6 மாதங்களாகியும் அணுவும் அசையவில்லை, துரோக மாடல் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவு தானா? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் ககன்தீப்சிங் பேடி குழு அமைக்கப்பட்டு 6 மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால், ககன்தீப்சிங் பேடி குழு இன்னும் அதன் அடிப்படைப் பணிகளைக் கூட இன்னும் தொடங்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் திமுக அரசுக்கு துளியளவும் இல்லை என்பதையே அதன் செயல்பாடுகள் காட்டுகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் குழுவை கடந்த பிப்ரவரி 4&ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு அதன் பரிந்துரை அறிக்கையை 9 மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் 3&ஆம் நாளுடன் குழு அமைக்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அடுத்த 3 மாதங்களில், அதாவது நவம்பர் 3&ஆம் தேதிக்குள் அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்புகளுடனும் குறைந்தது ஒருமுறையாவது ககன்தீப் சிங் பேடி தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட குழு கலந்தாய்வு நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், ககன்தீப்சிங் பேடி குழு இன்று வரை தனக்குக் கொடுக்கப்பட்ட பணியில் அணுவைக் கூட அசைத்ததாகத் தெரியவில்லை. குழுவின் பணி வரம்புகள் அறிவிக்கப்பட்டு விட்டதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். ஆனால், அந்த பணி வரம்புகள் என்ன? என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசு அந்த அளவுக்கு ரகசியம் காக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஆட்சி நடந்தாலும், கொள்கை முடிவுகளை எடுப்பதில் அரசு இயந்திரம் எவ்வாறு செயல்படும் என்பது தமிழக அரசியலை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஒரு திட்டத்தைத் செயல்படுத்த வேண்டும் என்று அரசு முடிவு செய்து விட்டால், அதற்கேற்ற வேகத்தில் அரசால் அமைக்கப் பட்ட குழு புயலாக செயல்படும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை உயர்த்துவதென்று கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழக அரசு தீர்மானித்தது. ஆனால், அதுகுறித்து அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்பதால், பொதுமக்களிடம் கருத்துக் கேட்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அமைக்கப்பட்ட ஒரு சில நாள்களிலேயே கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மக்களின் எதிர்ப்பையும் மீறி மின்சாரக் கட்டணம் உயர்த்தப் பட்டது. அரசு விரும்பினால் அரசு இயந்திரம் நாலுகால் பாய்ச்சலில் அது விரும்பும் இலக்கை எட்டிவிடும். ஆனால், அரசுக்கு விருப்பமில்லாத ஒரு கொள்கை முடிவை தீர்மானிப்பதற்காக ஒரு குழு அமைக்கப் பட்டால் அது ஆமை வேகத்தில் தான் அசைந்து செல்லும். அப்படித் தான் ககன்தீப்சிங் பேடி குழுவும். அவரது இடத்தில் வேறு எவர் இருந்தாலும் இது தான் நடக்கும். காரணம், அனைத்துக் குழுக்களுக்கும் தலைவராக எவர் நியமிக்கப்பட்டாலும் அவற்றை இயக்குவது அரசு தான். அதனால் தான் ககன்தீப் சிங் பேடி பொறுப்பான, திறமையான அதிகாரி என்றாலும் அவரது குழு அசையாமல் கிடப்பதற்கு இதுவே காரணம் ஆகும். ஒருவேளை ககன்தீப்சிங் பேடி குழு அதன் அறிக்கையை குறித்த காலத்தில் தாக்கல் செய்து விட்டாலும் கூட, அதை அரசு பெற்றுக் கொள்ளாது. மாறாக, ககன்தீப்சிங் குழுவின் பதவிக் காலத்தை மேலும் சில மாதங்களுக்கு நீட்டித்து, தமது ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் திமுக அரசு பார்த்துக் கொள்ளும்.
தமிழக அரசு நினைத்திருந்தால், எப்போதோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும். அதற்கு நிதிநிலை ஒரு தடையல்ல. மாறாக, தங்களை ஆட்சியில் அமர்த்தியவர்கள் தான் என்றாலும் கூட, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த திமுக அரசுக்கு மனமில்லை. அதற்காகத் தான் ககன்தீப் சிங் குழுவையே அரசு அமைத்தது. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் இ.ஆ.ப. அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு ஒன்றை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தார். அக்குழு எந்த பணியையும் செய்யாத நிலையில், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் இன்னொரு குழுவை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்தார். அந்தக் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று தாக்கல் செய்து விட்டது. அதன் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய திமுக அரசு புதிய குழுவை அமைத்ததன் நோக்கமே அரசு ஊழியர்களை ஏமாற்றுவது மட்டும் தான். திமுக அரசின் இந்த துரோக மனப்பான்மையால் தான் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது பகல்கனவாகவே போய்விடுமோ? என்ற ஐயம் எழுகிறது. மீண்டும் சொல்கிறேன்... தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை. இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால், தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அமைக்கப்படவிருக்கும் புதிய அரசில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த பா.ம.க. உறுதியான நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.