சப்பாத்திக்கள்ளி பழத்தின் அறியப்படாத நன்மைகள் – எந்தெந்த உடல் பிரச்னைகளுக்கு பலன் தரும்?
BBC Tamil August 11, 2025 03:48 AM
Getty Images சப்பாத்திக்கள்ளி பழம், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் நிரம்பிய ஒரு தாவர பொக்கிஷம்

சப்பாத்திக்கள்ளி பழம் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் நிரம்பிய தாவர பொக்கிஷம். பண்டைய காலத்திலிருந்து பல்வேறு கலாசாரங்களில் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தில் கூட அதன் பல நன்மைகள் ஆராய்ச்சிகளில் வெளிப்படுகின்றன.

எகிப்தில் இதை 'டின் ஷூகி' என்று அழைக்கின்றனர், அதேசமயம் கிழக்கு அரபு நாடுகளில் 'சபார்' அல்லது 'சபர்' என்று அழைக்கின்றனர்.

சப்பாத்திக்கள்ளி பழங்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறங்களில் உள்ளன. சில பச்சை, சில மஞ்சள், சில சிவப்பு, சில ஊதா நிறத்திலும் இருக்கின்றன. இந்த பழங்களின் சுவை அல்லது ருசியும் வேறுபடுகிறது.

மஞ்சள் நிற சப்பாத்திக்கள்ளி பழம், சிவப்பு நிற பழங்களை விட அதிக சுவையாக இருப்பதாக எகிப்தில் பழத்தை விற்கும் சய்யத் (அபூ யாசின் என்றும் அழைக்கப்படுகிறார்) சொல்கிறார்.

"பெண் காட்டு சப்பாத்திக்கள்ளி பழம், ஆண் பழத்துடன் ஒப்பிடும்போது அதிக இனிப்பும் மென்மையும் கொண்டது." என்கிறார் எகிப்தின் தெற்கு பகுதியை சேர்ந்த அபூ யாசின்.

ஆண் பழங்களில் சில உயர்ந்த புடைப்புகள் மற்றும் மகரந்த தூள் எச்சங்கள் இருப்பதைக்கொண்டு ஆண் மற்றும் பெண் பழங்களை எளிதாக அடையாளம் காண முடிகிறது என அவர் தெரிவித்தார்.

இந்த பழத்தை விற்கும் அபு யாசின், இந்த தொழில் லாபகரமானதாக இல்லை என்கிறார்.

"பண்ணையிலிருந்து நேரடியாக வாங்கும் வியாபாரிக்குதான் லாபம் கிடைக்கிறது. தெருவில் விற்கும் என்னைப் போன்றவர்களுக்கு வெகு குறைவான வருவாய்தான் அதுவும் ஒன்றரை மாத சீஸனின் போது கிடைக்கிறது," என்பது அவரது கூற்று.

ஆரோக்கிய பலன்கள் உள்ள இயற்கைப் பழங்கள்

எளிதாக கிடைப்பதால் எகிப்தில் சப்பாத்திக்கள்ளி பழம் 'ஏழைகளின் பழம்" என அறியப்படுகிறது. அதன் முக்கியத்துவம் காரணமாக துனிஷியாவில் அது 'சுல்தான் கலா' (பயிர்களின் அரசன் என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறது.

ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் உள்ள சப்பாத்திக்கள்ளி பழம் உண்மையிலேயே ஒரு தாவர பொக்கிஷம்,

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில் இந்த பழத்தில் பேரிக்காய், ஆப்பிள், தக்காளி மற்றும் வாழைப்பழத்தை விட இரு மடங்கு அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

Getty Images சப்பாத்திக்கள்ளி பழங்களை தொடர்ந்து உண்பதால், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்களின் செயல்பாடு மேம்படுகிறது.

இதில் வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீட்டாலின்கள் அதிக அளவில் உள்ளதுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வில், சப்பாத்திக்கள்ளி பழத்தை அதிக அளவில் உணவில் சேர்த்தால், இதய நோய்கள் (கொரோனரி ஆர்டரி நோய்) மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பழத்தில் உள்ள நார்ச்சத்து (ஃபைபர்) உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. மேலும், இந்த பழங்களை தொடர்ந்து உண்பதால், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்களின் செயல்பாடு மேம்படுகிறது.

FAO ஆய்வின்படி, இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இதனால் சிறுநீரக நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

முழுமையான உணவு, வலிமையான ஆரோக்கியம்

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, சப்பாத்திக்கள்ளி பழம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு மற்றும் ஸ்கர்வி (வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் நோய்) உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

பிபிசியிடம் பேசிய உணவியல் நிபுணர் மஜித் அல்-கதிப், சப்பாத்திக்கள்ளி பழம் செரிமான மண்டலம், இதயம் மற்றும் மன ஆரோக்கியத்திலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து (ஃபைபர்) குடல் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும், இந்த பழம் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்கிறார் கதிப்

இங்குதான் 'குடல்-மூளை தொடர்பு' (கட்-ப்ரெயின் ஆக்சிஸ்) என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது, அதாவது செரிமான மண்டலத்திற்கும் ஆரோக்கிய மனநிலைக்கும் உள்ள தொடர்பு. குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Getty Images

சப்பாத்திக்கள்ளி பழம் டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்கிறார் உணவியல் நிபுணர் மஜித் அல்-கதிப்.

இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பெக்டின், பழத்தில் உள்ள சர்க்கரையை மெதுவாக உறிஞ்சச் செய்கிறது, மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் இன்சுலின் வினை திறனை மேம்படுத்துகின்றன.

இது அழற்சி, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

சப்பாத்திக்கள்ளி பழம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், ரத்த நாளங்களின் நெகிழ்ச்சியை அதிகரிக்கவும் உதவுவதாக கதிப் கூறுகிறார். எனவே, இது இதயம் மற்றும் ரத்த நாள நோய்களிலிருந்து பாதுகாக்க ஒரு நல்ல வழியாக இருக்கும்.

வைட்டமின் சி மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால், சப்பாத்திக்கள்ளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை பெருமளவு அதிகரிக்கிறது மற்றும் உடலை அழற்சி மற்றும் நீண்டகால நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இதனால்தான் இதை 'முழுமையான ஆரோக்கியத்திற்கு உதவும் முழுமையான உணவு' என்று அழைக்கிறார்கள்.

Getty Images வைட்டமின் சி மற்றும் அத்தியாவசிய தாதுக்களின் அதிக உள்ளதால் சப்பாத்திக்கள்ளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை பெருமளவு அதிகரிக்கிறது.

ஆனால், பல்வேறு நன்மைகள் இருந்தாலும், சப்பாத்திக்கள்ளி பழத்தை மிதமாக உண்ண மஜித் அல்-கதிப் அறிவுறுத்துகிறார், குறிப்பாக சர்க்கரை நோய், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் குடல் பிரச்சனைகள் (ஐபிஎஸ்) உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த பழத்தை சமநிலையான உணவின் ஒரு பகுதியாகவும், தேவைப்பட்டால் மருத்துவ மேற்பார்வையுடனும் உண்ணுவது மிகவும் பாதுகாப்பானது என்பது அவரது கருத்து.

உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு இரண்டு சப்பாத்திக்கள்ளி பழங்களை உண்ணலாம், அத்துடன் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

இந்த பழத்தில் இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சியைக் குறைக்கும் கூறுகளும் உள்ளன. எனவே, இந்த பழம் பல நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.

சப்பாத்திக்கள்ளியின் இலைகளின் சாறு தலைவலி, பல் வலி மற்றும் வீக்கம்-கருமையான காயங்களைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

சப்பாத்திக்கள்ளி வரலாறு

சப்பாத்திக்கள்ளி பழமும் தாவரமும் பண்டைய காலங்களில் இருந்து குறிப்பாக மத்திய அமெரிக்காவிலும், மெக்ஸிகோவிலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வரலாற்றின்படி, சப்பாத்திக்கள்ளி அஸ்டெக் மக்களின் கலாசாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. அஸ்டெக் கலாசாரம் கி.பி. 14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது.

அஸ்டெக் ராணுவக் கொடியில் வாயில் பாம்புடன் சப்பாத்திக்கள்ளியின் மீது கழுகு அமர்ந்திருக்கும். அவர்களின் தலைநகரம் 'டெனோச்சிட்லான்' என்று அழைக்கப்பட்டது, இதன் பொருள் 'கல்லில் வளர்ந்த சப்பாத்திக்கள்ளி' ஆகும்.

மெக்ஸிகோவில் உள்ள அஸ்டெக் மக்கள் சப்பாத்திக்கள்ளி பழத்தை 'டெனோஷ்ட்லி' என்று அழைத்தனர்.

கி.பி. 1492 வரை ஐரோப்பியர்களுக்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் பற்றி தெரியாது. கரீபியன் கடலில் உள்ள ஹிஸ்பானியோலா தீவின் மீது (இப்போது ஹைட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு) ஸ்பானிஷ் மக்கள் படையெடுத்தபோது, அங்குள்ள உள்ளூர் மக்கள் இந்த பழத்தை அவர்களுக்கு அளித்தனர்.

BBC பழ விற்பனையாளரின் கூற்றுப்படி வலது பக்கத்தில் உள்ளது பெண் பழம், இடது பக்கத்தில் உள்ளது ஆண் பழம்

அப்போது உள்ளூர் மக்கள் இந்த பழத்தை 'ட்யூன்' என்று அழைத்தனர், என்று எஃப்ஏஓ ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஸ்பானிஷ் மக்கள் சப்பாத்திக்கள்ளியை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தனர், பின்னர் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இது மத்தியதரைக் கடல் கரையிலும், வட ஆப்ரிக்காவிலும் பரவியது.

பதினெட்டாம் நூற்றாண்டில் சப்பாத்திக்கள்ளி தெற்கு ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனாவிற்கு பரவியது.

சப்பாத்திக்கள்ளியின் இடமாற்றம் வெற்றிகரமாக இருந்ததற்கு சில காரணங்கள் உள்ளன. நீண்ட பயணங்களிலும் சப்பாத்திக்கள்ளியின் புதிய வேர்களை உருவாக்கும் திறன் குறையவில்லை, மேலும் இது வெவ்வேறு வகையான மண்ணிலும், வெப்பநிலையிலும் (40 டிகிரி செல்சியஸுக்கு மேல்) தன்னை தகவமைத்துக்கொள்ளக்கூடிய அபரிமிதமான திறனைக் கொண்டுள்ளது. எனவே, இது எளிதாக வெவ்வேறு இடங்களில் வளர முடியும்.

சப்பாத்திக்கள்ளிக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை, மேலும் இதற்கு ரசாயன உதவி தேவையில்லை. ஆனால், அதிக உப்புத்தன்மை அல்லது நீரில் மூழ்கினால் இதற்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம்.

BBC பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பிற பயன்கள்

பணடைய காலம் முதலே நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் காயங்களை குணப்படுத்தவும் சப்பாத்திக்கள்ளி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது சோப்பு, ஷாம்பு மற்றும் லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சப்பாத்திக்கள்ளியைப் பயன்படுத்தி தாவர பசைகள் மற்றும் நிறமிகளும் தயாரிக்கப்படுகின்றன.

மெக்ஸிகோ போன்ற சில சமூகங்களில், சப்பாத்திக்கள்ளியின் இலைகள் (பேடில்ஸ்) உண்ணப்படுகின்றன. இந்த இலைகளை வெட்டி, பொரித்து, மசாலா சேர்த்து அல்லது நெய்யில் பொரித்து அல்லது சீஸ் சேர்த்து உண்ணப்படுகிறது.

சப்பாத்திக்கள்ளி விலங்குகளுக்கான தீவன உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளில் அதிக அளவு கார்போஹைட்ரேட், ஸ்டார்ச் மற்றும் பீட்டா-கரோட்டின் உள்ளன, இவை விலங்குகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன.

இந்த தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைக் குறைக்க உதவுவதாக சப்பாத்திக்கள்ளி பயிரிடுதலை அதிகரிக்க எஃப்ஏஓ ஆய்வு அறிவுறுத்துகிறது.

Getty Images பண்டைய காலம் முதல் கற்றாழை மருத்துவ சிகிச்சைக்கும், காயங்களை ஆற்றவும் பயன்படுத்தப்படுகிறடுகிறது

பண்டைய காலங்களில் சப்பாத்திக்கள்ளி அலங்காரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. ஸ்பானிஷ் உயர்குடி மக்கள் தங்கள் தோட்டங்களில் சப்பாத்திக்கள்ளி பயிரிட்டனர்.

இன்றும் சில தோட்டங்களில் இது காற்றைத் தடுக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் உதவும் ஒரு வகையான வேலியாக பயன்படுத்தப்படுகிறது.

மொராக்கோவில் இன்றும் முட்செடியை 'தாபியா' என்று அழைக்கிறார்கள், இது ஸ்பானிஷ் மொழியில் "வேலி" (fence) என்ற வார்த்தையிலிருந்து வந்தது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.