(ஆக. 14, உலக பல்லிகள் தினத்தையொட்டி, இந்த கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)
நாம் பொதுவாக மற்ற உயிர்களின் வாழ்விடமாக காடுகள், மலைகள் என்று மக்கள் அதிகம் வசிக்காத இயற்கை சார்ந்த பகுதிகளையே நினைக்கிறோம். ஆனால், நாம் வாழும் இடங்களிலேயே நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினங்கள் பற்றியும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் அதிகம் சிந்திப்பதில்லை.
நம்மைச் சுற்றியுள்ள சிற்றுயிர்கள் பல்லுயிர்ச் சூழலுக்கும் மனித வாழ்வுக்கும் ஆற்றும் நன்மைகள் குறித்து நமக்குப் பெரிதும் கவனம் இருப்பதில்லை.
குறிப்பாக வீடுகளில் உலவும் பல்லிகள் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உணர்வு. சிலருக்கு பல்லிகளைப் பார்த்து பயம். சிலருக்கோ அருவருப்பு. சிலருக்கு சகுணம் போன்ற நம்பிக்கைகளுக்கான வழி.
ஆனால், இவை எல்லாவற்றுக்கும் மேலாக பல்லுயிரிய சமநிலையில் ஆற்றும் பணிக்காக அவற்றுக்கு நாம் பெரிய முக்கியத்துவம் தருவதில்லை.
பல்லிகள் இல்லையென்றால் நம் வீடுகளின் நிலை என்னவாகும்? பல்லிகளுக்கும் நாம் வாழும் இடத்திருக்கும் உள்ள தொடர்பு என்ன?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் காட்டுயிர் மற்றும் சூழலியல் ஆர்வலர் ஏ.சண்முகானந்தம் விளக்குகிறார்.
வீடுகளில் பல்லிகள் இருப்பதால் என்ன பயன்?பூச்சிகளைக் கட்டுபடுத்துவதில் பல்லிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. உலகம் உயிரினங்களால் சூழப்பட்டது என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், இந்த உலகம் பூச்சிகளால் சூழப்பட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு இங்கு பூச்சிகளின் எண்ணிக்கை அதிகம்.
பூச்சிகளே இல்லாத உலகமும் பூச்சிகள் அதீதமாக உள்ள உலகமும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கரமாக இருக்கும். இதைச் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு உதவும் உயிரினங்களில் பல்லிகளுக்கு முதன்மைப் பங்குண்டு.
எடுத்துக்காட்டாக, பல்லிகள் கொசுக்கள், ஈக்களை உணவாக்கி அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அதே நேரத்தில், பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களுக்கும் பல்லிகள் உணவாகின்றன. இது உணவுச் சங்கிலிக்கு உதவுகிறது.
பல்லிகள் என்னென்ன பூச்சி வகைகளைச் சாப்பிடுகின்றன?பல்லிகள் இரவு நேரத்தில் செயல்படக்கூடிய பூச்சிகளைப் பெரும்பாலும் உண்ணும். கொசுக்கள், ஈக்கள், தும்பிகள், வண்டுகள், விட்டில் பூச்சிகள் போன்ற வகைகளைச் சாப்பிடும்.
பொதுவாக மரப் பல்லிகளும் வீட்டுப் பல்லிகளும் இருக்கும். ஆனால், இதிலும் பல்வேறு வகைகள் இருக்கின்றன. பல்லி வகைகளை ஆவணப்படுத்த வேண்டும். அப்போதுதான், பல்லிகளின் முக்கியத்துவம் குறித்து மனிதர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.
பல்லிகளை நாம் பெரும்பாலும் மூடநம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறோம். பல்லிகளைக் கொண்டு பஞ்சாங்கம் பார்ப்பது, பல்லிகள் உச்சுக் கொட்டுவதைக் கொண்டு நல்ல நேரம் பார்ப்பது, பல்லி உணவில் விழுந்தால் விஷம் என்று நினைப்பது இவையெல்லாம் மனிதர்களுக்கு பல்லிகள் பற்றி இருக்கும் கற்பிதங்கள்.
ஆனால், பல்லி உணவில் விழுவதால் உணவுப் பொருள் விஷமாகிவிடாது. அதற்கு மனிதர்களைக் கொல்லும் நச்சுத்தன்மை இல்லை. இதை எந்த ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை.
உணவில் பல்லி விழுந்தால், ஒவ்வாமை காரணமாகத்தான் மயக்கம் வாந்தி ஏற்படும். இதை மருந்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
இதுகுறித்து, மேலதிகமான ஆய்வுகள் இருக்கும்போது, இன்னும் கூடுதலாக அறிவியல்பூர்வமான செய்திகள் கிடைக்கும்.
பொதுவாக நம் வாழ்விடத்தில் இயற்கையான சூழலே இல்லாமல் செய்து வருகிறோம். முன்பு, வீடுகள் இருக்கும் இடங்களில் சின்னச் சின்ன தோட்டங்கள் வைப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. முன்பு எந்த வீடாக இருந்தாலும், ஏதோ ஒன்றிரண்டு செடி, கொடிகள் இருக்கும்.
அதைச் சார்ந்துள்ள பூச்சி இனங்கள் அதைத் தேடி வரும். அந்தப் பூச்சி இனங்களைத் தேடி பல்லியோ, அரணையோ வரும். பல்லிகள் இரவு நேரங்களில் இருக்கும் பூச்சிகளைச் சாப்பிடுவதற்கு வரும். அரணைகள் பகல் நேர பூச்சிகளைச் சாப்பிடுவதற்கு வரும்.
இத்தகைய ஆரோக்கியமான சூழல் இப்போது குறைந்து வருவதால், அரணையை அதிகம் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.
பல்லிகள் இல்லாத சூழல் உருவானால் என்ன ஆகும்?பல்லிகள் இல்லாத ஒரு சூழல் உருவானால், பூச்சிகள் அதிகமாகும். அதன்மூலம், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள் மனிதர்களுக்கு இடையூறை விளைவிக்கும்.
எடுத்துக்காட்டாக, கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்று நாம் கவலைப்படுகிறோம். இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
அதைக் கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துகிறோம். இதுவே மனிதர்களுக்குப் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பல்லிகள் பூச்சிகளின் இயற்கையான இரைவிழுங்கி. அப்படி இருக்கும் பட்சத்தில், பல்லிகள் இல்லாத சூழல், நிச்சயம் மனிதர்களுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு