வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் கடந்த பத்தாண்டுகளாக ஏராளமான கடல் நட்சத்திரங்கள் (சீ ஸ்டார்ஸ்) மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் நட்சத்திரங்கள், பல இனங்களில் உள்ளன. இவை ஆரஞ்சு, ஊதா, பழுப்பு, பச்சை உள்ளிட்ட பல வண்ணங்களில் காணப்படுகின்றன.
2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த கடல் நட்சத்திரங்கள் மர்மமான நோயால் பாதித்து, 20-க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்துள்ளன. இதில் சூரியகாந்தி கடல் நட்சத்திரங்கள் (சன்ஃபிளவர் சீ ஸ்டார்ஸ்) மிகவும் பாதிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் 90% இனங்கள் அழிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ஹகாய் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த கடல் நோய் சூழலியல் நிபுணர் அலிஸ்ஸா கெஹ்மன் கூறுகையில், “இந்த நோய் மிகவும் கொடூரமானது. ஆரோக்கியமான கடல் நட்சத்திரங்களுக்கு நேராக விரிந்த கைகள் இருக்கும். ஆனால் இந்த நோயால் புண்கள் உருவாகி பின்னர் அவற்றின் கைகள் உதிர்ந்து விடுகின்றன,” என்றார்.
நேச்சர் இகாலஜி அண்ட் எவல்யூஷன் இதழில் வெளியான ஆய்வு அறிக்கையின்படி, இந்த நோய்க்கு காரணம் விப்ரியோ பெக்டெனிசிடா என்ற பாக்டீரியா என்பது உறுதியாகியுள்ளது. இந்த பாக்டீரியா மற்ற கடல் உயிரினங்களையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் நட்சத்திரங்களின் உறுப்புகளைச் சுற்றியுள்ள திரவமான கோலோமிக் திரவத்தில் இந்த பாக்டீரியா இருப்பது உறுதியாகியிருக்கிறது.
இந்த கண்டுபிடிப்பு, கடல் நட்சத்திரங்களை காப்பாற்றுவதற்கு புதிய வழிகளை வழங்குகிறது. ஆரோக்கியமான கடல் நட்சத்திரங்களை அடையாளம் கண்டு, அவற்றை மறுவாழ்வு செய்யவோ, இனப்பெருக்கம் செய்யவோ, அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளில்இருந்து மாற்றவோ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பு, கடல் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மீட்டெடுக்க உதவும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மனிதர்களே இல்லை... பென்குயின்கள் வசிக்கும் தீவுக்கு வரி விதித்த ட்ரம்ப்! - எங்கே தெரியுமா?