பாட்டாளி மக்கள் கட்சி 36 ஆண்டுகளை கடந்தது தொடர்பாக, அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி தொண்டர்களுக்கு உணர்ச்சி பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில், “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே…” என தொடங்கி, “உங்களுக்காக நான் இருக்கிறேன்… எனக்கு உங்களை தவிர வேறு எவரும் இல்லை” என முடித்திருக்கும் அவர், தற்போதைய கட்சி நிலைமை மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து திறந்த உரையாடலை தொண்டர்களிடம் பகிர்ந்துள்ளார்.
ஜூலை 16ஆம் தேதி பாமாக்கா தனது 37வது ஆண்டில் காலடி வைக்கிறது. இதை முன்னிட்டு, கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அன்புமணி, தனது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாசுக்கு வணக்கம் தெரிவித்ததோடு, “உலகம் முழுவதும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாமக தொடங்கப்பட்ட நோக்கங்கள், கடந்த 36 ஆண்டுகளில் சமூக நலனுக்காக கட்சி செய்த பங்களிப்புகள் அனைத்தையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
மேலும், “36 ஆண்டுகள் கடந்து விட்டாலும் ஆட்சியைக் கண்டிருக்க முடியவில்லை என்பது ஒரு வருத்தம். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட உண்மையான நோக்கம் இன்னும் முழுமை பெறவில்லை. சமூக நீதி பயணம் தொடர வேண்டும்.
அதற்காக அனைத்து தொண்டர்களும் 2026 சட்டமன்ற தேர்தலைக் கண் முன் வைத்து முழுமையாக செயல்பட வேண்டும்” எனத் தொண்டர்களை தூண்டி எழுப்பியுள்ளார். கட்சி கொடி ஏற்றும் விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் உரிய அனுமதியுடன் பிராந்தியங்களில் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக, கடிதத்தின் கடைசி பத்தியில், “எனக்கு பாமக தொண்டர்களாகிய உங்களை தவிர வேறு எவரும் இல்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்து புதிய வரலாற்றை உருவாக்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். இது, அவரது தந்தை டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் தெரிவித்திருந்த “எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது” என்ற கருத்துக்கு பதிலாகவும், கட்சியின் இயக்கம் மற்றும் தொண்டர்களிடையே தனது உணர்வை வலியுறுத்தும் வகையிலும் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.