ரூ.20 மட்டுமே இருந்த வங்கிக் கணக்கில் திடீரென பலநூறு கோடி ரூபாய் பணம் வரவு - இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?
BBC Tamil August 09, 2025 04:48 PM
BBC திலீப் சிங், உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவின் டான்கவுரில் வசிக்கிறார்

உத்தரபிரதேசத்தின் டான்கவுர் கிராமத்தில் வசிக்கும் இளைஞரின் வங்கிக் கணக்கில் திடீரென பல கோடி ரூபாய் பணம் வந்ததாக வெளியான தகவல்கள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

20 வயதான தீபு என்கிற திலீப் சிங் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கினார்.

ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று, வங்கியின் மொபைல் செயலியை திலீப் இயக்கியபோது, அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு எல்லையே இல்லை.

இதயம் படபடக்க அது உண்மைத்தானா என்று கவனத்துடன் பார்த்தார்.

அவரது சேமிப்புக் கணக்கில் இருந்த பண இருப்பு 10,01,35,60,00,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,00,00,299 ரூபாய்! மீண்டும் மீண்டும் வங்கிக் கணக்கை பார்த்து பண இருப்பை உறுதி செய்துக் கொண்டதும் அவருக்குத் தலைசுற்றியது.

Getty Images இந்த வங்கிக் கணக்கு திலீப் சிங்கின் பெயரில் உள்ளது

திலீப் மொபைல் செயலியை மூடி மூடித் திறந்தார், பலமுறை கடவுச்சொல்லை மாற்றினார். ஆனால் பல கோடி ரூபாய்கள் அவரது கணக்கில் இருப்பாக இருந்தது.

பிபிசியிடம் பேசிய திலீப், "அந்தத் தொகை மிகப் பெரியதாக இருந்ததால் என்னால் அதை எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை. ஏனென்றால் அந்த எண்ணின் இலக்கங்கள் நீளமாக இருந்தது. அது 37 இலக்கங்கள் நீளமாக இருந்தது. அந்த எண்ணை கூகுளில் போட்டு என் கணக்கில் இருக்கும் தொகை எவ்வளவு என்று தெரிந்துக் கொள்ள முயன்றேன், ஆனால் கூகுளாலும் எந்த பதிலும் கொடுக்க முடியவில்லை." என்று கூறினார்.

"நான் இதை பலருக்கும் காட்டினேன். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை யாராலும் எண்ண முடியவில்லை" என்று திலீப் கூறுகிறார்.

திலீப், கேமரா முன் இந்தத் தொகையை எண்ண முயற்சித்தார். பத்து பில்லியன் வரை எண்ணிய பிறகு, "இதற்கு மேல் எப்படி எண்ணுவது என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார்.

மனதில் ஏற்படும் குழப்பம்

திலீப் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். வேலையில்லாமல் இருக்கும் திலீப், வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.

தனது வங்கிக் கணக்கில் கோடி கணக்கான ரூபாய் இருப்பதைக் கண்ட திலீப், அது ஒரு தொழில்நுட்பப் பிழையாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் நினைத்தார். ஆனால் மீண்டும் மீண்டும் சரிபார்த்தபோது, அதே தொகை தெரிந்தது.

''இது ஒரு மோசடியாக இருக்கலாம், ஒருவேளை யாராவது கணக்கை ஹேக் செய்து தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. உண்மையில் இந்த பணம் என் வங்கிக் கணக்கில்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, வேறு ஒரு கணக்கிற்கு 10,000 ரூபாயை மாற்ற முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. 'உங்கள் வங்கியில் தொழில்நுட்ப சிக்கல்' என்ற செய்தியே பல முறை வந்தது, என் கணக்கை வங்கி முடக்கிவிட்டது".

இவ்வளவு பணத்தைப் பார்த்ததும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. லாட்டரி கிடைத்துள்ளதோ என்றும் நினைத்துவிட்டேன், ஆனால் எவ்வளவு பெரிய லாட்டரியாக இருந்தாலும் இவ்வளவு பெரியதாக இருக்க முடியாது" என்று கூறுகிறார் திலீப்.

திலீப் சிங்கின் கணக்கில் பில்லியன் கணக்கான ரூபாய் வருவதற்கு முன்பு அவரது வங்கிக் கணக்கில் எவ்வளவு இருப்பு இருந்தது என்று கேட்டபோது, "என் கணக்கில் 10-20 ரூபாய் மட்டுமே இருந்தது" என்று கூறினார்.

Getty உத்தரபிரதேச காவல்துறையின் கூற்றுப்படி, தொழில்நுட்பப் பிழை காரணமாக திலீப் சிங்கின் வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பது தெரிகிறது வங்கியின் தரப்பு

திலீப், கோடக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் சேமிப்புக் கணக்கைத் தொடங்கியிருந்தார். கணக்கில் பெருமளவிலான பணம் வந்ததும், திலீப் தானே வங்கிக்கு சென்று தன்னுடைய வங்கிக் கணக்கில் கோடி கணக்கான ரூபாய் வந்து சேர்ந்தது குறித்துத் தகவல் தெரிவித்தார்.

"கவலைப்பட ஒன்றுமில்லை. காட்டப்படும் தொகை உண்மையான பணம் அல்ல, தொழில்நுட்பப் பிழை" என்று வங்கி ஊழியர்கள் திலீப்பிடம் கூறினார்கள்.

"காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பணம் அனுப்பும் செயலி மற்றும் வங்கி கணக்கு அறிக்கையை சரிபார்த்த பிறகு, அந்த இளைஞரின் கணக்கில் இருப்பு பூஜ்ஜியமாக உள்ளது" என்று டன்கவுர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சோஹன்பால் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

"காவல்துறையினரும் வங்கியைத் தொடர்பு கொண்டுள்ளனர். தொழில்நுட்பப் பிழை காரணமாக, இந்தத் தொகை செயலியில் காட்டப்படுகிறது. " என்று அவர் கூறினார்.

BBC திலீப் சிங்கின் பக்கத்து வீட்டுக்காரர் சுமன் தேவி பக்கத்து வீட்டுக்காரர்கள் எண்ணம்

திலீப்பின் கணக்கில் பில்லியன் கணக்கான ரூபாய் வந்து சேர்ந்த செய்தி டான்கவுர் முழுவதும் பரவியுள்ளது என்று திலீப் சிங்கின் பக்கத்து வீட்டுக்காரர் சுமன் தேவி சொல்கிறார்.

இந்தக் கதையை ஊரிலுள்ள அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்களும் பல நாட்களாக திலீப்பைச் சந்திக்க வருகிறார்கள்.

திலீப்பின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், "என் பெயரும் திலீப் தான். எனவே, என் கணக்கில் தான் பணம் வந்திருக்கிறதா என்று என்னையும் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் ஏழைகள். யாராக இருந்தாலும், வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை வந்தால் ஆச்சரியம் ஏற்படுவது இயல்புதான்" என்று கூறுகிறார்.

"திலீப்பின் வங்கி இருப்பின் ஸ்கிரீன் ஷாட்களை அவரது நண்பர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றுகிறார்கள், அவற்றில் சில பதிவுகள் வைரலாகி வருகின்றன" என்று அவர் கூறுகிறார்.

"திலீப்பின் பெற்றோர் இறந்துவிட்டார்கள், அவர் தனது பாட்டியுடன் வசிக்கிறார். அவருக்கு வேலை இல்லை. அவருக்கு ஏதாவது உதவி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.