BBC Tamil May 28, 2025 01:48 AM
Shreya Mishra Reddy பல இந்தியர்களின் முதல் தேர்வு ஹார்வர்டுதான் என்கிறார் ஷ்ரேயா மிஸ்ரா ரெட்டி

2023இல் ஷ்ரேயா மிஸ்ரா ரெட்டிக்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தபோது, அவரது வீடே அதை கோலாகலமாய் கொண்டாடியது. பெற்றோரும் குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

'ஒவ்வொரு இந்திய மாணவரும் சேர விரும்பும் பல்கலைக்கழகம் ஹார்வர்டு ' என்று ஷ்ரேயா ரெட்டி பிபிசியிடம் கூறுகிறார்.

ஷ்ரேயா ரெட்டி தனது பட்டப்படிப்பை கிட்டத்தட்ட முடிக்கும் நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் கெட்ட செய்தி வந்தது

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை வெளிநாட்டு மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த முடிவுக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கில், டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையை அமெரிக்க நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 'சட்டத்திற்கு இணங்கத் தவறிவிட்டது' என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

"என் குடும்பத்தினருக்கு இதையெல்லாம் புரிந்துகொள்வது மிகவும் சிரமமானது. அவர்கள் இந்த விசயத்தின் தீவிரத்தை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை" என்கிறார் ஷ்ரேயா ரெட்டி.

Getty Images ஆண்டுதோறும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஹார்வர்டில் படிக்க வருகிறார்கள் கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் எதிர்காலம்

ஹார்வர்டில் படிக்கும் சுமார் 6,800 வெளிநாட்டு மாணவர்களில் ஷ்ரேயா ரெட்டியும் ஒருவர். ஆண்டுதோறும் ஹார்வர்டில் தோராயமாக 27 சதவீத மாணவர்கள் வெளிநாட்டிலிருந்து வருகிறார்கள். பல்கலைக்கழகத்தின் முக்கிய வருமாய் ஆதாரமாக உள்ளது இந்த மாணவர்கள் தான். வெளிநாட்டு மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷ்ரேயா ரெட்டி உட்பட 700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அனைவரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை 'சட்டவிரோதம்' என்று ஹார்வர்ட் கூறியுள்ளது. மேலும், டிரம்ப் நிர்வாகம், தனது முடிவிற்காக சட்டப்பூர்வ சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கிடையில், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது இந்த கோடையில் புதிதாக சேரலாம் என காத்திருப்பவர்கள் அல்லது இப்போது கல்லூரியில் படிப்பவர்கள் என எந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பிரச்னை ஒன்றும் மாறவில்லை. தற்போது இங்கு படித்து வருபவர்களின் எதிர்கால வேலைகள், விசா பெறுவதைப் பொறுத்தது.

Getty Images

ஹார்வர்டில் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் தங்கவேண்டும் என்றாலும், தங்கள் விசாவைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், பிற அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக சேர வேண்டும்.

"ஹார்வர்ட் எங்களுக்கு ஆதரவளிக்கும் என்றும், ஏதாவது தீர்வு கிடைக்கும் என்றும் நம்புகிறேன்" என்கிறார் ஷ்ரேயா ரெட்டி.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் 'வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அறிஞர்களை வரவேற்கும் திறனைப் பேணுவதற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக' தெரிவித்துள்ளது. "140 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அறிஞர்களை வழிநடத்தும் ஹார்வர்டின் திறனைப் பராமரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மேலும், பல்கலையையும் இந்த நாட்டையும் - அளவிட முடியாத அளவுக்கு வளப்படுத்துகிறோம்," என்று பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்கம்

ஹார்வர்டுக்கு எதிரான டிரம்ப் அரசின் நடவடிக்கை அமெரிக்காவில் வசிக்கும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அளவிலான வெளிநாட்டு மாணவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்காவில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஹார்வர்ட் உட்பட பல கல்வி அமைப்புகள் விசாரணையை எதிர்கொள்கின்றன.

இந்த கல்வி அமைப்புகளின் அங்கீகார செயல்முறையை மேம்படுத்தவும், அவை செயல்படும் முறையை மறுவடிவமைப்பு செய்யவும் அமெரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதை தடை செய்வதாக டிரம்ப் அரசு அச்சுறுத்தல்களை வெளியிட்டது. மாணவர் சேர்க்கை, ஊழியர்கள் நியமனம் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளை மாற்றுமாறு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுப்பிய நடைமுறை மாற்றங்களில் எதையும் ஏற்றுக்கொள்ள பல்கலை நிர்வாகம் மறுத்துவிட்டது.

அரசின் அறிவுறுத்தலை ஹார்வர்ட் ஏற்றுக் கொள்ளாததால், சுமார் மூன்று பில்லியன் டாலர் அளவிலான மானியங்களை அரசாங்கம் நிறுத்தியது. இதை ஆட்சேபித்து ஹார்வர்டு பல்கலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Getty Images அமெரிக்க கல்லூரிகளில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது

'யூத எதிர்ப்பு' மற்றும் 'வன்முறையை ஊக்குவித்தல்' காரணமாக ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்படுவதாக, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோம் கூறியுள்ளார்.

வெளிநாட்டு மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் சீன மாணவி கேட் ஸி, டிரம்ப் நிர்வாகத்தின் முடிவால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

"வெளிநாட்டு மாணாக்கர்களின் சேர்க்கைக்குத் தடை விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலை நான் கிட்டத்தட்ட மறந்துவிட்ட நிலையில், அது வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது," என்று கேட் ஷி, பிபிசியிடம் கூறினார்.

இருந்தபோதிலும், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க தான் ஏற்கனவே தயாராகி வருவதாக கேட் கூறினார். அமெரிக்காவில் வாழ்வது குறித்து தொழில்முறை ஆலோசனைகளை கடந்த சில வாரங்களாக பெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார்.

அவருக்குக் கிடைத்த ஆலோசனைகள், மிகவும் செலவு பிடிக்கக் கூடியதாகவும், சிக்கலானதாகவும் இருக்கிறது என்று கேட் சொல்கிறார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தற்போதைய மாணவர்களை தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், அதற்காக சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் வெளியூரில் இருந்து வந்த அனைத்து மாணவர்களின் பதிவுகளையும் பகிர்ந்து கொள்வதும் அநத நிபந்தனைகளில் ஒன்றாக உள்ளது.

ஹார்வர்ட் வளாகத்தில் வசிக்காத மாணவர்களின் 'சட்டவிரோத' மற்றும் 'ஆபத்தான அல்லது வன்முறை' நடவடிக்கைகள் குறித்த மின்னணு பதிவுகள், வீடியோ, ஆடியோவை ஒப்படைக்க வேண்டும் என்று ஹார்வார்ட் பல்கலைகழகத்திடம் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் நோம் கோரியுள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் சீனாவையும் குறிவைத்தது. "சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக" ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மீது நோம் குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய சீனா, அமெரிக்கா கல்வியை "அரசியல்மயமாக்குகிறது" என்று கடந்த வெள்ளிக்கிழமை 2025 மே 23) குற்றம் சாட்டியது.

இந்த நடவடிக்கை அமெரிக்காவின் சர்வதேச பிம்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சீனா கூறியது. இந்தத் தடையை விரைவில் நீக்குமாறு அமெரிக்காவிடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

Getty Images வெளிநாட்டு மாணவர்கள் இல்லாமல், ஹார்வர்ட் இனி ஹார்வர்டாக இருக்காது

20 வயதான அப்துல்லா ஷாஹித் சியால் என்ற பாகிஸ்தானிய மாணவர், ஹார்வர்டில் படிக்கிறார், அவர் வெளிப்படையாகவே மாணவர்களின் நலனுக்காக பணி செய்பவர் ஆவார்.

"இதுபோன்ற பிரச்னைகளை எல்லாம் தாங்கிக் கொள்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை" என்று சியால் பிபிசியிடம் கூறினார்.

2023 ஆம் ஆண்டில், பாகிஸ்தானிலிருந்து இரண்டு மாணவர்கள் மட்டுமே ஹார்வர்டுக்கு கல்வி கற்க வந்தனர். அவர்களில் ஒருவரான சியால், கணிதம் மற்றும் பொருளாதாரம் படித்து வருகிறார்.

அவரது குடும்பத்திலிருந்து வெளிநாட்டில் படிக்கும் முதல் நபர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி கற்க ஹார்வர்டில் தனக்கு இடம் கிடைத்தது "மிகப்பெரிய" தருணம் என்று சியால் கூறுகிறார்.

தற்போதைய "அபத்தமான மற்றும் மனிதாபிமானமற்ற" சூழ்நிலை நிலவுவதாக சியால் விவரிக்கிறார்.

வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க கல்லூரிகளுக்கு வருவதற்குக் காரணம், அவர்களுக்கு இங்கு கிடைக்கும் அன்பான வரவேற்பு மற்றும் அங்கு கிடைக்கும் வாய்ப்புகள் தான் என ஷ்ரேயா ரெட்டியும் சியாலும் ஒன்றுபோல கூறுகின்றனர்.

"வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறோம். இப்படிக் கற்றுக்கொள்வதன் மதிப்பு அனைவருக்கும் தெரியும்" என்று ஷ்ரேயா ரெட்டி கூறுகிறார்.

ஆனால் அமெரிக்க கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்களுக்கான பழைய சூழல் இப்போது இல்லை என்று சியால் கூறுகிறார். டிரம்ப் நிர்வாகம் நூற்றுக்கணக்கான மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது, மேலும் பல கல்லூரிகளின் மாணாக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்போது அமெரிக்காவில், வெளிநாட்டு மாணவர்களிடையே அச்சமும், நிச்சயமற்ற சூழலும் நிலவுகிறது.

ஹார்வர்டில் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை, நிலைமையை மோசமாக்கியுள்ளது. அமெரிக்காவிற்குள் மீண்டும் அனுமதி கிடைக்காதோ என்ற அச்சத்தால், இந்த கோடை விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்லும் முடிவை மாற்றிக் கொண்டதாக தென் கொரிய மாணவி ஒருவர், கூறினார்.

தான் இவ்வாறு சொல்வது, அமெரிக்காவில் தங்குவதற்கான தனது வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்று அஞ்சும் அந்தப் பெண், தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க ஆவலுடன் காத்திருந்த அந்த மாணவியின் எதிர்பார்ப்புகள் தற்போது கானல்நீராக மாறிவிட்டது.

Jiang Fangzhou ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகம் படிக்கும் ஜியாங் ஃபாங்சோ

வெளிநாட்டு மாணவர்களிடையே பதட்டம் தெளிவாகத் தெரிகிறது என்று ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகம் படிக்கும் ஜியாங் ஃபாங்சோ சொல்கிறார்.

"வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டியிருக்கலாம். ஆனால் இங்கே எங்களிடம் எல்லாமே இருக்கிறது. அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு ஒரே இரவில் ஓடிவிட முடியாது" என்று ஜியாங் கூறுகிறார்.

30 வயதான ஜியாங் நியூசிலாந்து குடிமகன். இந்தத் தடை, தற்போதைய மாணவர்களை மட்டுமே பாதிக்காது என்று கருதுகிறார்.

"இந்த ஆண்டு கல்வி கற்க வரவிருக்கிற மாணவர்களைப் பற்றி நினைத்து பார்க்கவேண்டும்" என்று சொல்லும் ஜியாங். "அவர்கள் அமெரிக்காவில் படிப்பதற்காக, பிற கல்லூரிகளின் சேர்க்கைகளை நிராகரித்துவிட்டனர். அவர்கள் ஹார்வர்டைச் சுற்றி தங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டிருந்தனர். அவர்கள் இப்போது முற்றிலும் சிக்கலில் சிக்கிக்கொண்டனர்" என்று ஜியாங் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.