ஸ்லாத் கரடிகள் உலகின் மிகவும் ஆபத்தான கரடிகளில் ஒன்று. அவைகளின் வாழ்விடங்கள் சுருங்கி வருகிற நிலையில் இந்தியாவின் வன சமூகங்கள் அவற்றுடன் இணைந்து வாழும் வழிகளைத் தேடி வருகின்றன.
இந்தியாவில் ஒரு சஃபாரி குடியிருப்பு அருகே ஒரு நீரோடையில் தண்ணீர் அருந்திவிட்டுச் செல்லும் ஒரு பெண் கரடியையும் அதன் குட்டியையும் பார்க்கும் புலிக்கு அவை ஒரு எளிய இரையாகத் தோன்றலாம். புலி அந்த கரடியை பின்தொடர்ந்து தாக்குவதற்கு தயாராகும். ஆனால் இங்கு தான் ஆச்சரியமளிக்கும் திருப்பம் ஒன்று நிகழும்.
புலியைக் கண்ட கரடி உறைந்து போகவோ தப்பிக்கவோ முயற்சி செய்யாமல் திரும்பி திடுக்கிட்டு நிற்கும் புலியை நோக்கி வரும். புலியும் சற்று பின்னோக்கிச் சென்று சண்டையிடும். 45 நிமிட சண்டையில் இரு விலங்குகளும் ஒன்றை ஒன்று கடித்து பிராண்டிக் கொண்டிருக்கும்.
இந்தியா, நேபாள் மற்றும் இலங்கையில் பரவலாக வாழும் ஸ்லாத் கரடிகள் (ஸ்லாத் - தேவாங்கு, அதன் நீண்ட நகங்களும் பற்களும் தேவாங்கை நினைவுபடுத்துவதாக இருப்பதால் அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது) இந்திய துணைக்கண்டத்தில் மிகவும் ஆக்ரோஷமான விலங்காக அறியப்படுகின்றன. அவை புலிகளிடம் மட்டுமல்ல, மனிதர்கள் உட்பட தனக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் யாரையும் ஆக்ரோஷமாகத் தாக்கும்.
1950 இல் இருந்து 2019 வரை உலகம் முழுவதும் மனிதர்கள் மீது பெரிய மாமிச உண்ணிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஸ்லாத் கரடிகளின் தாக்குதல்கள் தான் புலிகள், சிங்கங்கள், நரிகள் மற்றும் இதர கரடிகள் உள்ளிட்ட மற்ற அனைத்து விலங்குகளின் தாக்குதல்களை விடவும் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.
இந்த காலகட்டத்தில் மற்ற விலங்குகளுடன் ஒப்பிடுகையில் (புலிகள் - 1,047, நரிகள் - 414, பனிக்கரடிகள் - 23) மனிதர்கள் மீது 1,337 ஸ்லாத் கரடிகள் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இதில் புலிகள், சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதல்களில் மனிதர்கள் இறப்பு விகிதம் (65%) அதிகமாக உள்ள நிலையில் ஸ்லாத் கரடிகளில் தாக்குதல்களில் இறப்பு விகிதம் (8%) ஆக உள்ளது).
எனினும் வாழ்விட சீரழிவு மற்றும் மனிதர்களின் பதில் தாக்குதல்கள் போன்ற காரணங்களால் கரடிகளே அச்சுறுத்தலில் தான் இருக்கின்றன. அவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிற நிலையில் பாதிக்கப்படக்கூடிய இனங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகளாவிய ஸ்லாத் கரடிகளின் எண்ணிக்கை 20,000க்கும் குறைவாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இது கரடிகளின் பிரச்னை மட்டுமல்ல, பழ விதைகளை பரவச் செய்வது, கரையான்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வைப்பது என சூழலியல் பொறியாளர்களாக கரடிகளுக்கு முக்கியமான நன்மைகள் உள்ளன. ஆனால் அச்சுறுத்தல் என உணரும் விஷயங்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன உள்ளிட்ட கரடிகளின் அணுகுமுறை பற்றிய நுண்ணறிவைப் பெறுவது மனிதர்களையும் கரடிகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
கரடிகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதா?ஸ்லாத் கரடிகள் அடிப்படையிலே ஆக்ரோஷமாக நடந்துகொள்வதோ அல்லது கொல்ல நினைப்பதோ கிடையாது என்கிறார் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நிஷித் தாரையா. அவை மனிதர்களிடம் கொடிய முறையில் நடந்து கொள்வது எதிரியை விரட்டுவதற்கான பாதுகாப்பு உத்தியின் எதிர்பாராத விளைவு எனக் கூறுகிறார். உதாரணத்திற்கு குட்டிகளை சுமந்து செல்லும் பெண் கரடி அச்சமாக உணரும்.
"புலி, சிங்கம், சிறுத்தை, மனிதன் என யாராக இருந்தாலும் கரடி முதலில் தன்னை மற்ற விலங்கை விட பெரியதாக காட்டிக் கொள்ள முயற்சிக்கும். பின்னங்கால்களில் நின்று முன்னங்கால்களால் தாக்கும்" என விளக்கினார். நீளமான நகங்கள் அதன் உண்ணும் பழக்கத்தின் ஒரு பகுதியாக எறும்புகளைத் தோண்ட உதவுகின்றன.
புலிகள் உடனான சண்டையில் எழுந்து நிற்பது கரடிகளுக்கு ஒரு முக்கியமான சாதகத்தை வழங்குகின்றது. கரடி-புலிகள் சண்டையின் காணொளிகளை ஆய்வு செய்கையில் புலிகள் மிக அருகில் இருக்கின்றபோது கிட்டத்தட்ட அனைத்து கரடிகளும் எழுந்து நிற்கின்றன. அவ்வாறு எழுந்து நிற்காத கரடிகள் உடனடியாக கொல்லப்படுகின்றன. இதற்கு மாறாக, எந்தச் சண்டையிலும் புலிகளுக்கு காயம் ஏற்படவோ, அவை கொல்லப்படவோ இல்லை. புலிகள் கரடிகளை விட வேகமாக இருப்பதும் அவைகளால் உடனே ஓடிச் செல்ல முடியும் என்பதும் இதற்கு உதவியாக இருக்கலாம்.
ஆனால் மனிதர்களுக்கு கரடிகளிடமிருந்து ஓடி தப்பிப்பது என்பது ஒரு வாய்ப்பு கிடையாது. ஆனால் தாக்குதல்களிருந்து பிழைத்தவர்களின் கூற்றுபட்டி மனிதர்கள் கவனிப்பதற்கு முன்பாகவே வருகின்ற இடம் தெரியாத விதத்தில் கரடிகள் தாக்குகின்றன.
நிற்கின்ற கரடி ஒன்று மனிதனை தாக்குகின்றபோது அதன் முன்னங்கால்கள் மனிதனின் மிகவும் பாதுகாப்பற்ற இடமான முகம் தான் முதலில் அவற்றின் கைகளில் சிக்குகின்றன என்கிறார் தாரையா.
"அதனால் தான் ஸ்லாத் கரடிகள் மிகவும் ஆபத்தானவை, கரடி குடும்பத்தில் ஸ்லாத் கரடிகள் மிகவும் ஆக்ரோஷமானவையாக அறியப்படுகின்றன" என்று விவரித்தார். ஆனால் யதார்த்தத்தில் அவை மற்ற கரடிகளைவிட மிக ஆக்ரோஷமானவை இல்லை எனக் கூறும் தாரையா, அவை தாக்குகின்ற விதம் மிகவும் கொடியதாக உள்ளது எனத் தெரிவித்தார்.
கரடிகள் தாக்கினால் உயிரை பறிக்கக்கூடிய மிகவும் மோசமான காயங்கள் ஏற்படும். 2020-ல் இலங்கையில் காட்டில் மஞ்சள் தேடிக் கொண்டிருந்த 50 வயதான நபரை கரடிகள் தாக்கியபோது அதன் நகங்கள் அவரின் முகத்தை பிய்த்து எடுத்துவிட்டன.
அதே போல் 2023-இல் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தவரை தாக்கிய கரடி அவரின் முகத்தை சிதைத்தது. இருவருக்கும் கண்பார்வை பறிபோனது. ஓடிசாவில் ஒரு மனிதர் கரடியால் எந்த அளவுக்கு மோசமாக தாக்கப்பட்டார் என்றால் அவரின் மூளை காயப்பட்ட மண்டையோட்டிற்கு வெளியே வந்தது. அவசர அறுவை சிகிச்சை மூலம் அவரின் உயிர் காப்பாற்றப்பட்டது என 2017-இல் வெளியான செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதல்கள் மிக பலமாக இருந்துள்ளன. பிழைத்தவர்களின் கூற்றுப்படி எதிர்வினையாற்ற அவர்களுக்கு நேரமே இருக்கவில்லை. "அது மிகவும் வேகமாக நடந்துவிட்டது. நான் கரடி வந்ததைப் பார்க்கவில்லை. வெறும் குப்பை, பறக்கும் இலைகள் மற்றும் கரடியின் சத்தமும் கர்ஜனையும் மட்டுமே கேட்டது" என இன்னொரு தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர் கூறுகிறார்.
தாரையா மற்றும் அவரின் குழுவினர் ஆய்வு செய்யும் மத்திய குஜராத் போன்ற பகுதிகளில் பழங்குடி சமூகங்கள் தான் இத்தகைய எதிர்பார்த்த மோதல்களின் ஆபத்தில் உள்ளன.
"இவர்களில் பெரும்பாலானவர்கள் வனவாசிகள். விறகு, மரம், பழங்கள், தேன் மற்றும் மருத்துவ செடிகளைச் சேகரிக்க காடுகளுக்குச் சென்று வருகின்றனர்" என்றார் தாரையா. அப்போது தான் இவர்கள் சேகரிக்கும் அதே செடிகள் மற்றும் தேனை உண்ணும் கரடிகளையும் எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக கிராமத்தினர் மதுகா இண்டிகா மரத்திலிருந்து மலர்களைச் சேகரிக்கின்றனர். அது மஹுவா என்கிற பாரம்பரிய மது தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
"அவர்கள் இந்த மரத்தின் பூவை அதிகாலையில் சேகரிக்க செல்ல வேண்டும். கரடிகளும் அப்போது தான் உணவுத் தேடிச் செல்கின்றன" எனத் தெரிவித்தார். "இதே மரத்தின் இதே பூ தான் கரடிகளின் உணவாக உள்ளது. எனவே கரடிகளும் இதே இடத்திற்கு வருகின்றன. அதிகாலை நேரத்தில் பார்வையும் தெளிவாக இல்லாத காரணத்தால் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
மத்திய குஜராத்தில் இந்தச் சமூகங்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பலரும் கரடிகள் மனித உயிருக்குப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன எனத் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த ஆவில் கரடிகள் பாதுகாப்புக்கான ஆதரவு மிகக் குறைவாக உள்ளது.
டபிள்யூசிபி ஆய்வு அறக்கட்டளையில் தாரையாவும் அவரின் கூட்டாளிகளும் இந்த மனப்பான்மையை மாற்ற முயற்சித்து வருகின்றனர். அவர்கள் இந்த தாக்குதல்களை ஆய்வு செய்து காரணங்களைப் புரிந்து கொள்ள பிழைத்தவர்களிடம் நேர்காணல் செய்கின்றனர். பின்னர் அதன் முடிவுகளை வைத்து கரடிகளைத் தவிர்க்க உள்ளுர் மக்களுக்கு உதவுகின்றனர்.
இந்த நடவடிக்கைகளில் கரடி பாதுகாப்பு பற்றி உள்ளூர் மக்களுக்கு கற்பிப்பதும் அடங்கும். இதில் கரடிகளுடனான திடீர் சந்திப்புகளைத் தவிர்க்க சத்தம் எழுப்புவது போன்றவை உள்ளடங்கும். வயல் மற்றும் சாலையோரங்களில் உள்ள அடர்ந்த புதர்களை அகற்றுவதை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இது கரடிகளும் மனிதர்களும் ஒருவரையொருவர் எளிதாகக் கண்டு தவிர்த்துக்கொள்வதை எளிதாக்கும். மேலும் மக்கள் காடுகளில் தனியாகச் செல்வதை தவிர்க்க குடியிருப்புகள் அருகே கழிவறைகள் கட்டுவதையும் பரிந்துரைக்கின்றனர்.
இதனுடன் சேர்த்து ஆய்வாளர்கள் மணிகள் மற்றும் கூர்மையான முனைகள் அடங்கிய ஒரு பிரத்யேக குச்சி ஒன்றையும் வடிவமைத்துள்ளனர்.
இது இந்தியில் "கண்தி கதி" (மணிக்குச்சி என அர்த்தம் தரும் சொல்) என அழைக்கப்படுகிறது. இந்த குச்சியின் முதன்மையான நோக்கம் கரடிகளை அச்சுறுத்தி மோதல்களை தவிர்ப்பது என்கிறார் தாரையா. கரடிகள் வசிக்கும் வனப்பகுதிகளில் ரோந்து செல்லும் வனத்துறை அலுவலர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு 500 குச்சிகளை தாரையாவின் குழுவினர் வழங்கியுள்ளனர்.
"இந்த குச்சிகளை மக்கள் பயன்படுத்துகிறபோது மணிகள் ஓசை எழுப்பி கரடிகளுக்கு எச்சரிக்கை செய்யும். கரடிகள் மனிதர்களுக்கு அருகில் வந்தால் கூர்முனை உள்ள இந்த குச்சிகளைப் பயன்படுத்தி விலங்கைத் தடுக்க முடியும். இதன் மூலம் கரடியும் மனிதனும் பாதுகாப்பாக இருப்பார்கள்" எனத் தெரிவித்தார் தாரையா.
அதிகாரப்பூர்வ மதிப்பீடு நடைபெற்று வருகிற நிலையில் தற்போது வரை நேர்மறையான பதில்களே கிடைப்பதாகவும் முதல்கட்ட தரவுகள் இது வேலை செய்வதைக் காட்டுவதாகவும் தெரிவிக்கிறார் தாரையா.
"இது கரடிகளுடன் மட்டுமல்ல மற்றும் காட்டுப்பன்றி மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளுடனும் உதவியாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்." எனக் கூறினார் தாரையா. இந்த குச்சியிலிருந்து வரும் சத்தம் விலங்குகளை விரட்டிவிடுவதாக அவர் தெரிவித்தார்.
கரடிகளைப் பற்றியும், அவற்றுடன் எவ்வாறு பாதுகாப்பாக வாழ்வது என்பதையும் மக்கள் தெரிந்துகொள்கிறபோது இது பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கு என்பதை அவர்கள் உணர்வார்கள் என தாரையா நம்பிக்கை தெரிவிக்கிறார். உள்ளூர் மக்களை விடவும் வனத்துறை அலுவலர்கள் கரடிகளை மிகவும் நேர்மறையாகப் பார்ப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
"ஸ்லாத் கரடிகள் இந்திய துணை கண்டத்தில் மட்டுமே வசிப்பவை. எனவே இவற்றை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை." எனத் தெரிவித்தார்.
கரடிகள் தான் வனத்தின் பொறியாளர்கள் எனக் கூறுபவர், "அவை எறும்பு மற்றும் கரையான்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வைக்கின்றன. விதைகளைத் தூவி மண்வளத்திற்கு உதவுகின்றன. சூழலியல் இவை மிகவும் முக்கியமான விலங்கு" எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு