`கொச்சி அணிக்கு ரூ.538 கோடி வழங்க வேண்டும்!' - உயர் நீதிமன்றம் உத்தரவு; என்ன செய்யப்போகிறது BCCI?
Vikatan June 19, 2025 02:48 PM

இந்தியாவில் 2008-ல் தொடங்கிய ஐ.பி.எல்லில் 2010 வரை மூன்று சீசன்களாக 8 அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன.

பின்னர், 2011 சீசனில் இலங்கையின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என்ற பெயரில் களமிறங்கியது.

அந்த சீசனில் கொச்சி அணி 14 போட்டிகளில் 6 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடம் பிடித்தது.

அதையடுத்து, அதே ஆண்டு செப்டம்பரில் கொச்சி அணி, தங்களது வங்கி உத்தரவாதத்தை அளிப்பதாக பி.சி.சி.ஐ-க்கு கடிதம் அனுப்பியது.

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா

ஆனால், அந்தக் கடித்ததை நிராகரித்த பி.சி.சி.ஐ, உரிய நேரத்தில் வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்காததால் கொச்சி அணியின் உரிமத்தை ரத்து செய்ததால், 2012 ஐ.பி.எல் சீசனில் அந்த அணியால் விளையாடமுடியவில்லை.

இதனால், பி.சி.சி.ஐ-க்கு எதிராக நடுவர் தீர்ப்பாயத்தில் கொச்சி அணி வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கில், கடந்த 2015-ல் பி.சி.சி.ஐ செயல் தவறு என்று தீர்ப்பளித்த நடுவர் தீர்ப்பாயம், கொச்சி கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் (KCPL) நிறுவனத்துக்கு ரூ. 384.8 கோடியும், ரெண்டெஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் (RSW) நிறுவனத்துக்கு ரூ.153.3 கோடியும் செலுத்துமாறு பி.சி.சி.ஐ-க்கு உத்தரவிட்டது.

இருப்பினும், பி.சி.சி.ஐ நடுவர் தீர்ப்பாயத்தின் இத்தகைய தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சுமார் ஒன்பது ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்றுவந்தது.

மும்பை உயர் நீதிமன்றம்

இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். சாக்லா, பி.சி.சி.ஐ-யின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

அதோடு, ஏற்கெனவே நடுவர் தீர்ப்பாயம் கூறியபடி கொச்சி டாஸ்கர்ஸ் ரூ. 538 கோடி செலுத்துமாறு நீதிபதி ஆர். சாக்லா நேற்று உத்தரவிட்டார்.

மேலும், இதில் மேல்முறையீட்டுக்கு செல்ல உயர் நீதிமன்றம் 6 வாரம் கால அவகாசம் வழங்கியிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடவிருப்பதாக பி.சி.சி.ஐ தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

முதலில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியின் உரிமையானது RSW தலைமையிலான கூட்டமைப்பிடம் வழங்கப்பட்டது. பின்னர், KCPL-யால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.