சென்னையில் தனி மொழி, கலாசாரத்துடன் வாழும் தாவூதி போரா இஸ்லாமியர்கள் - யார் இவர்கள்?
BBC Tamil July 08, 2025 04:48 PM
Getty Images தாவூதி போரா இஸ்லாமியர்களின் உடைகளும் பிற இஸ்லாமியர்களின் உடைகளில் இருந்து வேறுபடுகின்றன. (கோப்புப் படம்)

ஷியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான தாவூதி போரா இஸ்லாமியர்கள், முஹர்ரம் தினத்தை ஒட்டி நடத்தும் பிரம்மாண்டமான வருடாந்திர மாநாடு, இந்த ஆண்டு சென்னையில் நடந்திருக்கிறது.

உலகெங்கிலுமிருந்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தாவூதி போரா இஸ்லாமியர்கள் இந்த நிகழ்விற்காக சென்னையில் கூடியிருந்தார்கள். தாவூதி போரா இஸ்லாமியர்கள் யார்? அவர்கள் மற்ற இஸ்லாமியர்களிடமிருந்து எப்படி வேறுபட்டவர்கள்?

வட சென்னையில் ஆன்மீக மாநாடு

வட சென்னையில் உள்ள மூர் தெரு, அங்கப்ப நாயக்கன் தெரு உள்ளிட்ட தெருக்கள் கடந்த பத்து நாட்களாக வித்தியாசமான கோலத்தைப் பூண்டிருந்தன. 'யா ஹுசைன்' என எழுதப்பட்ட கொடிகள், ஆயிரக்கணக்கான போரா இஸ்லாமியர்கள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், உணவு பரிமாறும் இடங்கள் என மிகப் பெரிய இஸ்லாமிய திருவிழாவே அங்கு நடந்திருக்கிறது.

ஷியா இஸ்லாமியர்கள் தங்கள் மரியாதைக்குரியவராகக் கருதும் இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவுகூரும் நாளான முஹரமை ஒட்டி, தாவூதி போரா இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஒரு நகரில் ஒரு மிகப் பெரிய ஆன்மீக மாநாட்டை நடத்துகின்றனர். இந்த முறை இந்த மாநாடு சென்னை நகரில் நடந்திருக்கிறது.

யார் இந்த தாவூதி போரா இஸ்லாமியர்கள்? Getty Images 16ஆம் நூற்றாண்டில் தாவூத் பின் குதுப்ஷா என்பவரை பின்பற்ற ஆரம்பித்தவர்கள், தாவூதி போரா இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டனர். (கோப்புப் படம்)

இஸ்லாமிய மாதமான முஹர்ரம் மாதத்தின் துவக்கத்தில் இருந்து அடுத்த பத்து நாட்களுக்கு இந்த நிகழ்வு நடக்கும். ஆசிர்வதிக்கப்பட்ட பத்து நாட்கள் என்ற பொருள்படும் 'ஆஷாரா முபாரக்கா' என்ற இந்த நிகழ்வுக்கு உலகெங்கிலுமிருந்து தாவூதி போரா இஸ்லாமியர்கள், இந்த மாநாடு நடக்கும் இடத்தில் கூடுவார்கள்.

அதன்படி இந்த ஆண்டு சென்னை நகரில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவூதி போரா இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி இந்த ஆன்மீக மாநாட்டை நடத்தியிருக்கின்றனர். தாவூதி போராக்களின் மதகுருவான சையெத்னா முஃபத்தல் சைஃபுதீன் இந்த பத்து நாட்களிலும் ஆன்மீக உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

சென்னையில் சுன்னி இஸ்லாமியர்களே பெரும்பான்மையினர் என்றாலும், முகமது நபியின் பேரனான இமாம் ஹுசைனை மிகுந்த போற்றுதலுக்குரியவராகக் கருதும் ஷியா இஸ்லாமியர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இந்த ஷியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினரே தாவூதி போரா இஸ்லாமியர்கள்.

  • வேலூர் புரட்சி: ஆங்கிலேயரை கொன்று குவித்து கோட்டையை கைப்பற்றிய இந்திய சிப்பாய்கள் தோற்றது ஏன்?
  • ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தனர் என்பது உண்மையா? ஒரு வரலாற்று ஆய்வு

பிற ஷியா இஸ்லாமியர்களைப் போல இவர்களும் இமாம் ஹுசைனை முன்னிலைப்படுத்தினாலும் இவர்களுக்கும் பிற ஷியா இஸ்லாமியர்களுக்கும் பண்பாட்டு ரீதியாக பல வேறுபாடுகள் இருக்கின்றன.

இஸ்லாத்தின் இரு பெரும் பிரிவுகளாக சுன்னி, ஷியா ஆகியவை இருக்கும் நிலையில், ஷியா இஸ்லாமியர்களின் ஒரு சிறிய பிரிவுதான் தாவூதி போராக்கள். ஷியா இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை, முகமது நபியின் வழித்தோன்றல்களை குறிப்பாக அவரது பேரன் ஹுசைனை மிக முக்கியமான, போற்றுதலுக்கு உரியவராகக் கருதுகின்றனர்.

இந்த ஷியா இஸ்லாமியர்களில் பல சிறிய பிரிவுகள் உண்டு. அதில் ஒரு பிரிவான இஸ்மாயிலிசத்தில் இருந்து பிரிந்தவர்கள்தான் தாவூதி போராக்கள். 16ஆம் நூற்றாண்டில் தாவூத் பின் குதுப்ஷா என்பவரை பின்பற்ற ஆரம்பித்தவர்கள், தாவூதி போரா இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதில் போரா என்ற வார்த்தை, வர்த்தகர்கள் எனப் பொருள்படும் 'vohrvu' என்ற குஜராத்தி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

Getty Images ஷியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினரே தாவூதி போரா இஸ்லாமியர்கள். (கோப்புப் படம்)

"தாவூதி போரா இஸ்லாமியர்கள் நாற்பது நாடுகளில் சுமார் பத்து லட்சம் பேர் இருந்தாலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் குஜராத், மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கின்றனர். 1790ஆம் ஆண்டுவாக்கில் சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள மூர் தெருவில் முதன் முதலில் குடியேறிய தாவூதி போரா இஸ்லாமியர்கள், இப்போது சென்னையின் பல பகுதிகளில் வசித்துவருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் எட்டாயிரம் தாவூதி போரா இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்" என பிபிசியிடம் தெரிவித்தார் இவர்களது ஊடகப் பேச்சாளர்களில் ஒருவரான ஹசன் கபி.

மற்ற ஷியா இஸ்லாமியர்களைப் போலவே தாவூதிகளுக்கும் முஹர்ரம் மிக முக்கியமான தினம். "இமாம் ஹுசைனை நாங்கள் மிக போற்றுதலுக்குரியவராகக் கருதுகிறோம். கி.பி. 680ஆம் ஆண்டில் கர்பலாவில் நடந்த யுத்தத்தில் அவர் அநியாயமாக கொல்லப்பட்டார். அவரும் அவருடைய வீரர்களும் மூன்று நாட்கள் உணவில்லாமல் இருந்து, பிறகு போரில் கொல்லப்பட்டனர்."

"இவ்வளவு நெருக்கடியிலும் அவர் கடவுள் மீதான தனது நம்பிக்கையை, மதம் மீதான நம்பிக்கையைக் கைவிடவில்லை. இதை நாங்கள் நினைவுகூர விரும்புகிறோம். இதையே எங்கள் மதகுருவான மரியாதக்குரிய சையெத்னா முஃபத்தல் சைஃபுதீன் இந்த நாட்களில் எங்களுக்குப் போதிக்கிறார்." என்கிறார் இச்சமூகத்தைச் சேர்ந்த தஸ்னீம் குத்புதீன்.

  • பரங்கிப்பேட்டை போர் ஹைதர் அலி வீழ்ச்சிக்கும் ஆங்கிலேயர் எழுச்சிக்கும் வித்திட்டது எப்படி?
  • சென்னை அருகே உள்ள ஆலம்பரைக்கோட்டைக்கும் முகலாயருக்கும் என்ன தொடர்பு?
தனித்துவமான மொழியும் கலாசாரமும் Getty Images (கோப்புப் படம்)

சென்னை தவிர, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், புதுச்சேரி ஆகிய நகரங்களிலும் சில போரா இஸ்லாமியர்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கட்டுமானம், இரும்பு போன்ற வர்த்தகங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு என தனி மொழியும் உண்டு.

"தாவூதி போரா இஸ்லாமியர்கள் எந்தப் பகுதியில் வசிக்கிறார்களோ அந்தப் பிரதேசத்தின் மொழியை அறிந்திருந்தாலும், இந்த சமூகத்திற்கு என தனியாக ஒரு மொழி இருக்கிறது. Lisan ud-Dawat எனப்படும் இந்த மொழி அரபு, உருது, பெர்ஷியன், சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய மொழிகளின் கலப்பாக இருக்கிறது. பெர்ஷிய அரபு எழுத்துகளின் மூலம் இந்த மொழியை எழுதுகிறார்கள்." என்கிறார் தஸ்னீம் குத்புதீன்.

தொடர்ந்து பேசிய அவர், "இவர்களது உடைகளும் பிற இஸ்லாமியர்களின் உடைகளில் இருந்து வேறுபடுகின்றன. வெளிப்புற ஆடையாக பெண்கள், ரிதா எனப்படும் வண்ணமயமான புர்காவை அணிகின்றனர். ஆண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் வெண்ணிற பைஜாமா - குர்தாவுடன் ஷாயா எனப்படும் மேல்கோட்டையும் அணிகின்றனர்." என்றார்.

"இவர்கள் அணியும் தொப்பி, கைகளால் பின்னப்பட்டது. முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் உணவருந்துவது இவர்களது பண்பாடுகளில் ஒன்று. உலகில் எங்கு சென்றாலும் எங்களைத் தனித்து அடையாளம் காண முடியும்" என்று தஸ்னீம் குத்புதீன் கூறினார்.

  • இந்து, சமஸ்கிருதம், பிரியாணி: இந்தியா - இன்றைய இரான் இடையே நடந்த உணவு, மொழி, கலாசார பரிமாற்றம்
  • வாஸ்கோடகாமா கேரளாவில் ஒரு கொடூர வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?

சையத்னா முஃபத்தல் சைஃபுதீன் என்ற மத குருவையும் அவரது போதனைகளையும் இவர்கள் பின்பற்றுகின்றனர். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் முஹர்ரம் தினத்தை மிகத் தீவிரமாக அனுசரிப்பார்கள். மார்பில் அடித்தபடி ஊர்வலமாகச் செல்வது இவர்களது வழக்கம். தாவூதி போராக்களும் ஷியா பிரிவினர் என்றாலும்கூட, முஹர்ரம் தினத்தில் அமைதியாக அமர்ந்து பிரார்த்தனை செய்வது, ஹுசைனின் தியாகத்தை நினைவுகூர்வது, மத குருவின் போதனைகளைக் கேட்பது என்ற விதத்திலேயே அந்த நாளை நினைவுகூர்கின்றனர்.

2025ஆம் ஆண்டில் ஆஷாரா முபாரகா நிகழ்வை சென்னையில் நடத்த முடிவு செய்த பிறகு, இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாகச் செய்யப்பட்டன. அரசின் பல மட்டங்களிலும் அனுமதிகள் பெறப்பட்டு, நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

உணவு, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, குப்பைகளை அகற்றுவது, மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்வது என இதன் ஒவ்வொரு பகுதியும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜார்ஜ் டவுனில் இருக்கும் சைஃபி மசூதிதான் பிரதானமான நிகழ்விடம் என்றாலும் நகரின் ஒன்பது மசூதிகளிலும் மத குருவின் போதனைகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.