புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் 33 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சூழலில் அவரது கணவர் தான் அப்பெண்ணை அடித்துக் கொலை செய்து விட்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த பெண்ணின் உடலை போலீசாரை எடுக்க விடாமல் தடுத்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து தற்போது இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடிக்கு அடிமையான கண்ணன் காசு கேட்டு பிரியாவிடம் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை முதலே கண்ணனுக்கும் பிரியாவிற்கும் இடையே வாக்குவாதம் மற்றும் சண்டை நடந்துள்ளது. நேற்று மாலை கொத்தமங்கலம் மையம்கூனரி குடியிருப்பு பகுதியில் இருக்கக்கூடிய கண்ணனின் ஓட்டு வீட்டில் பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து கண்ணன் வீட்டிற்கு வந்த திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த பிரியாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது கணவர் தான் பிரியாவை அடித்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டி பிரியாவின் சடலத்தை போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு எடுத்து செல்வதைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஆத்திரமடைந்த பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொத்தமங்கலம் - கீரமங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், ஆலங்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் கீரமங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பிரியாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனதால் அதுவரையிலும் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கொத்தமங்கலம் கீரமங்கலம் சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.