அமெரிக்க அதிபருடன் பயணிக்கும் பெரும்பாலான பத்திரிகையாளர்கள், அந்த ஏர் ஃபோர்ஸ் ஒன் ஜெட் விமானத்தின் உட்புறத்தை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது.
விமானத்தின் பின்புறத்தில் உள்ள படிகளில் ஏறி, சற்று திரும்பியதும் மூலையிலேயே பத்திரிகையாளர் அறை இருக்கிறது.
விமானத்தின் முன்புறத்தில் அதிபரின் அறை உள்ளது. அங்கு செல்வது என்றால், அடுத்த அறையில் உள்ள ஆயுதமேந்திய ரகசிய சேவை ஏஜென்ட்களின்அனுமதி பெற வேண்டியிருக்கும்.
இந்த வாரம் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட போது, பிரபலமான ஏர் ஃபோர்ஸ் ஒன் ஜெட் விமானத்தின் எதிர்காலம் தொடர்பான விவாதங்கள் சர்வதேச அளவில் பேசுபொருளாகின. ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் சீன் ஹானிட்டிக்கு இருக்கை வசதியில் முன்னுரிமையும், விமானத்தில் நேர்காணல் நடத்த அதிபரை அணுகும் வசதியும் கொடுக்கப்பட்டது.
ஆனால் அவரைத் தவிர அந்த விமானத்தில் பயணித்த பத்திரிகையாளர் குழுவின் எஞ்சிய அனைவரும் விமானத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கான சிறிய பகுதியிலேயே இருந்தோம்.
இந்த சூறாவளி சுற்றுப்பயணத்தில் மூன்று இரவுகளில் மூன்று நாடுகளுக்குச் சென்றது என்பது ஏறக்குறைய உலகின் பாதியை சுற்றியதற்கு சமமானது என்று சொல்லலாம்.
அதிபரின் சிறப்பு ஜெட் விமானம் பயணம் செய்வதற்கு ஒரு நல்ல விமானம். குளியலறை கொண்ட இந்த ஜெட் விமானத்தில் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டிருக்கும் உணவுமேசையும் உண்டு. அதில், அதிபரின் கையொப்பம் கொண்ட ஏர் ஃபோர்ஸ் ஒன்-பிராண்டட் M&Ms பொட்டலங்களில் திண்பண்டங்களும் வைக்கப்பட்டிருக்கும்.
கேபினில் ஒரு ஜோடி தொலைக்காட்சி மானிட்டர்கள் உள்ளன. பொதுவாக, அதிபருக்கு விருப்பமான செய்தி சேனலை பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும். ஜோ பைடனின் பதவிக் காலத்தில் சி.என்.என் என்றால், டிரம்பிற்கு ஃபாக்ஸ் நியூஸ் பிடித்தமானது. சில சமயங்களில், கால்பந்து விளையாட்டு அல்லது பிற விளையாட்டு நிகழ்வுகளும் ஒளிபரப்பாகும்.
நீண்ட தொலைவு பயணங்களுக்கு விமானத்தில் உள்ள சமையலறையில் உணவு தயாரிக்கப்படும். அமெரிக்க அதிபருக்கு என பிரத்யேகமாக ஆடம்பரமான உணவு வகைகள் தயாரிக்கப்படும். குறுகிய தூர பயணங்களுக்கு பொதுவாக ஏற்கனவே பொட்டலமிடப்பட்ட உணவுகள் வழங்கப்படும்.
மேலே கூறியவை எல்லாம் வழக்கமான நடைமுறை. ஆனால் இன்னும் சில காலத்தில், பிரபலமான இந்த ஜெட் விமானத்தின் உட்புறத்தில் மறுசீரமைப்பு செய்யப்படக்கூடும்.
ஏனெனில், கத்தார் அரச குடும்பத்தனர் பரிசாக வழங்கியிருக்கும் "palace in the sky" எனும் போயிங் ஜம்போ ஜெட் விமானத்தை டிரம்ப் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக, "ஏர் ஃபோர்ஸ் ஒன்" என்பது ஒரு வானொலி அழைப்பு அடையாளம் ஆகும். அமெரிக்க அதிபர் பயணிக்கும் விமானப்படை விமானங்களுக்கு இந்தப் பெயர் பிரத்யேகமானது.
1960களில் லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன் ஆஸ்டினில் இருந்து தனது டெக்சாஸ் பண்ணைக்கு எடுத்துச் சென்ற சிறிய விமானத்தின் பெயரும் ஏர் ஃபோர்ஸ் ஒன் ஆகும்.
பெரும்பாலானவர்களுக்கு, ஏர் ஃபோர்ஸ் ஒன் என்றால், நீலம் மற்றும் வெள்ளை வண்ணப்பூச்சு கொண்ட போயிங் 747-200b என்ற விமானமே நினைவுக்கு வரும். இந்த விமானத்திற்கான வண்ணத் திட்டம் 1962 இல் அமெரிக்காவின் முதல் பெண்மணி (அதிபரின் மனைவி) ஜாக்கி கென்னடியால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தற்போது விமானப்படையின் பயணிகள் விமானங்களில், 1990 முதல் பயன்பாட்டில் உள்ள 747 விமானங்கள் இரண்டு உள்ளன. இவை இரண்டின் விமான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை அவ்வப்போது மேம்படுத்தப்பட்டிருந்தாலும், விமான சட்டகம் மற்றும் இயந்திரங்களை பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரித்து வருகின்றன. விமானங்கள் பழையதாகிவிட்டதால் அவற்றின் வயது வெளிப்படையாக தெரிகிறது.
இதனால், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எரிச்சலடைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், அதிபராவதற்கு முன்னதாகவே, சொந்தமாக ஜெட் விமானம் மட்டுமல்ல, விமான நிறுவனத்தை சொந்தமாக வைத்திருந்த ஒரே அதிபர் டிரம்ப் மட்டுமே.
"நான் இப்போது 42 ஆண்டுகள் பழமையான போயிங்கில் பயணிக்கிறேன்," என்று அபுதாபியில் நடந்த தொழில்துறை மாநாட்டில் பேசும்போது தனது விமானத்தின் வயதை டிரம்ப் மிகைப்படுத்திப் பேசினார். "ஆனால் புதியவை வருகின்றன…" என்றும் டிரம்ப் சொன்னார்.
புதியவை வந்தாலும், அவை வரும் வேகம் டிரம்பிற்கு போதாது, அவற்றை அவரால் பயன்படுத்த முடியாது என்றே சொல்லலாம். தனது முதல் பதவிக் காலத்தில், அமெரிக்க அதிபருக்காக போயிங் தயாரித்த நவீன விமானத்தை அவர் புகழ்ந்தார், அதை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தானே, தனக்குப் பிடித்தமான நிறங்களைத் தேர்ந்தெடுத்தார், சிவப்பு-வெள்ளை-நீல நிற அலங்காரத்தில் இருந்த பழைய வடிவமைப்பை அகற்றினார். அந்த ஜெட் விமானத்தின் மாதிரியை ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பெருமையுடன் காட்சிப்படுத்தினார்.
அந்த விமானம் 2021 ஆம் ஆண்டுக்குள் வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவை டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்கு முன்னதாக வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம், தாமதம் மற்றும் விமானத்தின் மதிப்பிடப்பட்ட $4 பில்லியன் கட்டுமான செலவு அதிகரித்தாகும்.
விமானம் கிடைப்பதில் ஏற்படும் தாமதமான செயல்முறையை விரைவுபடுத்தும் பணியை தொழில்நுட்ப வல்லுநரான எலோன் மஸ்க்கிடம் டிரம்ப் ஒப்படைத்துள்ளார். அதுமட்டுமல்ல, இதுபோன்ற காலாவதியான விமானத்தில் பயணிக்க டிரம்ப் வெட்கப்படுவதாகவும் வருத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதனால்தான் அதிபர் தனது விமானப் போக்குவரத்து பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பாரசீக வளைகுடா நாடான கத்தாரின் பரிசை ஏற்றுக் கொள்ள விரும்புகிறார்.
கத்தார் $400 மில்லியன் மதிப்புள்ள 747-8 என்ற ஆடம்பரமான விமானத்தை பரிசாக வழங்குவதான செய்தி கடந்த வாரம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது, ஆனால் பல மாதங்களாகவே இந்த பரிசு கொடுக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன.
டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு, பிப்ரவரி நடுப்பகுதியில், பரிசாக வழங்கப்படவிருக்கும் விமானத்தை ரகசியமாகப் பார்வையிட்டார்.
கத்தாரிடம் விமானத்தை பரிசாக பெறுவதற்கு விமர்சகர்கள் மட்டுமல்ல, டிரம்ப் ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விமர்சனங்களையும் தாண்டி, வெளிநாட்டு 747 ஐ அமெரிக்க அதிபரின் பயன்பாட்டிற்காக மாற்றுவதில் பல தொழில்நுட்ப சவால்களும் உள்ளன.
அதிபருக்கான விமானம் என்றால், அது விமானத்திலேயே எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டதாக மாற்றப்பட வேண்டும் மற்றும் அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டு மறுசீரமைக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபர்களுக்கான தற்போதைய விமானங்கள், அணு வெடிப்பின் மின்காந்த அலைகளை தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மறுசீரமைப்பு செயல்முறைக்கு எவ்வளவு காலம் எடுக்கும்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் ஏரோடைனமிக் அட்வைசரியின் நிர்வாக இயக்குநரான விமான ஆய்வாளர் ரிச்சர்ட் அபுலாஃபியா, குறைந்தபட்சம் 2030, அதாவது பல ஆண்டுகள் ஆகும் என்று சொல்கிறார்.
"ஜெட் விமானம் 13 ஆண்டுகளாக ஆபத்தான இடத்தில் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருப்பதாக அவர்கள் கருத வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "அதாவது விமானத்தை பிரிக்க அதிக காலம் எடுக்கும். விமானத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
விமானத்தின் புதிய அமைப்புகளை இயக்க கூடுதல் சக்தி தேவைப்படும், அத்துடன் அதன் உட்புறத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கலாம். முன்னதாகவே வடிவமைக்கப்பட்ட கத்தாரின் "palace in the sky" பரிசு விமானத்தில் பத்திரிகையாளர்களுக்கான அறை இல்லாதிருக்கலாம்.
மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (Center for Strategic and International Studies) பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் மூத்த ஆலோசகரான மார்க் கேன்சியன், இதுபோன்ற மறுசீரமைப்பு செலவுகள் $1 பில்லியன் ஆக உயரக்கூடும் என்று தெரிவிக்கிறார்.
இருப்பினும், டிரம்ப் விரும்பினால், பாதுகாப்பு மாற்றங்களில் சிலவற்றை அல்லது அனைத்தையும் தள்ளுபடி செய்யலாம் என்றும் அவர் கூறுகிறார். "அவர் தான் நாட்டின் அதிபர்," என்று மார்க் கேன்சியன் கூறினார்.
விமானப்படை அதன் தற்போதைய 747 விமானத்தின் சேவையை நிறுத்தும்போது, பல தசாப்தங்களாக அமெரிக்க வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்த இந்த விமானம் ஓய்வுக்கு அனுப்பப்படும்.
1995ம் ஆண்டில் யிட்சாக் ராபினின் இறுதிச் சடங்கிற்காக அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜிம்மி கார்ட்டர் மற்றும் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் ஆகியோருடன் அதிபர் பில் கிளிண்டன் இஸ்ரேலுக்கு பயணித்த விமானம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான 9/11 தாக்குதலுக்குப் பிறகு, ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் வானில் சில மணிநேரங்கள் பறந்துக் கொண்டிருந்தார். அவர் தரையிறங்குவது பாதுகாப்பானது என்று அவரது பாதுகாப்புக் குழு தீர்மானிக்கும்வரை வானத்தில் நடுவில் எரிபொருள் நிரப்பியவாறே ஏர் ஃபோர்ஸ் ஒன் வானிலேயே இருந்தது. விமானத்தில் இருந்து தரை இறங்கிய பிறகே அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அமெரிக்க அதிபர்களில் ஆறு பேர் இந்த ஜெட் விமானத்தில் பயணித்துள்ளனர், அமெரிக்கா முழுவதும் மட்டுமல்ல, உலகின் அனைத்து மூலைகளுக்கும் இந்த விமானம் பயணித்துள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு ஜோ பைடனை இந்த விமானம் இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றது.
விமானத்தை ஒரு பிரசார சாதனமாக திறம்பட பயன்படுத்தியவர் டிரம்ப் என்று சொல்லலாம். அவர் விமானநிலையங்களில் அரசியல் பேரணிகளை நடத்துகிறார், தரையிறங்குவதற்கு முன்பு கூடியிருக்கும் மக்களின் முன் குறைந்த வேகத்தில் கடந்து செல்கிறார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை பின்னணியாக வைத்துக் கொண்டு உரையாற்றுகிறார்.
டிரம்பின் சமீபத்திய மத்திய கிழக்கு பயணத்தில், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வான்வெளியில் ஏர் ஃபோர்ஸ் ஒன் பறந்தபோது அதனுடன் இணைந்து, அந்த நாடுகளின் ராணுவப் போர் விமானங்களும் பறந்தன.
வயதானாலும், உயர்ந்த நோக்கத்திற்கு உதவும் ராணுவ விமானம் இது. ஏர் ஃபோர்ஸ் ஒன் உலகில் அமெரிக்க அதிபரின் அதிகாரம் மற்றும் சக்தியின் அடையாளமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது.
"இது ஆடம்பரத்திற்காக மட்டுமே உருவாக்கப்படவில்லை" என்று கூறும் அபுலாஃபியா, "இது ஒரு பறக்கும் கட்டளை மையம் ஆகும். விருந்துகளை நடத்துவதற்காக இல்லை."
(மேக்ஸ் மாட்ஸாவின் கூடுதல் தகவல்களுடன்)
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு