பலரும் தங்கள் வயிற்றுப் பகுதியை குறைக்க உடற்பயிற்சிக் கூடங்களை நாடுகின்றனர். ஆனால், சிலரோ அதற்கு பெரிதும் கவனம் செலுத்துவதில்லை.
வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு பெல்லி ஃபேட் டம்மி ஃபேட், பீர் ஃபேட் என்றும் அழைக்கப்படுகிறது. தங்களின் உருவம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் கொள்ளும் இளைஞர்கள் இதுகுறித்து கவலை கொள்கின்றனர்.
வயிற்றுப்பகுதியில் அதிகரிக்கும் கொழுப்பின் காரணமாக, தங்களுக்கு விருப்பத்துக்கேற்ற, சௌகரியமான உடைகளை அவர்களால் அணிய முடிவதில்லை.
உங்கள் விருப்பத்துக்கேற்ப ஆடைகளை அணிவதுடன் மட்டும் இந்த பிரச்னை முடிவதில்லை. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால் உங்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பது நிரூபணமாகியுள்ளது.
வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பது மற்றும் கொலஸ்ட்ரால் சம்பந்தமான பிரச்னைகள் உட்பட பல தீவிரமான உடல்நல பிரச்னைகள் ஏற்படும்.
இந்த நோய்கள் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பால் ஏற்படுகின்றன.
மேலும் இதனால் டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்துகளும் அதிகரிக்கின்றன.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளியான ஆய்வு ஒன்று, சைடோகைன் (cytokine) எனப்படும் ஒருவகை புரதம் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பால் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் உடலில் வீக்கம் (inflammation) உருவாகும்.
வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால் ஆஞ்சியோடென்சின் (angiotensin) எனப்படும் புரதமும் உற்பத்தியாகிறது. இதனால், ரத்த நாளங்கள் சுருங்குதல், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றன.
இதனால், டிமென்ஷியா (மறதி நோய்), ஆஸ்துமா மற்றும் சிலவகை புற்றுநோய்களுக்கான ஆபத்துகளும் அதிகரிக்கின்றன.
டெல்லியில் உள்ள ஃபோர்ட்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் மூத்த இதயவியல் மருத்துவர் ஷிவ் குமார் சௌத்ரி கூறுகையில், உடலின் மற்ற பாகங்களில் சேரும் கொழுப்பை விட, வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது என்கிறார்.
மேலும் அவர், "வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பில் இருந்து செல்கள் உடையும் போதோ அல்லது சிதையும்போது, அதிலிருந்து பலவிதமான நச்சுக்கூறுகள் வெளியாகின்றன. இந்த கூறுகள், இதய ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. உடலில் இன்சுலின் எதிர்ப்பையும் (insulin resistance) அதிகரிக்கிறது. இதன்காரணமாக, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது" என்று விளக்குகிறார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, வயிற்றுப்பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதற்கு மரபியல் ரீதியான விஷயங்கள், ஹார்மோன் மாற்றங்கள், வயது, அதிக உடல் எடை மற்றும் மெனோபாஸ் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.
சமநிலையற்ற வாழ்வியல் முறை, சரிவிகித உணவு முறையை கடைபிடிக்காதது போன்றவையும் இதற்கான காரணங்களாக உள்ளன.
சரிவிகித உணவு முறையை கடைபிடித்தல், தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க முடியும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
தூங்குவதற்கு இரண்டு - மூன்று மணிநேரத்துக்கு முன்பாக எதையும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் நீங்கள் சாப்பிடும் உணவின் கலோரிகளை, அன்றைய நாளில் நீங்கள் செய்யும் வேலைகளுக்கான ஆற்றலாக பயன்படுத்துகிறது.
ஆனால், இரவில் நீங்கள் உண்ணும் உணவு அவ்வாறு பயன்படுத்த முடியாது.
எனவே, அது கொழுப்பாக சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும்.
2. சரிவிகித உணவை உண்ணுங்கள்உணவில் நீங்கள் அதிகமான நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுக்கும் போது, நீண்ட நேரத்துக்கு நீங்கள் பசியாக உணர மாட்டீர்கள்.
உணவில் நார்ச்சத்து இருந்தால், உணவு வயிற்றுப்பகுதியிலிருந்து குடலுக்கு நகரும் வேகம் குறையும்.
இதனால் நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பிய உணர்வுடனேயே நீங்கள் இருப்பீர்கள்.
உணவில் புரதச்சத்தை சேருங்கள். புரதமும் வயிற்றை நீண்ட நேரத்துக்கு நிரப்பும், இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை குறையும்.
பசியை தூண்டும் கரெலின் (ghrelin) ஹார்மோன்அளவை இது குறைத்து, மீண்டும் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தைக் குறைக்கும்.
புரதம் உடலின் தசைகளுக்கு வலுவூட்டுகிறது. வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, கலோரிகளை எரிக்கும் திறனையும் அதிகரிக்கிறது.
புரதம் நிறைந்த முட்டை, பருப்பு, பால், சீஸ், தயிர், மீன், கோழி இறைச்சி மற்றும் சோயா போன்றவற்றை தினசரி உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.
3. மிகவும் பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிருங்கள்கொஞ்சம் கூட நார்ச்சத்து இல்லாத மைதா பிரெட், சிப்ஸ் மற்றும் கிராக்கர்ஸ் போன்றவை எளிதிலேயே செரிமானமாகிவிடும், இதனால் உங்களின் ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும்.
இவ்வளவு வேகமாக ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போது, பசி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை, டைப் 2 நீரிழிவு நோய் போன்றவற்றுக்கான ஆபத்தும் அதிகமாகிறது.
எனவே, இவற்றுக்கு பதிலாக முழுமையான தானிய பிரெட், வறுத்த தின்பண்டங்கள், பழங்கள் மற்றும் நட்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.
சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், புகைப்பிடித்தலை குறைக்க வேண்டும்.
4. போதுமான உறக்கம்போதுமான தூக்கம் இல்லாதபோது, பசி ஹார்மோனில் விளைவுகளை ஏற்படுத்தி அதிகமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும்.
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் படி, வயிற்றுப்பகுதியில் உற்பத்தியாகும், பசி உணர்வை அதிகரிக்கும் க்ரெலின் என்கிற ஹார்மோன், போதிய தூக்கமின்மையால் அதிகரிக்கிறது.
மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அதை சரிசெய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மன அழுத்தம் ஏற்படும்போது ரத்தத்தில் மன அழுத்த ஹார்மோனான கார்ட்டிசால் (cortisol) எனும் ஹார்மோன் உற்பத்தியாகும்.
இதுதவிர, நாம் மன அழுத்தத்தில் இருக்கும் போது உணவில் அதிக கவனம் செலுத்தாமல், நம்மை அதிலிருந்து மடைமாற்றும் எல்லாவித உணவுகளையும் சாப்பிடும் அளவுக்கு சென்றுவிடுவோம்.
5. உடற்பயிற்சியின் அவசியம்உடற்பயிற்சிகள் மற்றும் ஏதாவது பயிற்சிகளின் மூலம் ஆக்டிவாக இருப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இது, குறிப்பாக வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க உதவுகிறது.
தினமும் வேகமான நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது யோகா போன்றவற்றை மேற்கொள்ளும்போது அவை கொழுப்பை குறைப்பதோடு மட்டும் அல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் வேகப்படுத்துகிறது.
உடற்பயிற்சி செய்வது தசைகளுக்கு வலுவூட்டுகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். வயிற்றுப்பகுதியில் சேரும் கொழுப்பை குறைப்பது நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்துகளை குறைக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு