ஜம்மு-காஷ்மீரைச் சுற்றியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் பரவிய நிலையில், இந்திய ராணுவம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
எல்லைப் பகுதிகளில் எந்தவிதமான போர் நிறுத்த உடன்பாட்டின் மீறலும் நடைபெறவில்லை எனவும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில், 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி, இந்திய அரசு 370வது அரசியலமைப்பு பிரிவை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசங்களாக அறிவித்ததற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5ந் தேதியை “யூம்-இ-இஸ்தெசல்” (Youm-e-Istehsal) தினமாக அனுசரித்து வருகிறது.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் மற்றும் மக்கள், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உறுதியான பதிலை அளிக்கத் தயாராக உள்ளனர்” என தெரிவித்தார். மேலும், எல்லை நாடுகளுடன் நட்பு உறவை விரும்பும் பாகிஸ்தான், மோதலுக்குப் பதிலாக உரையாடல் மற்றும் ராஜதந்திர தீர்வுகளை விரும்புவதாகவும் அவர் கூறினார்.
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி காஷ்மீர் மக்களின் விருப்பத்தை மதித்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்திற்கு முக்கியக் காரணமே காஷ்மீர் பிரச்சனை எனவும் ஷெரீப் வலியுறுத்தினார்.
“காஷ்மீர் பிரச்சனைக்கு நியாயமான, நீதி சார்ந்த தீர்வுதான் பாகிஸ்தானின் வெளிநாட்டு கொள்கையின் முக்கிய நோக்கம்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்துகள், இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் மீண்டும் பதற்றமடைந்து வருவதைக் காட்டுகின்றன.