நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை நேரி்ல் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். திருமாவை கண்டதும் கவினின் பெற்றோர் கதறி அழுதனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “நெல்லையில் நடந்துள்ள ஆணவக்கொலை மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை அளிக்கிறது. சுர்ஜித் தாயார் பெயர் FIR-ல் இடம்பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல்துறை தயங்குவது ஏன் என தெரியவில்லை. தேசிய அளவில் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இயற்றப்பட வேண்டும். ஒன்றிய அரசு இந்த கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. தமிழ்நாடு உட்பட எந்த மாநில அரசுகளும் இதனை கண்டு கொள்ளவில்லை.ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற அமித்ஷாவிடம் கோரிக்கை மனு அளித்துளோம். இச்சட்டத்தை இயற்றலாமா? என மாநில அரசுகளின் கருத்தை ஒன்றிய அரசு கேட்டது. அதற்கு தமிழ்நாடு அரசு கூட பதிலளிக்கவில்லை என்பதில் எனக்கு அதிர்ச்சியே! நெல்லையில் நடைபெற்ற ஆணவக்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் நேர்மையுடன் விசாரிக்க வேண்டும்.
கவினை நயந்து பேசி நம்ப வைத்து குறிப்பிட்ட, ஒரு இடத்துக்கு வரவழைத்து கொடூரமாக கொலை செய்து இருக்கிறார்கள். கவினை தனியொருவராக கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகு கவின் தாயாரை 3 மணி நேரம் காவல்நிலையத்தில் காக்க வைத்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு உரிய நீதியும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார்.