இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழு, டிராகன் விண்கலத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம், இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 25) நண்பகல் 12 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியது.
இந்நிலையில் விண்வெளியில் இருந்து மேற்கொண்ட காணொளி அழைப்பில், `அனைவருக்கும் விண்வெளியில் இருந்து நமஸ்காரம்’ என்று கூறி உரையைத் தொடங்கிய சுக்லா,
`நான் இன்னும் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்குப் பழகி வருகிறேன் - ஒரு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வது போல, என்னை எப்படி நகர்த்துவது மற்றும் கட்டுப்படுத்துவது என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால் நான் ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் ரசிக்கிறேன்’ என்றார்.
மேலும், `இந்திய மூவர்ணக் கொடியைப் பார்த்தது, இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பதை நினைவூட்டியது. இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்திற்கும், வரவிருக்கும் ககன்யான் திட்டத்திற்கும் இது ஒரு வலுவான அடித்தளமாகும். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நீங்கள் ஒவ்வொருவரும் இருப்பதை உணரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இது தொழில்நுட்ப லட்சியத்தைப் பற்றியது மட்டுமல்ல - இது இந்த பயணத்தின் பின்னணியில் உள்ள உணர்வு மற்றும் நோக்கத்தைப் பற்றியது. அடுத்த 14 நாட்களில் முக்கியப் பணிகளை முடித்து எனது அனுபவங்களைப் பதிவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளேன், அப்போதுதான் அவற்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடியும்’ என்றார்.
தற்போது பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில் இருக்கும் விண்கலத்திலிருந்து காணப்படும் காட்சியைப் பகிர்ந்துகொண்ட சுக்லா, அதை `அழகானது’ என்று வர்ணித்தார்.