சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் குண்டு வைத்து கொல்லப்பட்டது ஏன்?
BBC Tamil August 16, 2025 01:48 AM
Getty Images 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி, பிரிட்டிஷ் பிரதமர், லார்ட் மவுண்ட்பேட்டனை இந்தியாவின் வைஸ்ராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் நியமித்தார்

தனக்கு வயதாகும் என்று மவுண்ட்பேட்டன் ஒருபோதும் நினைத்ததில்லை. சளி போன்ற சாதாரண உபாதையைத் தவிர, அவர் தனது வாழ்நாள் முழுவதும் வேறு எந்த நோயாலும் அவதிப்பட்டதேயில்லை.

70 வயதைத் தாண்டிய போதிலும், அவர் பிராட்லேண்டில் இருக்கும் போதெல்லாம், காலையில் இரண்டு மணி நேரம் குதிரை சவாரி செய்வார்.

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், அவரது சுறுசுறுப்பு சற்று குறைந்ததால், தனக்குப் பிடித்தமான போலோ விளையாட்டை விளையாடுவதைத் தவிர்த்தார் என்பதைத் தவிர, அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்.

சோர்வடையும்போதும் அல்லது சலிப்படையும்போதும் உறங்குவது அவர் வழக்கம். ஆனால், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அவரது விருப்பம் ஒருபோதும் குறையவில்லை.

குடும்பத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளித்துவந்த மவுண்ட்பேட்டன், ஒவ்வொரு கிறிஸ்துமஸையும் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் பிராட்லேண்ட்ஸில் கொண்டாடினார்.

ஈஸ்டருக்கு பிராபோர்னில் ஒன்றுகூடி மகிழும் மவுண்ட்பேட்டனின் குடும்பத்தினர், பெரும்பாலும் தங்கள் கோடைகாலத்தை அயர்லாந்தில் உள்ள கிளாசிபானில் கழித்தனர்.

Getty Images மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார்

"மவுண்ட்பேட்டன் தனது பேரக்குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்" என்று பிரையன் ஹோய் 'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

"மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறைக் காட்டுவார் என்று அவரது பேரனின் தோழிகளில் ஒருவர் கூறுகிறார். அவர் தற்போதும் குடும்பத்தினர் அனைவராலும் நேசிக்கப்படுவராகவும், மதிக்கப்படுபவராகவும் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்" என்று பிரையன் ஹோய் எழுதுகிறார்.

"அவருடன் இருப்பது ஜாலியாக இருக்கும். அவர் உல்லாசமாக இருப்பார். ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை."

குழந்தைகளுடனான அவரது தொடர்புக்கு ஒரு காரணம், அவரே குழந்தையைப் போன்ற இயல்பைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.

மவுண்ட்பேட்டனின் பேரன் மைக்கேல் ஜான், "அவருக்கு அற்புதமான நகைச்சுவை உணர்வு இருந்தது. அவர் எங்களுடன் அமர்ந்து சார்லி சாப்ளின் படங்களைப் பார்க்கும்போது விழுந்து-விழுந்து சிரிப்பார்" என்று தெரிவித்தார்.

"அவர் அந்தப் படத்தை இதற்கு முன்பு பலமுறை பார்த்திருந்தாலும், மீண்டும் புதிதாக பார்ப்பதுபோலவே ரசித்து சிரிப்பார்."

BLINK மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார் ஐஆர்ஏவின் இலக்கான மவுண்ட்பேட்டன்

பணி ஓய்வுக்குப் பிறகு மவுண்ட்பேட்டன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை அரசு அறிந்திருந்தது.

1971ஆம் ஆண்டிலேயே, அவரது பாதுகாப்பிற்காக 12 போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.

தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிலிப் ஜீக்லருக்கு அளித்த பேட்டியில், "வடக்கு அயர்லாந்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் தோழர்கள் சிலரை விடுவிக்க அயர்லாந்து குடியரசுப் படை (ஐ.ஆர்.ஏ) என்னைக் கடத்திச் செல்லக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது" என்று மவுண்ட்பேட்டன் கூறியிருந்தார்.

"ஒரு சோதனையில், ஐஆர்ஏ கொல்ல விரும்பிய 50 பேர் கொண்ட பட்டியலில் மவுண்ட்பேட்டனும் இருப்பது தெரியவந்தது," என்று ஆண்ட்ரூ லூனி தனது "The Mountbattens: Their Lives and Loves" என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

"70களின் முற்பகுதியில் க்ளோசிபனில் மவுண்ட்பேட்டனைக் கொல்ல ஒரு திட்டம் இருந்ததாக ஒரு மூத்த ஐ.ஆர்.ஏ உறுப்பினர் உறுதிப்படுத்தினார், ஆனால் பொதுமக்களுக்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அது செயல்படுத்தப்படவில்லை." என ராயல் மிலிட்டரி காவல்துறை அதிகாரியான கிரஹாம் ஜோயல், ஆண்ட்ரூ லூனியிடம் கூறினார்

"ஆகஸ்ட் 1976இல் மவுண்ட்பேட்டனை சுடுவதற்கான முயற்சி கைவிடப்பட்டது, ஏனெனில் அலைபாயும் கடல் பகுதியில் ஐ.ஆர்.ஏ ஆயுததாரிகளால் துல்லியமாக குறிவைத்து சுடமுடியவில்லை."

Getty Images சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் லார்டு மவுண்ட்பேட்டன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன்

1979 மார்ச் மாதத்தில், நெதர்லாந்திற்கான பிரிட்டன் தூதர் சர் ரிச்சர்ட் சைக்ஸ் மற்றும் எம்.பி. எரிக் நீவ் ஆகியோர் ஐ.ஆர்.ஏ-வால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதே ஆண்டு ஜூன் மாதத்தில் நேட்டோ தலைவர் ஜெனரல் அலெக்சாண்டர் ஹெய்கை பெல்ஜியத்தில் படுகொலை செய்ய ஐ.ஆர்.ஏ முயற்சித்தது, ஆனால் அவர் மயிரிழையில் மரணத்திலிருந்து உயிர் தப்பினார்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகுதான், தலைமை காவல்துறை கண்காணிப்பாளர் டேவிட் பிக்னெல், அயர்லாந்துக்கு செல்ல வேண்டாம் என்று மவுண்ட்பேட்டனுக்கு அறிவுறுத்தினார். ஆனால் அவர், 'அயர்லாந்து மக்கள் எனது நண்பர்கள்' என்று கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய பிக்னெல், 'எல்லா அயர்லாந்து மக்களும் உங்கள் நண்பர்கள் அல்ல' என்று சொன்னார்.

எனவே, பிக்னெலின் அறிவுரையின்படி, குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை இரவில் உறங்கும்போதும் அருகில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கினார் மவுண்ட்பேட்டன்

"ஜூலை 1979 இல், அவருக்கு ஏற்படவுள்ள ஆபத்தை மதிப்பிட்ட கிரஹாம் ஜோயல், 'ஷேடோ ஃபைவ்' சொகுசு படகில் பயணிப்பது மவுண்ட்பேட்டனுக்கு ஆபத்தை அதிகரிக்கும், ஏனெனில் இரவில் யாரும் சப்தமில்லாமல் அதில் ஏறிவிடமுடியும் என்று கூறினார்.'' என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார்

"பெல்ஃபாஸ்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கார் பல முறை கடற்கரையை நெருங்கி வருவதைக் கண்டதால் அவர்களுக்கு கவலை ஏற்பட்டது. ஒரு முறை, காரில் உள்ளவர்களை பைனாகுலரைப் பயன்படுத்தி பார்க்க ஜோயல் முயன்றார்."

''மவுண்ட்பேட்டனின் படகை ஒரு மனிதன் தொலைநோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருப்பதை ஜோயல் கண்டார். படகிலிருந்து சுமார் 200 கெஜம் தொலைவில் சந்தேகத்திற்குரிய நபர் இருந்திருக்க வேண்டும்."

SIDJWICK & JACKSON பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களில் லார்ட் மவுண்ட்பேட்டன் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார் மவுண்ட்பேட்டனின் படகில் பாதுகாப்பு காவலர்கள் யாரும் இல்லை

ஜோயலின் எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவரது அறிக்கை புறக்கணிக்கப்பட்டு மவுண்ட்பேட்டனின் பாதுகாப்பு அயர்லாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1979 ஆகஸ்ட் 27ஆம் நாள் பிரிட்டன் முழுவதும் விடுமுறை நாளாக இருந்தது.

பல நாட்கள் மழைக்குப் பிறகு சூரியனைப் பார்த்த மவுண்ட்பேட்டன், காலை உணவின் போது தனது குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்,'ஷேடோ ஃபைவ்' படகில் சவாரி செய்ய தன்னுடன் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று அவர் கேட்டார்.

படகுத்துறைக்குச் செல்வதற்கு முன், மவுண்ட்பேட்டன் பயணத்திட்டத்தை தனது பாதுகாப்புப் பணியாளர்களிடம் விளக்கினார்.

பைனாகுலர் மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியாளர்கள், தங்கள் காரை படகுத்துறையில் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

மவுண்ட்பேட்டனுக்கு பாதுகாவலாக வந்த காவலர்களில் ஒருவர் கடல் அலைகளினால் வாந்தி எடுக்கத் தொடங்கினார். எனவே, பாதுகாவலர்கள் யாரும் தங்களுடன் படகில் வரத் தேவையில்லை என்று மவுண்ட்பேட்டன் கூறிவிட்டார்.

'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற தனது புத்தகத்தில், ''படகில் அமர்ந்தவுடன் மவுண்ட்பேட்டன் படகின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்.'' என்று பிரையன் ஹோய் எழுதியுள்ளார்

படகின் அடிப்பாகத்தில் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது என்றும், அதில் சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் வெடிபொருட்கள் இருந்ததாகவும் பின்னர் ஐ.ஆர்.ஏ கூறியது.

Getty Images அயர்லாந்தை பிரிட்டன் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்கத்தை முக்கியமாக கொண்டிருந்த அமைப்பு ஐஆர்ஏ ஆகும் மவுண்ட்பேட்டனின் படகு 'ஷேடோ ஃபைவ்'

காலை 11:30 மணிக்கு 'ஷேடோ ஃபைவ்' படகு நகரத் தொடங்கியது. படகு சென்றுக் கொண்டிருந்தபோது, கடற்கரையோர சாலையில் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் காரில் பயணித்துக் கொண்டே பைனாகுலர் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றதும், மேலும் இரண்டு ஜோடி கண்கள் படகை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவை, ஐ.ஆர்.ஏ உறுப்பினர்களுடையவை.

அந்த தருணத்தைப் பற்றி பிரையன் ஹோய், "ஷேடோ ஃபைவ் படகின் நடுவில் மூன்று இளைஞர்கள் அமர்ந்திருந்தனர், லார்ட் மவுண்ட்பேட்டன் படகை ஓட்டிக்கொண்டிருந்தார், படகில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருப்பதை ஐ.ஆர்.ஏஆட்களால் தெளிவாகக் காண முடிந்தது." என எழுதியுள்ளார்

"படகில் வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்யும் ரிமோட் கண்ட்ரோல் சாதனம், கொலையாளிகளில் ஒருவரிடம் இருந்தது."

Getty Images வெடிப்பினால் சேதமடைந்த மவுண்ட்பேட்டனின் படகு வெடித்தது படகு

'ஷேடோ ஃபைவ்' படகு, படகுத்துறையிலிருந்து கிளம்பிய 15 நிமிடங்களில் சரியாக காலை 11:45 மணிக்கு, கொலையாளிகளில் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் பொத்தானை அழுத்தினார்.

படகில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ வெடிபொருட்கள் பெரும் ஓசையுடன் வெடித்தன, படகு துண்டு துண்டாகச் சிதறியது.

அந்த நாளை நினைவுகூர்ந்த மவுண்ட்பேட்டனின் மகள் பாட்ரிசியா, "நான் என் மாமியார் லேடி பிராபோர்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்,அப்போது நியூ ஸ்டேட்ஸ்மேனின் சமீபத்திய இதழைப் படித்துக்கொண்டிருந்தேன்."

"கையிலிருந்த நியூ ஸ்டேட்ஸ்மேனை படிப்பதற்காக என்னுடைய தலை குனிந்திருந்தது. ஒருவேளை அதனால்தான் குண்டு வெடித்தபோது, என் கண்களுக்கு சேதம் குறைவாக ஏற்பட்டதோ என்று நினைக்கிறேன்."

"என் தந்தையின் கால்களுக்கு அருகில் டென்னிஸ் பந்து ஒன்றின் அளவுள்ள ஏதோ ஒன்று இருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது, அது மிகவும் பிரகாசமான ஒளியை வெளியிட்டது. அடுத்த கணம் நான் தண்ணீரில் விழுந்து மூழ்கிக் கொண்டிருந்தேன் என்பது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

மவுண்ட்பேட்டனின் மருமகன் லார்ட் பிராபோர்ன் படகின் நடுவில் நின்று கொண்டிருந்தார். குண்டு வெடித்தபோது, அவரது உடலின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், அவரது முகத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை.

குண்டு வெடிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அவர் தனது மாமனாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் தானே?" என்று கேட்டிருந்தார்.

இந்த வார்த்தைகள்தான் மவுண்ட்பேட்டன் கேட்ட கடைசி வார்த்தைகளாக இருக்கலாம்.

"மாமாவிடம் இந்தக் கேள்வியை கேட்ட அடுத்த கணம் நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தேன், மிகவும் குளிராக இருந்தது. என்னை எப்படி மீட்டார்கள் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை" என்று லார்ட் பிராபோர்ன் நினைவு கூர்ந்தார்.

Getty Images மவுண்ட்பேட்டனின் உடலை கரைக்கு கொண்டு வரும் பாதுகாப்புப் பணியாளர்கள் மவுண்ட்பேட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது

படகின் இடிபாடுகளிலிருந்து சிறிது தொலைவில் மவுண்ட்பேட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

"மவுண்ட்பேட்டனின் கால்கள் அவரது உடலில் இருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுவிட்டன. அவர் அணிந்திருந்த 'HMS கெல்லி'யின் பெயரைக் கொண்ட முழுக் கை ஜெர்சியைத் தவிர, அவரது உடலில் இருந்த அனைத்து ஆடைகளும் கிழிந்திருந்தன." என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார்

"அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பொதுமக்களின் கவனத்தைத் தவிர்ப்பதற்காக, ஆம்புலன்ஸ் வரும் வரை அவரது உடலை படகு ஒன்றில் வைத்திருந்தோம்" என்று அவர் எழுதுகிறார்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த டாக்டர் ரிச்சர்ட் வாலஸ், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார், "வெடிப்புச் சத்தத்தைக் கேட்டபோது, அது ஒரு வெடிகுண்டாக இருக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை."

"நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, தண்ணீரில் பலர் விழுந்திருந்ததைக் கண்டோம். எங்கள் முதல் பணி உயிருள்ளவர்களிடமிருந்து இறந்தவர்களைப் பிரிப்பதாகும்."

"மருத்துவர்களாக, இறந்தவர்களை விட உயிர் பிழைத்தவர்கள் மீது கவனம் செலுத்துவதே எங்களது கடமையாக இருந்தது. மவுண்ட்பேட்டனின் சடலத்துடன் நாங்கள் படகுத்துறையை அடைந்தபோது, எங்களுக்கு உதவ பலர் முன்வந்தனர்" என்று அவர் கூறுகிறார்.

"ஒரு கதவை உடைத்து தற்காலிக ஸ்ட்ரெச்சர் ஒன்று உருவாக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு கட்டுப் போடுவதற்காக பெண்கள் துணிகளைக் கிழித்துக் கொடுத்தனர்," என்று டாக்டர் வாலஸ் கூறினார்.

"நாங்கள் மவுண்ட்பேட்டனின் உடலைக் கரைக்குக் கொண்டு வந்தபோது, அவரது உடலின் பல பகுதிகளில் வெட்டுக் காயங்களும் காயங்களும் இருந்தன, ஆனால் அவரது முகம் சிதைவடையாமல் சாதாரணமாக இருந்தது."

Getty Images IRA 1990களில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது மவுண்ட்பேட்டனுக்கு பிரியாவிடை

மவுண்ட்பேட்டன் இறந்த செய்தி கிடைத்தவுடன், டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கடைகளும் மூடப்பட்டன. அவரது மறைவையொட்டி இந்தியாவில் ஏழு நாட்களுக்கு 'அரசு துக்கம்' அறிவிக்கப்பட்டது.

1979 செப்டம்பர் 5ஆம் நாளன்று, அவரது இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 1400 பேர் முன்னிலையில் நடைபெற்றது. பிரிட்டன் ராணி, இளவரசர் சார்லஸ், ஐரோப்பிய மன்னர்கள் பலர், பிரதமர் மார்கரெட் தாட்சர் மற்றும் நான்கு முன்னாள் பிரதமர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் மவுண்ட்பேட்டன் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டனர்.

Photo by Tim Graham Photo Library via Getty Images ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் ஐ.ஆர்.ஏ பொறுப்பேற்பு

மவுண்ட்பேட்டனின் கொலைக்கு பொறுப்பேற்ற அயர்லாந்து குடியரசுப் படை ( Provisional IRA) ஒரு அறிக்கையை வெளியிட்டது.

79 வயது முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொலையை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்பதற்கான விளக்கத்தை ஐ.ஆர்.ஏ ஒருபோதும் தரவில்லை.

மவுண்ட்பேட்டனின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் பிலிப் ஜீக்லர், "மவுண்ட்பேட்டனின் கொலை நடந்த அதே நாளில் அயர்லாந்தில் 18 பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டதும், இந்த முடிவு ஐஆர்ஏவின் உயர் மட்டங்களில் எடுக்கப்பட்டதை உணர்த்துகிறது." என எழுதுகிறார்

"நமது நாட்டை தொடர்ந்து ஆக்ரமித்திருப்பது தொடர்பாக பிரிட்டிஷ் மக்களின் கவனத்தை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்" என்று ஐஆர்ஏ தனது செய்திக்குறிப்பில் கூறியிருந்தது.

மவுண்ட்பேட்டனின் படுகொலைக்குப் பிறகு, ஐஆர்ஏவின் பிரசாரத்திற்கான பொதுமக்களின் ஆதரவு குறைந்தது.

அதே நேரத்தில், பிரிட்டனின் பிரதமரான மார்கரெட் தாட்சர், ஒரு அரசியல் அமைப்பு என்ற நிலையில் இருந்து ஐ.ஆர்.ஏவை நீக்கி, அதை குற்றவியல் அமைப்பாக அறிவித்தார். மேலும், அவர் ஐ.ஆர்ஏ போராளிகளுக்கு வழங்கப்பட்ட போர்க் கைதி என்ற அந்தஸ்தையும் திரும்பப் பெற்றார்.

மெக்மஹோனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரங்களுக்குள், கொலையாளிகளைப் பிடிக்க அயர்லாந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினார்கள், இது அவர்களுடைய வரலாற்றில் மிகப்பெரிய விசாரணை என்று கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பிறகு, பிரான்சிஸ் மெக்கேர்ல் (24), தாமஸ் மெக்மஹோன் (31) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

1979 நவம்பர் 23ஆம் நாளன்று, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சந்தேகத்தின் பலனை மெக்கேர்லுக்கு வழங்கி அவரை விடுவித்தது. இரண்டு ஆதாரங்களின் அடிப்படையில் மவுண்ட்பேட்டனைக் கொலை செய்ததாக மெக்மஹோன் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டது.

தாமஸ் மெக்மஹோனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் 1998இல் 'குட் ஃப்ரைடே' ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். அவர் மவுண்ட்பேட்டனை கொலை செய்ததற்காக மொத்தம் 19 ஆண்டுகள் பிரிட்டன் சிறையில் கழித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.