கேரள மாநிலம் அலப்புழா மாவட்டம் செர்தலா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், இளைஞர் ஒருவர் விஷப்பாம்பு கடித்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செர்தலா நகராட்சி வார்டு எண் 23-ல் உள்ள ஜெயராஜ் (வயது 26) குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற போது, நம்பர் ஒன்று தளத்தில் கிடந்த விஷப்பாம்பை காலால் மிதிக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் பாம்பு ஜெயராஜை கடித்தது.
தகவல் அறிந்ததும் உடனடியாக செர்தலா தாலுக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெயராஜ், பின்னர் மேல சிகிச்சைக்காக அலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் பணி நடைபெற்று வந்த இடத்தில் இருந்து பாம்பு அங்கு வந்திருக்க வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஜெயராஜ், பி.டெக் பட்டம் முடித்ததையடுத்து இஸ்ரோவில் பயிற்சி முடித்தவர் என்பதும், அந்த பயிற்சியில் இருந்த நண்பரின் திருமணத்துக்காக நண்பர்களுடன் சேர்ந்து சென்று கொண்டிருந்த தருணத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.