சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை
Webdunia Tamil July 29, 2025 09:48 PM

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலின் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவி வருவதால், பக்தர்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த வாரம் சதுரகிரி கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவ தொடங்கியுள்ளது. வனத்துறையினர் உடனடியாக தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாக முயன்றனர்.

நேற்று சாப்டூர் வனச் சரகம் மற்றும் வருசநாடு வழியாக சதுரகிரி செல்லும் பாதைகளில் தீ தீவிரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீ வேகமாக மரங்களுக்கு பரவி வருகிறது. இதனால், வனவிலங்குகளின் வாழ்விடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், வனவிலங்குகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீ முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல தடை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.