திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு.. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகளை காணவில்லை. 4 பேர் பலி..!
Webdunia Tamil August 06, 2025 03:48 AM

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள ஹர்சிலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள தராலி கிராமத்தில், இன்று பிற்பகல் 1:45 மணியளவில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 4 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்த காட்சிகளில், மலைகளில் இருந்து நீர் மற்றும் பாறை துண்டுகள் வெள்ளம்போல் அடித்துவரப்பட்டு, பல வீடுகளை அடித்து செல்வது பதிவாகியுள்ளது. இந்த நிலச்சரிவு, முக்ஃபாவில் உள்ள கங்கா ஜி-யின் குளிர்கால வாழிடமான கங்கோத்ரி தாம் கோயிலுக்கு மிக அருகில் நடந்துள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே இந்திய ராணுவ முகாம் இருந்ததால், ராணுவ வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, 15 பேரை காப்பாற்றியுள்ளனர்.

ஹர்சில் பகுதியில் உள்ள கீர் காத் கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதால் சேதத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள் சேதம் அடைந்ததாகவும், "ஹோட்டல்கள் முதல் சந்தைகள் வரை எல்லாம் அழிந்துவிட்டன என்றும், இதுபோன்ற ஒரு பேரழிவை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று நேரில் கண்டவர் ஒருவர் கூறியுள்ளார்

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.