திருவண்ணாமலையில் வயிற்றில் இருந்த சிசுவை குடும்பத்தினர் வற்புறுத்தி கலைக்க வைத்ததால் தனது மகளுடன் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்காலம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது மனைவி உமா தேவி(வயது 25), மகள் மோகனாஸ்ரீ (2) பெற்றோருடன் வசித்து வந்தனர்.4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாஸ்ரீ யும் கடந்த ஜூன் 24-ம் தேதி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர்.
உமாதேவியின் தந்தை ஏழுமலை தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
'' எனது மகள் இரண்டாவதாக கருவுற்றார். சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக நான் போன் செய்த போது 'திருப்பதியில் இருக்கின்றோம்' என்று கூறினாள். நான் 'திருப்பதி கோவிலுக்கு சாமிகும்பிட சென்றுள்ளீர்களா?' என்று கேட்டதற்கு 'இல்லை நாங்கள் ஸ்கேன் செய்ய வந்துள்ளோம்' என்று கூறினார். எனது மகளை கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தி மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளனர். எனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்றுதான் நினைத்தோம். நான் வெளியூரில் வேலை செய்து கொண்டிருப்பதால் உடனே வர முடியவில்லை'' என்கிறார் உமா தேவியின் தந்தை ஏழுமலை.
தனது மகள் அழுது கொண்டே இறப்பதற்கு முன் தினம் பேசினார் என்கிறார் ஏழுமலை
'' நான் எதுவும் கவலைப்பட வேண்டாம் நான் வந்து விடுகிறேன் என்று ஆறுதல் கூறினேன். ஆனால் அடுத்த நாளே எங்களுக்கு போன் வந்தது முதலில் எனது பேத்தி மோகனா ஸ்ரீ கிணற்றில் விழுந்துவிட்டதாக கூறினார்கள் உடனடியாக சில நிமிடங்களிலேயே 'உங்களது மகளும் கிணற்றில் விழுந்து விட்டார்', இருவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் வந்தது.'' என்கிறார் அவர்.
''எனது மகள் கருவுற்று இரண்டு மாதம் ஆனவுடன் நாங்கள் அரசு செவிலியரிடம் காண்பித்து பதிவு செய்யுங்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கும் சென்று செக்கப் செய்து வாருங்கள் என்று கூறினோம். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை பதிவு செய்யவே இல்லை என்பது இப்போதுதான் எங்களுக்கு தெரிகின்றது. எனது மகள் இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவ்வப்போது திட்டியும், வரதட்சணை கேட்டும் அடித்துள்ளனர்.'' என்கிறார் ஏழுமலை.
இறந்த உமாதேவியின் தந்தை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதாக கூறுகிறார் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி
''விக்னேஷ் -உமாதேவி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் உமா தேவி கர்ப்பமானதால், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ? என்று நினைத்து கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று கண்டறிய முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவிக்கு ஸ்கேன் செய்யது கருவில் இருப்பது பெண் சிசு என்பதை அறிந்துள்ளனர். இதனால் கருவை கலைக்க உமாதேவியை வற்புறுத்தியுள்ளனர் என்பது எங்களின் விசாரணையில் தெரியவந்தது'' என்கிறார் அவர்.
இந்தநிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக விக்னஷ், ஜெயவேல் சிவகாமி மற்றும் கருவை கலைக்க உதவியதாக அதே ஊரை சேர்ந்த சாரதி (ஸ்கேன் சென்டரை அறிமுகம் செய்தவர்) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறது காவல்துறை.
'' தமிழ்நாட்டில் இதுபோன்ற ஸ்கேன் சென்டர்கள் தற்போது தகவல் தருவதில்லை. இதனால், இவர்கள் அண்டை மாநிலத்துக்கு சென்று இடைத்தரகர் மூலமாக ஸ்கேன் செய்துள்ளனர். கரு கலைப்பால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உமாதேவி தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார்'' என்கிறார் இன்ஸ்பெக்டர் லட்சுமி.
திருவண்ணாமலையில் கடந்த 2023- 24 ஆம் ஆண்டில் 14233 ஆண் குழந்தைகளும் 12946 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 1287 குறைவாகும் என்றார் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை அதிகாரி பிரகாஷ்
''திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் போன்ற விவசாயம் சார்புடைய தொழிலை பிரதானமாக கொண்ட மாவட்டங்களில், கல்வியறிவு குறைவாக இருக்கிறது. இங்கு சில குடும்பங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு கொண்டாடப்படுவதில்லை என்ற மோசமான நிலை இன்னும் உள்ளது '' என்கிறார் இப்பகுதியில் வசிக்கும் லலித்குமார்.
கடந்த வருடம் பத்தாம் வகுப்புபொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழக அளவில் 28 வது இடத்தை பெற்றுள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் 93.10 ஆகும்.
நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு