இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மாம்பழங்களை அங்கே சந்தைப்படுத்த அமெரிக்கா மறுத்ததால் இந்திய மாம்பழ ஏற்றுமதியாளர்கள் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர்களிடம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த மாம்பழங்களைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அழுகக்கூடிய பொருட்கள் என்பதாலும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அதிக செலவாகும் என்பதாலும் இந்திய ஏற்றுமதியாளர்கள் அந்த மாம்பழங்களை அழிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, முழுமையாகத் தெரிந்துகொள்ள பிபிசி மாம்பழ ஏற்றுமதியாளர்கள் பலரிடம் பேசியது. தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பாத ஒரு ஏற்றுமதியாளர், அமெரிக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளால் மாம்பழ ஏற்றுமதியாளர்கள் கிட்டத்தட்ட ரூ. 4.2 கோடி மதிப்பிலான இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
நிலைமை எப்படி இருப்பினும் இந்திய காய்கறி மற்றும் பழ ஏற்றுமதியாளர்கள் சங்கம் (WAFA), இதற்குப் பிறகும் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக அமெரிக்காவுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்த சங்கத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர், மாம்பழங்கள் நிராகரிக்கப்பட்ட பிறகும்கூட நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பெட்டிகளில் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் நடந்தது என்ன?மே 8, 9 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து மாம்பழங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அமெரிக்க அதிகாரிகள் அவற்றின் உணவுப் பாதுகாப்பு தரத்தை ஆய்வு செய்த பிறகு மாம்பழங்களை நிராகரித்தனர்.
பிபிசியிடம் பேசிய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட 15 முதல் 17 டன்கள் மதிப்பிலான மாம்பழங்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும், அந்தப் பழங்களை அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்கு எடுத்து வர வேண்டுமெனில் அதற்குக் கூடுதல் செலவாகும் என்பதால் அவை அங்கேயே அழிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ், சான் ஃபிரான்சிஸ்கோ, அட்லான்டா விமான நிலையங்களில் இந்த மாம்பழங்கள் இறக்கி வைக்கப்பட்டன.
அமெரிக்காவுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு, நவி மும்பையில், அமெரிக்க விவசாயத்துறை (USDA) அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் மாம்பழங்களில் உள்ள பூச்சிகள் போன்றவற்றை அழிப்பதற்கும், அதன் தரத்தைச் சீராக வைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் (a process of irradiation) மேற்கொள்ளப்பட்டதாக ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகிறார்.
"இதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கு தரச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், போதுமான ஆவணங்கள் ஏதுமில்லை என்பதைக் காரணமாகக் கூறி, அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட மாம்பழங்களைத் திரும்பிப் பெறுங்கள் அல்லது அழித்துவிடுங்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என்று ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சரக்கு (மாம்பழங்கள்) மேலும் ஏதாவது சேதத்தைச் சந்திப்பதால் ஏற்படும் நஷ்டத்தை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்ளாது என்று அமெரிக்க அதிகாரிகள் அளித்த 'நோட்டீஸில்' குறிப்பிடப்பட்டு இருந்ததாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க உணவுத்துறை அதிகாரி அளித்த தரச் சான்றிதழ் ஏற்றுமதியாளரிடம் இருக்கிறது. ஆனால், மாம்பழங்களை மதிப்பீடு செய்த முறை மீது அமெரிக்க உணவுத்துறை அதிகாரிகளுக்கு சில சந்தேகங்கள் இருப்பதால், அமெரிக்காவில் அந்தச் சான்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"இந்த ஒளிவீச்சு (irradiation) முறை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அதை நாங்கள் செய்தோம். ஆனால், அமெரிக்காவில் இந்த ஒளிவீச்சுக்குப் பிறகு அளிக்கப்பட்ட தரச் சான்றிதழ்களில் பிரச்னைகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்தனர். ஏனெனில், இந்தியாவில் இந்த முறையை நேரில் பார்வையிட்ட அமெரிக்க அதிகாரி இது தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பினார்," என்று மற்றொரு ஏற்றுமதியாளர் தெரிவிக்கிறார்.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தில் (APEDA) பணியாற்றும் பி.பி.சிங் பிபிசியிடம் பேசும்போது, இந்த ஒளிவீச்சு சோதனை, மும்பையில், மகாராஷ்டிர மாநில வேளாண் சந்தை வாரியம் (MSAMB) மற்றும் அமெரிக்க வேளாண் துறையின் விலங்குகள் மற்றும் தாவர ஆரோக்கிய சோதனை சேவை (APHIS) அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்பு மாம்பழங்களைச் சோதனையிட்டபோது அமெரிக்க வேளாண் துறை அதிகாரிகள் அங்கே இருந்தனர். அவர்கள்தான் தரச் சான்றிதழ்களையும் வழங்கினார்கள். மாம்பழ சீசன் (ஏப்ரல்-ஆகஸ்ட்) முடியும் வரை அவர்கள் இங்கேதான் இருப்பார்கள்.
இந்த வாரம் மகாராஷ்டிராவின் MSAMB வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "மாம்பழங்களில் இருக்கும் பிரச்னைகள் என்ன என்பதை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறையிடம் தெரிவிப்பதற்குப் பதிலாக, அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்காவில் உள்ள அவர்களின் மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மாம்பழங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளது.
மாம்பழங்களின் தரத்தைப் பரிசோதிக்கும் ஒளிவீச்சு சோதனை மையங்கள் நவி மும்பையின் வாஷியில் உள்ளது. மேலும் நாஷிக், பெங்களூரு, ஆமதாபாத் போன்ற இடங்களிலும் அமைந்துள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவர், "மகாராஷ்டிர வேளாண் சந்தை வாரியம் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று விசாரணை செய்து வருகிறது. அதோடு, வருங்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது எப்படி என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்," என்று கூறினார்.
இதுதொடர்பாக, வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் ஜித்தின் பிரசாத்தை பிபிசி தொடர்புகொண்டது. அவரின் கருத்து பெறப்பட்டால் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.
"அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ரூ.10 லட்சம் வரை இழப்பைச் சந்தித்தேன்," என்று அமெரிக்காவின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
தம் அடையாளத்தை வெளியிட விரும்பாத அவர், "மும்பை ஒளிவீச்சு சோதனைக்காக வழங்கப்பட்ட சான்றிதழில் ஏதோ பிரச்னை என்று அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும் ஏற்றுமதி செய்யப்பட்ட அனைத்து மாம்பழங்களையும் திரும்பப் பெறுமாறும் வலியுறுத்தினார்கள். ஆனால், அங்கே அமைந்துள்ள பயோ பாதுகாப்பு கழிவு மையத்தில் மாம்பழங்களை அழித்துவிடலாம் என்று ஏற்றுமதியாளர்கள் முடிவு செய்தோம்," என்று கூறினார்.
இருப்பினும், "அமெரிக்காவுக்கும் இதர நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போருக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறிய அவர், இது எளிதில் அழுகக்கூடிய உணவுப் பொருட்கள் உள்பட அனைத்து ஏற்றுமதிப் பொருட்களுக்கும் நடத்தப்படும் வழக்கமான சோதனைதான் இது," என்றும் அவர் விவரித்தார்.
அதேநேரத்தில், பல கட்டங்களில் இந்திய அரசாங்கம் இந்திய ஏற்றுமதியாளர்களைக் கைவிட்டுவிட்டது என்று ஏற்றுமதியாளர்கள் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளனர்.
"எளிதில் கெட்டுப்போகக்கூடிய மாம்பழம் போன்ற பொருட்களால் ஏற்றுமதியாளர்கள் நிறைய நஷ்டமடைகின்றனர். இவர்களின் இழப்புகளை ஈடுகட்ட எந்தவித பாதுகாப்பு அம்சமும் இல்லை. 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு, முழுமையாக நிறுத்தப்பட்டது," என்றும் மேற்கோள் காட்டுகிறார் அவர்.
"விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஆனால், ஏற்றுமதியாளர்களுக்கு அவ்வாறு ஏதும் இல்லை. அதேபோன்று, ஏற்றுமதியில் 'லாஜிஸ்டிக்ஸில்' ஏற்படும் பல பிரச்னைகள் கவனிக்கப்படுவது இல்லை," என்றும் அவர் கூறுகிறார்.
"ஏற்றுமதியாளர்களுக்கு விமானக் கட்டணங்களிலும் எந்தச் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. இந்த சீசனின்போது விமான நிறுவனங்கள் கட்டணங்களை அதிகரிக்கின்றன. சரியான நேரத்துக்குப் பொருட்கள் சரியான இடத்துக்குச் செல்லவில்லை என்றாலும்கூட, முழுமையான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது," என்றும் அவர் கூறினார்.
"விமானம் மூலம் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளுக்கான ஜி.எஸ்.டி. கட்டணம்தான் இதில் மிகப்பெரிய பிரச்னை. அமெரிக்காவில் மாம்பழங்கள் ரூ. 2000க்கு விற்கப்படுகிறது என்றால், அதில் விமானப் போக்குவரத்து செலவு மட்டுமே ரூ.1200 என்ற அளவுக்கு இருக்கிறது. விமான சேவைக்கு இந்திய அரசு 18% ஜி.எஸ்.டி.யை வசூலிக்கிறது. இந்தக் கட்டணத்தை அரசு திரும்பிப் பெற இயலும். ஆனால், அதைத் திரும்பப் பெற இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது," என்றும் அவர் கூறினார்.
"ஜி.எஸ்.டி. வரியானது உள்நாட்டில் பொதுவாக சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படுகிறது. ஆனால், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கும் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதால் ஏற்றுமதியாளர்களின் நிறைய பணம் இதில் சிக்கிக் கொள்கிறது," என்று கூறுகிறார் அவர்.
இந்தப் பிரச்னை மட்டுமின்றி, ஏற்றுமதியாளர்கள் தற்போது மற்ற சில பிரச்னைகளையும் சந்தித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாம்பழம் ஏற்றுமதிக்காக இங்கே வரும். இது ஜூன் 5 வரை தொடரும். இந்தக் காலகட்டத்தில் அல்போன்சோ, கேசர், பங்கனப்பள்ளி, லங்கரா, துஷேரி உள்ளிட்ட 10-12 மாம்பழ வகைகள் ஏற்றுமதி செய்யப்படும்.
"ரத்தினகிரி மற்றும் கொங்கன் பகுதிகளில் அல்போன்சோ மாம்பழங்கள் அதிகமாக வளரும். ஆனால் மழை காரணமாக அதன் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது," என்று அவர் தெரிவிக்கிறார்.
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். மேலும் பருவநிலையும் மோசமாக உள்ளது. வழக்கத்துக்கு மாறாக மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாகப் பெய்யும் மழை காரணமாகத் தரமான மாம்பழங்களைப் பெறுவது கடினமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தமட்டில், மகாராஷ்டிராவில் மாம்பழ சீசனானது மே மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரம் வரை நீடிக்கும். ஆனால் நீடித்த மோசமான வானிலை காரணமாக மாம்பழ சீசன் மே 20ஆம் தேதியுடனேயே முடிந்துவிட்டது என்றும், அதனால் தரமான மாம்பழங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் நீடிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
மாம்பழ ஏற்றுமதியில், ஏற்றுமதியாளர்கள் மட்டுமின்றி, 50 முதல் 60 ஆயிரம் விவசாயிகளின் பங்கும் உள்ளது. இதற்காக முறையாகப் பதிவும் செய்துள்ளனர். ஏற்றுமதியாளர்கள் இவர்களிடம் இருந்து மாம்பழங்களை வாங்குவார்கள். இந்த விவசாயிகளும் தற்போது நீடிக்கும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023-24 நிதி ஆண்டில், இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அறிவிப்பின்படி, இந்தியா மொத்தமாக 48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான, 27,330 மெட்ரிக் டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
குறிப்பிடப்பட்ட இந்த நிதி ஆண்டில் 2.43 மெட்ரிக் டன் மாம்பழங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2022-23ஆம் நிதி ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்களைக் காட்டிலும் 19% அதிகம்.
மாம்பழ ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் இந்தியா, அமெரிக்கா இடையே 2007ஆம் ஆண்டு கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அமெரிக்கா மட்டுமின்றி, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் இந்தியா மாம்பழங்களை அனுப்புகிறது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடனான பரஸ்பர வரிகளை அறிவித்தார். 90 நாட்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டாலும்கூட, டிரம்பின் வரி அறிவிப்பு காரணமாக மாம்பழ ஏற்றுமதியும் பாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு