பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதன்படி சுமார் 50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்னர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் திட்டத்துடன் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், வரைவு பட்டியலை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையின் போது, நீதிபதிகள், “பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட தடை விதிக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.
அதேசமயம், SIR பணியின் கீழ் வாக்காளர்களின் அடையாளத் தரவாக ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.
மேலும், “ரேஷன் கார்டுகளில் அடிக்கடி முறைகேடு ஏற்படக்கூடும் என்ற எண்ணம் இருந்தாலும், ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகள் குறிப்பிடத்தக்க அளவு நம்பகத்தன்மையுடன் இருக்கின்றன” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.