ஒடிஷா மாநிலத்தில், 15 வயது சிறுமி தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், “அந்த குழந்தை உயிருடன் திரும்ப வரக்கூடியதானால், நான் 100 முறை ராஜினாமா செய்யத் தயார். ஆனால், இந்த சம்பவத்தில் அரசியல் செய்யும் நோக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது” என துணை முதல்வர் பிரவதி பரிதா தெரிவித்துள்ளார். அந்த சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பின் அவர் இவ்வாறு கூறினார்.
தனது தொகுதியான நீமபாரா பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமியை மீட்க அரசு முழு முயற்சியும் எடுத்ததாக பரவதி கூறினார். “மருந்துகள் கூட வெளியிலிருந்து வாங்கப்பட்டன. சிறுமியை காப்பாற்ற நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், அவரது உயிரை காக்க முடியவில்லை. இதற்கு அரசியல் கலக்க வேண்டாம். அந்த குடும்பத்துக்கு அரசு ஆதரவாக நிற்கும்” என கூறினார்.
முதலில், புரி மாவட்டத்தில் உள்ள பார்கவி ஆற்றங்கரையில் அந்த சிறுமி மூவரால் கடத்தி தீக்குளிக்கவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிறுமியின் தந்தை, தனது மகள் மன அழுத்தத்தில் தானாகவே தீ வைத்து கொண்டதாக கூறியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை தெரியவந்த தகவல்களில், மற்றவர் ஒருவர் சம்பந்தப்பட்டதாக தெரியவில்லை” என போலீசார் அறிவித்துள்ளனர். 70% தீக்காயங்களுடன் இருந்த அந்த சிறுமி, டெல்லி AIIMS மருத்துவமனைக்கு ஏர்லிப்ட் செய்யப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.