பெண்ணுக்கு 14 செ.மீ. எலும்பை வளரவைத்த திண்டிவனம் அரசு மருத்துவர்கள் - எப்படி சாத்தியமானது?
BBC Tamil July 11, 2025 04:48 PM
Suresh செல்போனுக்குள் உள்ள படம் கோமதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பு, இருகைகளிலும் ஏற்ற-இறக்கம் உள்ளதை கவனிக்கலாம். அடுத்தது, சிகிச்சைக்கு பின்பு கைகளின் நீளம் சம அளவில் உள்ளதை காட்டும் படம்.

சிறுவயதிலிருந்தே கோமதியின் இடது கையை பார்ப்பவர்கள் மிக எளிதில் அதிலுள்ள வித்தியாசத்தை தெளிவாக கண்டுகொள்வார்கள்.

வலதுகையை போன்று வழக்கமானதாக இடதுகை அவருக்கு இருக்காது. இடது கையின் மூட்டு நன்கு மேலே தூக்கியும், நீண்டதாக அல்லாமல் மிகச்சிறியதாகவும் இருக்கும். அதன் விளைவாக, வலது கையைவிட இடது கையின் நீளம் குறைவாக இருக்கும்.

ஒருவயது குழந்தையிலிருந்து இந்த பிரச்னை கண்டறியப்பட்டாலும், பல மருத்துவர்கள், மருத்துவமனைகளை நாடியும் கோமதியின் இந்த பிரச்னை தீரவில்லை.

ஆனால், விபத்து ஒன்றில் சிக்கிய தன் தந்தை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சிறுவயதில் இருந்து தான் எதிர்கொண்ட இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என தற்போது 22 வயதான கோமதி நினைக்கவில்லை.

கோமதியின் இடது கை எலும்பை 14 செ.மீ அளவுக்கு வளரச்செய்து, அவருடைய பிரச்னைக்கு தீர்வுகண்டுள்ளனர் திண்டிவனம் அரசு மருத்துவர்கள்.

குழந்தையிலிருந்தே இத்தகைய பிரச்னை உள்ள ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு எலும்பை வளரச்செய்தது தமிழ்நாடு பொது மருத்துவ உலகில் நிகழ்ந்திருக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

கடினமாக, திடமாக உள்ள எலும்பை எப்படி வளர வைக்க முடியும் என்ற கேள்வி எழலாம். இது எப்படி சாத்தியமானது?

கேலி, கிண்டல்கள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள காவேரிப்பாக்கம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கோமதி.

"ஒரு வயதிலிருந்தே என்னுடைய இடது கை நீளம் குறைவாகவே இருக்கும், அதன் மூட்டுப்பகுதி மேலே தூக்கியும் குறுகியும் இருக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே இந்த பிரச்னைக்கு மாவுக்கட்டு போட்டால் சரியாகிவிடும் என நினைத்து அதையும் செய்தோம், ஆனாலும் எலும்பு வளரவில்லை. சென்னையிலும் திண்டிவனத்திலும் கிட்டத்தட்ட 10 மருத்துவர்களை இதற்காக பார்த்திருப்போம். ஆனால், என்ன சிகிச்சை செய்தாலும் எலும்பு ஒரு இன்ச் தான் வளரும், அதற்கு மேல் வளராது என கூறிவிட்டனர்," என்கிறார் கோமதி.

இந்த பிரச்னையால் கோமதி மற்றவர்களை போன்று எல்லா வேலைகளையும் எளிதாக செய்ய முடியாது, அதிகமான எடையை தூக்க முடியாது. மேலும், அவ்வப்போது அந்த கையில் வலியும் ஏற்படும்.

Suresh

"பள்ளி, கல்லூரியில் கேலி, கிண்டல்களை இதனால் சந்தித்துள்ளேன். துப்பட்டா அல்லது முழுக்கை ஆடை அணிந்து கையை மறைத்துக்கொள்வேன்." என்கிறார் இளநிலை பட்டப்படிப்பு முடித்த கோமதி.

கோமதியின் தந்தை குமார் ஆட்டோ ஓட்டுநர். அவருக்கு 2023ம் ஆண்டில் ஒரு விபத்து ஏற்படவே, அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போதுதான், மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவர் சுரேஷ் தற்செயலாக கோமதியின் இடதுகையில் உள்ள பிரச்னையை கவனிக்கிறார்.

  • சீனாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயலும் இந்தியா - அமெரிக்கா குறித்த கவலை காரணமா?
  • ஆண்டு முழுக்க ஒரு நாள் விடாமல் 366 மாரத்தான்கள் ஓடிய மனிதர் - இதயத்தில் ஏற்பட்ட மாற்றம்
இடது கையில் என்ன பிரச்னை?

"இம்மாதிரியான பிரச்னை பொதுவாக பிறவியிலேயே ஒருவருக்கு ஏற்படும். கோமதிக்கு பிறவியிலிருந்தே இடது கையின் மேல் எலும்பு (humerus) வளரவில்லை. முழங்கை, மணிக்கட்டு நன்றாக வளர்ந்திருக்கிறது.'' என்கிறார் மருத்துவர் சுரேஷ்

ஒருவருக்கு பெரும்பாலும் 14 வயதுடன் எலும்பின் வளர்ச்சி நின்றுவிடும் எனக்கூறும் மருத்துவர் சுரேஷ், உடலின் எந்தவொரு எலும்புக்கும் ஃபைசியல் சென்டர் எனும் (Physeal centre) மையம் இருப்பதாகக் கூறுகிறார். அந்த மையம் ஒரு குறிப்பிட்ட வயதுடன் 'லாக்' ஆகிவிடும் என்றும், அதற்கு மேல் அந்த எலும்பு வளராது என்றும் கூறுகிறார் அவர்.

"congenital shortened humerus, Physeal damage என்ற பிரச்னைதான் கோமதிக்கு உள்ளது. அவருக்கு ஒரு வயது குழந்தைக்கு கை எலும்பு எவ்வளவு நீளமாக இருக்குமோ, அந்தளவுக்கான வளர்ச்சிதான் இருந்தது" என்கிறார், மருத்துவர் சுரேஷ்.

Suresh கோமதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட எலும்பியல் மருத்துவர் சுரேஷ்

பலரும் குழந்தையிலிருந்தே ஒரு பிரச்னை இருக்கும்போது அதை சரிசெய்யவே முடியாது என நினைப்பதால், மருத்துவமனைகளை அணுகுவதை தவிர்க்கின்றனர் என கூறுகிறார் மருத்துவர் சுரேஷ்.

கோமதியின் பிரச்னையை கண்டுகொண்ட மருத்துவர் சுரேஷ், அவருக்கு எக்ஸ்ரே போன்ற அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளை செய்துள்ளார். இதை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும் என்பதை சில உதாரணங்களைக் காட்டி நம்பிக்கை அளித்துள்ளார். அதன் பின், கோமதி இந்த அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார்.

  • டிரம்பின் அணுகுமுறை யுக்ரேனைவிட ரஷ்யாவுக்கே சாதகமாக உள்ளதா? புதின் திட்டம் என்ன?
  • ராமதாஸ், அன்புமணி மோதல்: பறிபோகும் மாம்பழ சின்னம்? பா.ம.க-வின் பலவீனத்தால் யாருக்கு பயன்?

"இந்த பிரச்னை சரியானது மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பு கேலி, கிண்டல்களை நினைத்து கஷ்டமாக இருக்கும், இப்போது அப்படியில்லை." என கூறுகிறார் கோமதி.

மருத்துவர் சுரேஷ் தலைமையில் மற்றொரு எலும்பியல் மருத்துவர் சீனிவாசன், மூன்று மயக்கவியல் நிபுணர்கள், செவிலியர்கள் உட்பட குழுவினர் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.

Suresh என்ன சிகிச்சை முறை?

இந்த அறுவை சிகிச்சை எப்படி மேற்கொள்ளப்பட்டது, அதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பதை விளக்கினார் மருத்துவர் சுரேஷ். சிகிச்சை முறையை அறிவதற்கு முன்பு இதை கண்டுபிடித்த வரலாறும் சற்று சுவாரஸ்யமானது.

இலிசரோவ் தத்துவம் (Ilizarov principle) எனும் மருத்துவ தத்துவத்தின் கீழ்தான் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கவ்ரில் அப்ரமோவிச் இலிசரோவ் எனும் ரஷ்ய எலும்பியல் நிபுணர் தான் இந்த தத்துவத்தையும் அதன் அடிப்படையிலான சிகிச்சை முறையையும் கண்டுபிடித்தவர்.அதனால் அவரின் பெயராலேயே இந்த சிகிச்சை முறை அழைக்கப்படுகிறது.

1950களின் முற்பகுதியில் போர் படையினருக்காக இயங்கும் மருத்துவமனையில் பணிபுரிந்த இலிசரோவ், போரில் ஈடுபட்டு எலும்பு முற்றிலும் பாதிப்படைந்து வருபவர்களுக்கு அதை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எலும்பை மீண்டும் வளர வைக்க முடியுமா என்பதை ஆராய்ச்சி செய்து, அவ்வாறு வளர வைக்க முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

  • வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி? தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்?
  • குழந்தையின் உயிரை காத்த புதிய மருந்து புற்றுநோயை குணப்படுத்துமா?
  • உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே உள்ள இந்த ரத்த வகையின் சிறப்பு என்ன?
  • சென்னையில் தந்தை, இரு மகன்களின் உயிரை பறித்த 'கண்ணுக்குத் தெரியாத கொலையாளி'
அறுவை சிகிச்சை எப்படி மேற்கொள்ளப்பட்டது?

சரி, இந்த சிகிச்சை முறையில் எப்படி எலும்பை வளர வைக்க முடியும். எலும்பில் ஏதேனும் சிறிய பிரச்னைகளின் போது பிளேட் அல்லது ராட் (rod)வைப்பது போன்றது அல்ல இந்த சிகிச்சை.

"ஒருவரின் வளர்ச்சி குறைபாட்டுடன் கூடிய எலும்பை அறிவியல்ரீதியாக செயற்கையாக முதலில் உடைப்போம். பின்னர் ஒரு வெளிப்புற கருவியை (external fixator) நோயாளியின் எலும்புடன் பொருத்தி தையல் போடப்படும். இந்த கருவி நோயாளியின் தோலுக்கு வெளியேதான் இருக்கும். அந்த கருவியை ஒவ்வொரு நாளும் சுழற்றும்போது, எலும்பு ஒரு சவ்வு போன்று நீட்சியடையும். சுவிங்கத்தை மென்று அதை இழுத்தால் எப்படி நீளுமோ அதுபோன்ற நெகிழ்வுத்தன்மை எலும்புக்கு உள்ளது." என்கிறார் மருத்துவர் சுரேஷ்.

Suresh எலும்பை உடைக்கும்போது எடுக்கப்பட்ட எக்ஸ்ரே

இந்த அறுவை சிகிச்சை முடிந்து பத்து நாட்களுக்குப் பிறகு, அந்த வெளிப்புற கருவியில் உள்ள திருகு போன்ற அமைப்பை திருகுவதன் மூலம் எலும்பு சவ்வு போன்று நீட்சியடைகிறது.

அதாவது, நாளொன்றுக்கு ஆறுமணி நேரத்துக்கு ஒருமுறை அந்த கருவியின் திருகு போன்ற அமைப்பை சுழற்றும்போது, உள்ளே உள்ள எலும்பு கீழே இழுக்கப்பட்டு வளர்கிறது. இந்த அமைப்பை திருகுவதை நோயாளிகளே செய்யும் அளவுக்கு எளிமையான செயல்முறையாக உள்ளது.

  • ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு 6 நாட்களில் மரண தண்டனை - காப்பாற்ற ஒரே இறுதி வாய்ப்பு என்ன?
  • செங்கடலில் சரக்கு கப்பலை சிறு படகுகள் மூலம் சூழ்ந்து மூழ்கடித்த ஹூதி படை - என்ன நடந்தது?
Suresh கையில் பொருத்தப்பட்டுள்ள external fixator கருவி

distraction osteogenesis எனும் சிகிச்சை முறையில் இது மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் ஒருநாளைக்கு ஒரு மி.மீ என்ற அளவில் எலும்பு சவ்வு போன்று நீளும், அப்படியென்றால் ஒரு செ.மீ வளர பத்து நாட்களாகும்.

கோமதிக்கு 14 செ.மீ. வளர்வதற்கு 140 நாட்களாகியுள்ளது. நீட்சியடைந்த சவ்வு, எலும்பாக வலுப்பெற அதைவிட இருமடங்கு நாட்களாகும். அதாவது 280 நாட்கள்.

"இங்த சிகிச்சை முற்றிலும் முடிந்து, கோமதியின் கை இயல்பாக கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்டது. 2024, ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை செய்து, தற்போது அவர் இயல்பு நிலையில் உள்ளார்." என்கிறார் மருத்துவர் சுரேஷ்.

Suresh Suresh அறுவை சிகிச்சைக்கு பின் 100 நாட்களை கடந்து எலும்பு சவ்வு போன்று நீட்சியடைந்ததைக் காணலாம் 'ஆரோக்கியமாக இருக்கலாம்'

விபத்தில் எலும்பு சேதமடைந்தவர்களுக்கு மீண்டும் ஏற்கெனவே உள்ள அளவில் எலும்பை வளர வைப்பது தனியார் மருத்துவமனைகளில் நடந்தாலும், அரசு மருத்துவமனையில் குழந்தையிலேயே உள்ள இத்தகைய பிரச்னையை சரிசெய்தது குறிப்பிடத்தக்க சாதனை எனக்கூறுகிறார் சுரேஷ்.

இதே அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் தோராயமாக 1-1.5 லட்ச ரூபாய் செலவாகும்.

"கோமதியின் பாதிப்புக்குள்ளான கையின் எலும்பு முன்பு 14 செ.மீ. நீளம் தான். இப்போது வளர்ந்துள்ள 14 செ.மீ உடன் சேர்ந்து 28 செ.மீ ஆகி, இயல்பாக காட்சியளிக்கிறது. எலும்பு மட்டுமல்லாமல் அதனுடன் தோல், ரத்தக்குழாய், நரம்பும் நீண்டுள்ளது. திசுக்கள் சேதமடையாமல் அதை நீட்சியடைய வைக்க முடியும் என்பதுதான் இந்த சிகிச்சை முறை. இப்போது கோமதியால் எல்லோரையும் போன்றே ஆரோக்கியமாக எல்லா வேலைகளையும் செய்ய முடியும்."

வளைந்த கால்களையும் இந்த சிகிச்சையின்கீழ் நேராக்கி சரிசெய்ய முடியும் என்றும் 17 வயதுக்கு மேல் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்றும் கூறுகிறார் மருத்துவர் சுரேஷ்.

"எனினும், விபத்தில் ரத்தக்குழாய் முழுமையாக சேதமடையும்போது இது சாத்தியமில்லை." என்கிறார் அவர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.