"உறவுகளை வளர்க்கும் கிசுகிசு" - பரிணாமவளர்ச்சி நிபுணர்கள் கூறுவது என்ன?
BBC Tamil July 07, 2025 10:48 PM
Getty Images

அது உங்கள் நற்பெயரைக் கெடுக்ககூடும். அது உங்கள் நடத்தையை நியாயப்படுத்தலாம். அது கேளிக்கை, பலருக்கு அது ஒரு "பாவம்"

கிசுகிசு பேசும் பழக்கத்தை மானுடவியலாளர்கள் நகர்ப்புறம், தொலைதூர கிராமப்புற மற்றும் தோட்ட சூழ்நிலைகள் என பெரும்பாலான கலாச்சாரங்களில் பார்த்திருக்கின்றனர்.

"அனைத்து கலாசாரங்களிலும், சரியான சூழ்நிலைகள் அமைந்தால் அனைவரும் கிசுகிசு பேசப்போகிறார்கள்," என்கிறார் வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகத்தில் பரிணாம மானுடவியல் இணை பேராசிரியராக இருக்கும் நிகோல் ஹேகன் ஹெஸ்.

கிசுகிசு என நினைக்கும்போது, ஒருவருக்கு பின்னால் தீய நோக்கத்தோடு புறம்பேசுவதை நாம் கற்பனை செய்து பார்க்கக்கூடும். ஆனால் ஹெஸ் ஒரு பரந்த பார்வையை தருகிறார், கிசுகிசு, என்பது "ஒருவரின் நற்பெயர் தொடர்பான எந்தவொரு பரிமாற்றமும் என்கிறார் அவர்.

இதற்கு பொருள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உடன் பணியாற்றுபவர்கள் அல்லது எதிராளிகள் கூட நம்மை பற்றி என்ன சொல்கிறார்கள் எனபதாக இருக்கலாம், ஆனால் செய்தி அறிக்கைகளில் அல்லது ஒரு விளையாட்டு நிகழ்ச்சியின் முடிவை பற்றி என்ன சொல்லப்படுகிறது என்பதாகக் கூட இருக்கலாம் என்கிறார் அவர்.

"எனது வரையறையின்படி நீங்கள் கிசுகிசு பேசுவதற்கு உங்கள் முன் இல்லாத ஒரு மூன்றாவது நபர் தேவையில்லை- அவர்கள் உங்களுக்கு முன்பாகவும், நின்றுகொண்டிருக்கக் கூடும்," என விளக்குகிறார் அவர். "நீங்கள் அவர்களை பற்றி, அவர்களது உடையை பற்றி என்ன நினைக்கிறீர்கள் அல்லது அவர்கள் செய்ததைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், நான் அதை கிசுகிசுவாக எடுத்துக்கொள்வேன்."

ஆனால் இந்த நடத்தையில் ஈடுபடும் வகையில் மனிதர்கள் ஏன் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளனர் என்ற கேள்வியோடு ஆய்வாளர்கள் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதோ சில முக்கிய கோட்பாடுகள்.

உறவுகளை வளர்க்கும் கிசு கிசு

சமுதாயத்தில் கிசுகிசு ஒரு நேர்மறை பங்காற்றக்கூடும் என்ற எண்ணத்தை பரவலாக்கியவர் பரிணாம வளர்ச்சி மானுடவியலாளரான பேராசிரியர் ராபின் டன்பார்.

அவரது கோட்பாட்டின்படி, உயர்பாலூட்டிகளிடம் க்ருமிங்(grooming) எனப்படும் சீர்படுத்துதல் என்பது ஒரு சமூக நடத்தை மற்றும் சுகாதாரம் சார்ந்தது. பிணைப்புடன் சேர்த்து, சண்டைக்கு பிறகு சமாதானமடைவதற்கு, பதற்றத்தை தணிப்பதற்கு, சமூக படிநிலை அமைப்பில் ஒவ்வொரு பாலுட்டியின் இடத்தை நிறுவதற்கும் அது பயன்படுத்தப்படலாம்.

இந்த நடைமுறை "அலோக்ரூமிங்" என்று அறியப்படுகிறது.

ஆனால் மனிதர்களுக்கு (விலங்குகளைப் போல்) ரோமம் இல்லாததால், கிசுகிசுவும், சிறு உரையாடலும் அலோக்ரூமிங்கின் நவீன மனித வடிவாக இருக்கலாம். உறவுகளை வளர்ப்பதில். சமஅந்தஸ்தில் உள்ளவர்கள் படிநிலையில் ஒருவரின் இடத்தை நிறுவது, யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது உள்ளிட்ட சமூக தகவல்களை பரிமாறிக்கொள்வது போன்ற அதே தேவைகளை பூர்த்திச் செய்கிறது.

டன்பாரை பொறுத்தவரை, மக்கள் கிசுகிசு பேச வசதியாகத்தான் மொழியே பரிணாம வளர்ச்சி அடைந்தது.

Getty Images கிசுகிசு என நினைக்கும்போது ஒருவரின் முதுகுக்கு பின்னால் தீய நோக்கத்தோடு பேசுவதை நாம் உருவகப்படுத்திக்கொள்கிறோம்
  • உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே உள்ள இந்த ரத்த வகையின் சிறப்பு என்ன?
  • பாம்பு நஞ்சை வாயால் உறிஞ்சி எடுக்கலாமா? சினிமா காட்சிகளும் அறிவியல் உண்மையும்

டார்த்மவுத் பல்கலைக்கழகம் 2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்திய ஆய்வின்படி ஒன்றாக இணைந்து கிசுகிசு பேசியவர்கள் பரஸ்பர கருத்து மீது தாக்கம் ஏற்படுத்தியதுடன், அந்த நடைமுறையில் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகவும் ஆனார்கள்.

"ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் பொதுவானது என்ற உணர்வை நிறுவி, ஒரு பகிரப்பட்ட யதார்த்தத்தை உருவாக்கினர் என நினைக்கிறோம். இந்த யதார்த்தம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சமூக தொடர்புக்கான ஆசையை நிறைவு செய்ததுடன் பரஸ்பர நடத்தையிலும், பார்வையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது" என அந்த ஆய்வாளர்கள் எழுதினர்.

ஒரு குழுவான அமைப்பில் ஒத்துழைப்பை அதிகரிக்க கிசுகிசு உதவியதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் கிசுகிசு பேச வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் குழு விளையாட்டுக்கு அதிக பணம் தர தயாராக இருந்ததை ஆய்வாளர்கள் கவனித்தனர்."

"வதந்தி என்பது ஒரே மாதிரியான கருத்தாக்கம் அல்ல, நம் நாட்டுப்புற புரிதல்களில் பிரதிபலிக்கும் அடிப்படையற்ற குப்பைப் பேச்சு என்ற குறுகிய வரையறையை விட மிகவும் நுணுக்கமானது," என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

சாதாரண மக்கள் தங்களது கிசுகிசுக்களை பகிர்ந்துகொள்ளும் நார்மல் காசிப் எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் நிறுவன தொகுப்பாளரான கெல்சி மெக்கின்னி, ஒரு சுவாரஸ்யமான கதை அந்நியர்களை எப்படி ஒன்றிணைக்கக்கூடும் என்பதை நன்கறிவார்.

பெருந்தொற்று ஏற்பட்டு மக்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டபோது, கதைகளுக்கான தேவை மேலும் அதிகமானது.

"நாம் பட்டினியாய் இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்," என்கிறார் அவர்.

"நமது பல வாழ்க்கைகள் மற்றும் உலகத்தை நாம் பார்க்கும் விதம் நாம் நமக்கே சொல்லிக்கொள்ளும் கதை மூலமாகத்தான், அந்த கதைதான் கிசுகிசு. நாம் ஒருவருக்கொருவர் நம்மைப்பற்றியே சொல்லிக்கொள்கிறோம், எனவே அதில் அபாயம் உள்ளது, ஆனால் அதில் பல நன்மைகளும் உள்ளன," என்கிறார் அவர்.

Getty Images ஒன்றாக கிசுகிசு பேசுபவர்கள் அந்த நடைமுறையில் நெருக்கமாவதாக ஆய்வு காட்டுகிறது உயிர்பிழைத்திருத்தல்

மனிதர்கள் நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் அபாயத்திலிருந்து எப்படி பாதுகாப்பதை என்பதை கற்றுக்கொள்ள பல மில்லியன் வருடங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம்.

சில பெண்களுக்கு அந்த உயிர் பிழைத்திருக்கும் உத்தியில் கிசுகிசு ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக அபாயகரமான சூழல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்க உதவுகிறது.

"ஒரு ஆணை எதிர்த்துப் போரிடும்போது உடல்ரீதியாக பெண்கள் மிகப்பெரிய பாதகமான சூழ்நிலையில் உள்ளனர். இது உங்களுடைய பெண் உறவினர்கள் மற்றும் நெருங்கிய பெண் நட்புகளுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பக்கூடிய முக்கியத் தகவல்," என்கிறார் நிகோ ஹேகென் ஹெஸ்.

உயிர்பிழைத்திருப்பதும், சமுதாயத்தில் நமது இடமும் பெருமளவு நற்பெயரைச் சார்ந்து இருக்கின்றன.

கெட்ட பெயர் இருப்பது பெரும் சேதத்தை விளைவிப்பதாக இருக்கலாம் என ஹெஸ் விளக்குகிறார். அது உங்கள் சமூக அந்தஸ்தை பாதிக்கலாம், பொருளாதார வாய்ப்புகளை குறைக்கலாம், உணவு போன்ற பொருட்கள் கிடைப்பதைக் கூட பாதிக்கலாம். " எனவே மக்கள் உங்களைப் பற்றி எதிர்மறையாக கிசுகிசு பேசும்போது, அது உண்மையில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தலாம், " என்கிறார் அவர்.

சமூக படிநிலையில் ஒருவர் தன்னுடைய நிலையை தொடர்ந்து தக்க வைக்கவோ அல்லது மேம்படுத்தவோ பயன்படுத்தப்படும் ஒருவகையான சமூக கட்டுப்பாடாகவும் கிசுகிசு இருப்பதாக ஹெஸ் வாதிடுகிறார்.

தங்களுடைய சமூக வட்டத்தில் தாங்கள் எப்படி பார்க்கப்படுகிறோம் என்பதை முறைப்படுத்த மக்கள் முயற்சிக்கின்றனர், எனவே அவர்கள் கிசுகிசு மூலம் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகின்றனர் என்கிறார் அவர். தங்களுடைய சொந்த நற்பெயரை பாதுகாத்துக்கொள்ளவும் சிலசமயம் எதிராளிகளை சிறுமைப்படுத்தவும் அவர்கள் கிசுகிசுக்களை பயன்படுத்துவதாக அவர் மேலும் கூறுகிறார்.

"மனிதர்கள் இயல்பிலேயே தங்கள் இனத்தை சேர்ந்த பிற உறுப்பினர்களுடன் போட்டிபோடும் குணம்கொண்டவர்கள் எனவே மோதல் என்பதை நாம் இல்லாமல் செய்துவிடப் போவதில்லை."

Getty Images கேளிக்கையாக இருந்தாலும், உயிர்பிழைத்திருப்பதாக இருந்தாலும், அல்லது சமூக பிணைப்பாக இருந்தாலும் கிசுகிசு நமது வாழ்க்கையில் ஒரு நிலையான அங்கமாகிவிட்டது கேளிக்கை

பெரும்பாலானவர்களுக்கு, கிசுகிசு என்பது பாதகமற்ற கேளிக்கை என தோன்றலாம்.

"அதைப்போன்ற கிசுகிசுக்களில்தான் நான் தனித்துவம் பெற்றிருக்கிறேன்," என்கிறார் பாட்காஸ்டர் மெக்கின்னி.

கிசுகிசுக்கள் பற்றிய அவரது ஆர்வம்,மற்றும் கதை சொல்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் ஆகியவை கிசுகிசு பேசுவது பாவம் என அவருக்கு கற்பிக்கப்பட்ட மதநம்பிக்கை அதிகம் கொண்ட குடும்பத்தில் வளர்ந்ததிலிருந்து உருவானவை.

"உடனடியாக உங்கள் வாயிலிருந்து வேறு யாருக்கோ சொல்வதுதான் ஒரு மிகச் சிறந்த கிசுகிசு," என்கிறார் அவர்.

கிசுகிசுவே இல்லாத ஒரு உலகம்? "கடவுளே. சலிப்பூட்டும்," என சிரிக்கிறார் அவர்.

"கேளிக்கை, உயிர்பிழைத்திருத்தல் அல்லது சமூக பந்தம் என எதுவாக இருந்தாலும் கிசுகிசு நம் வாழ்வின் நிலையான அம்சமாக மாறிவிட்டது – இதை ஒரு 'மனித உலகளாவிய' பண்பாகக் கருதி, புறக்கணிக்கக் கூடாது," என்கிறார் ஹெஸ்.

"கிசுகிசுவுக்கு நிஜ உலகில் விளைவுகள் உள்ளன," என விளக்குகிறார். "அது வெறும் தோராயமான , உண்மையற்ற முறைசாரா பேச்சாக மட்டும் இருந்தால், மக்கள் தங்களது சமூகத்தை சேர்ந்த பிறருக்கு பலன்களை எப்படி பிரித்து தருகிறார்கள் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்காது."

பிபிசி உலக சேவையிலிருந்து கூடுதல் தகவல்களுடன்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.