உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் சாலை விபத்தில் படுகாயமடைந்த 30 வயதான சுனில் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஹசன்பூர் காலா கிராமத்தைச் சேர்ந்தவர்.
சம்பவ நாளன்று இரவு சிசௌலி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றபோது சுனில் மோட்டார் வாகனம் மோதி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை இரவு 12.30 மணிக்கு லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்பட்டார்.
ஆனால், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஜூனியர் மருத்துவர் ஒருவர், சிகிச்சையிலே ஈடுபடாமல் நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்ததாக சுனிலின் உறவினர்கள் கூறுகின்றனர். அதிகாலையில் காலை 8 மணிக்கு சுனில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், தூங்கிக் கொண்டிருந்த டாக்டரின் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சம்பவத்தைக் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஞானேஷ்வர் டோங்க் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில், ஜூனியர் டாக்டர்கள் பூபேஷ் மற்றும் அனிகேத் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மருத்துவர்களின் பொறுப்பின்மையையும், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் அலட்சியத்தையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. மருத்துவ சேவைகளில் மனித உயிர்கள் முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தும் இந்த நிகழ்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.