அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, 2 நாள் பரப்புரை பயணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதில், கோயில்களின் அறநிலையத்துறை நிதியை பயன்படுத்தி தொடங்கப்படும் கல்லூரிகள் குறித்து கடந்த வாரம் அவர் செய்த கருத்துரை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து “நான் கோயில் நிதியில் இருந்து கல்லூரி தொடங்கவே கூடாது எனப் பேசவில்லை. மாணவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் திட்டங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே சுட்டிக் காட்டினேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “அறநிலையத்துறையின் பணத்தை எடுத்தால் மாணவர்களுக்கு முழுமையான நலத்திட்டங்கள் அமைய வாய்ப்பு குறையும். அதற்காகத்தான் அப்படி சொன்னேன். ஆனால் அதை அரசியல் ஆக்கி ‘எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு’ என கூறுவது தவறு” எனத் தெரிவித்தார். மேலும் அறநிலையத்துறை நிதி சார்பில் கல்லூரிகள் கட்டக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியது பூதாகரமான பிரச்சனை ஆக வெடித்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.