வாயை திறந்தபடி தூங்குவது நோயின் அறிகுறியா? மருத்துவரை அணுகுவது எப்போது?
BBC Tamil August 10, 2025 07:48 PM
Getty Images பலரும் தூங்கும்போது வாயைத் திறந்து கொண்டு தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தூங்கும் போது தனித்தனியான பழக்கவழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.

சிலர் தடிமனான தலையணையை வைத்து தூங்குவார்கள். சிலர் மெல்லிய தலையணையில் தூங்க விரும்புவார்கள்.

வானிலை எப்படியிருந்தாலும், சிலரால் போர்வை இல்லாமல் தூங்க முடியாது. சிலருக்கு அப்படி தூங்க பிடிக்காது.

ஆனால் நன்றாக தூங்கத் தொடங்கிவிட்டால், நம்மால் பல விஷயங்களைக் கவனிக்க முடியாது.

அதில் ஒன்று தான் வாயைத் திறந்து கொண்டு தூங்குவது.

தூங்கும் போது உங்கள் வாய் திறந்தே இருக்கிறதா? யாராவது உங்களிடம், 'நீ தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருப்பாய்' என்று சொன்னதுண்டா?

அப்படியானால், தூக்கத்தில் வாயைத் திறந்து வைத்திருப்பதற்கு காரணம் என்ன ? அது எதைக் குறிக்கிறது? இது ஏதேனும் உடல்நல அபாயங்களையும் சுட்டிக்காட்டுகிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

தூக்கத்தின் போது வாயைத் திறந்துகொண்டே தூங்குதல் Getty Images பொதுவாக பல குழந்தைகள் தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருப்பார்கள், இதற்குப் பின்னால் ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது (குறியீட்டு படம்)

பல நேரங்களில், கடினமான வேலைகளைச் செய்யும்போது, மக்களுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதற்காக, அவர்கள் மூக்கு மட்டுமல்லாமல் வாய் வழியாகவும் சுவாசிக்கிறார்கள்.

ஓடும்போது அல்லது கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும்போது, மக்கள் வாய் வழியாக மூச்சு வாங்குவதைக் காணலாம்.

ஆனால், பொதுவாக தூங்கும்போது, நம் கண்களைப் போலவே வாயும் மூடியிருக்கும்.

தூக்கத்தில், நாம் மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். நிம்மதியான நிலையில் இருப்பதால், வேகமாக சுவாசிக்க வேண்டிய தேவை இருப்பதில்லை.

ஆனால் தூங்கும்போது பலருடைய வாய் திறந்தே இருக்கும். அப்போது, அவர்கள் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள்.

இதற்கான காரணத்தை அறிய, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) நுரையீரல், தீவிர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவத் துறையின் மருத்துவர் விஜய் ஹட்டாவிடம் பேசினோம்.

"வாயைத் திறந்து கொண்டே தூங்குவது மிகவும் பொதுவானது. பலரும் இப்படித்தான் தூங்குகிறார்கள். வாயைத் திறந்து கொண்டே தூங்குவது எந்த நோயின் அறிகுறியும் இல்லை" என்று விளக்கிய மருத்துவர் விஜய் ஹட்டா,

"மூக்கில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ அல்லது மூக்கு அடைத்திருந்தாலோ, மக்கள் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள்"என்று கூறினார்.

மூக்கு அடைப்புக்கு ஒரு பொதுவான காரணம் கடுமையான சளி. ஆனால், சில சமயங்களில் டான்சில் பெரிதாவதால் மூக்கு அடைப்பு ஏற்படுகிறது. இது குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு அடினாய்டுகள் அல்லது டான்சில் பெரியதாக இருக்கும், இவை தொற்றுநோயை எதிர்த்து போராட உதவுகின்றன.

இதனால் மூக்கில் லேசான அடைப்பு ஏற்படுகிறது. அதனால்தான் பல குழந்தைகள் வாயைத் திறந்து கொண்டே தூங்குகிறார்கள்.

வயது ஏற ஏற, டான்சில் சிறிதாகி, இந்தப் பழக்கம் மெல்ல மறைந்துவிடும்.

  • செல்போன், கணினியை பார்ப்பது குழந்தைகளின் மூளையை பாதிக்குமா? அறிவியல் ஆய்வில் கண்ட உண்மை
  • தீவிர உடற்பயிற்சி செய்யாதவர்கள் புரோட்டீன் பவுடர் சாப்பிடலாமா? - உணவியல் நிபுணர்கள் கூறுவது என்ன?
  • எனர்ஜி டிரிங்க் பாட்டிலில் வோட்கா - தவறுதலாக விற்பனைக்கு வந்ததாக எச்சரிக்கை
எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? Getty Images நாம் தூங்கும் போது நிம்மதியான நிலையில் இருக்கிறோம், எனவே பொதுவாக வாய் வழியாக சுவாசிக்க வேண்டிய அவசியமில்லை (குறியீட்டு படம்)

செப்டம் குருத்தெலும்பு, நாசி செப்டமின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. இது நாசி செப்டம் குருத்தெலும்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாசி செப்டம் நாசி குழியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது.

"செப்டம் குருத்தெலும்பு இயற்கையாகவே சற்று வளைந்திருக்கும், முற்றிலும் நேராக இருக்காது. ஆனால், அது அதிகமாக வளைந்தால், மூக்கின் ஒரு பகுதி அடைபடுகிறது. இதனால், விலகிய நாசி செப்டத்தின் (DNS) காரணமாக, மக்கள் வாய் வழியாகவும் சுவாசிக்கத் தொடங்குகிறார்கள்" என மருத்துவர் விஜய் ஹட்டா கூறுகிறார்.

இந்தப் பிரச்னை தீவிரமானால், செப்டோபிளாஸ்டி எனும் அறுவை சிகிச்சை மூலம் இதை சரிசெய்ய முடியும்.

ஆனால், தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருந்தால் சுவாசம் உரத்த சத்தமாக இருந்தாலோ அல்லது குறட்டை விடுவதாக இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

  • நாகத்தை கடித்துக் கொன்ற ஒரு வயது குழந்தை - என்ன நடந்தது?
  • நாட்டு மாட்டுப் பாலில் தயாராவதாக கூறப்படும் ஏ2 நெய் கூடுதல் நன்மை தரும் என்பது உண்மையா?
  • பேரீச்சம்பழம் சாப்பிடும் போது என்ன கவனிக்க வேண்டும்?
எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்? Getty Images வாயைத் திறந்து கொண்டே சுவாசிப்பது வாய் சுகாதாரத்தைப் பாதிக்கிறது (மாதிரி படம்)

"வாய் வழியாக சுவாசிப்பது வாயில் வறட்சியை ஏற்படுத்தும். இது வாய் சுகாதாரத்தைப் பாதிக்கலாம்" எனக் கூறுகிறார் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையின் நுரையீரல், தீவிர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவத் துறையின் தலைவர் மருத்துவர் ரோஹித் குமார்.

ஒருவர் வாயைத் திறந்து கொண்டு தூங்கினால் அல்லது வாய் வழியாக சுவாசித்தால், அந்த நேரத்தில் குறட்டை சத்தம் கேட்டால், அது வேறு ஏதேனும் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், அதற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு மருத்துவரைத் தொடர்புகொள்வது நல்லது.

"ஒருவருக்கு இருமல், சளி அல்லது வேறு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாய் திறந்து தூங்கினால், முதலில் காது, மூக்கு, தொண்டை (ENT) பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பிறகு தான் மேற்கொண்டு பரிசோதனைகள் செய்ய முடியும்"என்று மருத்துவர் ரோஹித் குமார் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.