்றோரின் ஊரான கடங்கநேரிக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், ஊருக்கு மேற்கே கைக்கொண்டார் அய்யனார் கோவில் விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பம் சூறைக்காற்றில் சாய்ந்து விழுந்தது. அந்த மின்கம்பத்தின் மின்கம்பிகளானது இலக்கியா வீட்டின் முன்புள்ள இரும்பு மின்கம்பத்தில் உரசியவாறு இருந்தது.
இதனை அறியாமல் அந்த பகுதியில் விளையாட சென்ற சிறுமி ஜமித்ரா இரும்பு மின்கம்பத்தை தொட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாள். இதில் பலத்த காயமடைந்த ஜமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.
ஜமித்ராவுடன் அங்கு விளையாட வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரதிகா (9) என்ற சிறுமி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடியவாறு கிடந்தாள். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து சிறுமி பிரதிகாவை மீட்டு சிகிச்சைக்காக ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரதிகாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிரதிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த சிறுமி ஜமித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.