துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!
Webdunia Tamil July 27, 2025 11:48 PM

ஹைதராபாத்தை சேர்ந்த 24 வயது இளம் பெண் அமீனா பேகம், துபாயில் உள்ள அழகு நிலையத்தில் வேலை கிடைத்ததாக கூறி புறப்பட்ட நிலையில், அங்குள்ள விமான நிலையத்தில் இறங்கியதுமே கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமீனா பேகம் ஒரு உள்ளூர் பயண முகவர் மூலம் துபாய் சென்றடைந்திருக்கிறார். ஆனால், துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் எடுத்து சென்ற பையில் போதைப்பொருட்கள் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

அமீனாவின் தாயார், அந்த பையில் என்ன இருந்தது என்பது தனது மகளுக்கு தெரியாது என்றும், துபாயில் ஒரு குறிப்பிட்ட நபரிடம் அதை ஒப்படைக்கச்சொல்லப்பட்டதாகவும் கூறுகிறார். மேலும், தனது மகளை பாதுகாப்பாக திரும்பக் கொண்டுவர வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமீனாவை அனுப்பிய பயண முகவர்தான் அந்த பையை அவரிடம் கொடுத்ததாகவும், எனவே அந்த முகவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரியுள்ளனர். தற்போது அமீனா துபாய் சிறையில் இருக்கும் நிலையில், அவரை மீட்க அவரது குடும்பத்தினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.