இன்று ஜாமீன் மீதான விசாரணை... அநியாயமாய் பறிபோன ரிதன்யாவின் உயிர்!
Dinamaalai July 07, 2025 11:48 AM

நன்றாக படிக்க வைத்து, கோடிக்கணக்கில் சொத்து இருந்து, ஒரு இளம்பெண்ணை அநியாயமாக பறி கொடுத்து இருக்கிறார்கள். அவள், கேட்டதெல்லாம் தன்னுடைய பிரச்சனைகளைப் புரிந்துக் கொள்ள, ஆறுதலாய் வார்த்தைச் சொல்ல, தனக்கு ஆதரவாய் நிற்க யாருமே இல்லையா என்பது தான்.  

திருப்பூர்   மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிதன்யா(27). வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன் 28, 2025 அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  ரிதன்யா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் பேசிவிட்டு சென்ற அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது.

இச்சம்பவம் வரதட்சணை கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை மீண்டும் வலியுறுத்தியது. ரிதன்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் 28 வயது கவின்குமார்  மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டு திருப்பூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கில், கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தரப்பில், ரிதன்யாவின் மரணத்திற்கு வரதட்சணை தொடர்பில்லை எனவும்  அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை எனவும்  வாதிடப்பட்டது.

ஆனால், ரிதன்யாவின் பெற்றோர் இந்த ஜாமீன் மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனால், இந்த வழக்கு குறித்த  மனு மீதான விசாரணை இன்று ஜூலை 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரிதன்யாவின் பெற்றோரின் புகாரின்படி, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், திருமணத்திற்கு பிறகு ரிதன்யாவிடம் தொடர்ந்து வரதட்சணை கோரி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த கொடுமைகளால் மனமுடைந்த ரிதன்யா, தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த வழக்கு, இந்தியாவில் வரதட்சணை குறித்த சட்டங்களை கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.இந்த வழக்கு, திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் வரதட்சணை பிரச்சினைகளுக்கு எதிராக போராடும் அமைப்புகள், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி வருகின்றன.

இந்நிலையில் இன்று ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில், ஜாமீன் மனு மீதான முடிவு மற்றும் ரிதன்யாவின் மரணத்திற்கு நீதி கிடைப்பது குறித்து மேலும் தெளிவாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.