தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திலிருந்து தி ஃபஸ்ட் ரோர் என்ற பெயரில் சிறப்பு வீடியோவை வெளியிட்டு விஜய்க்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதேபோல் திரைப்பிரபலங்கள், தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் : “தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! ” என்று குறிப்பிடுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் : “தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தம்பி விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் : “நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் : “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரு.விஜய் அவர்கள் நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்துடனும், மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.