சமூக ஊடகங்களில் சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு வீடியோ உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காட்சிகளில், பசிபிக் ப்ளூ மரைன் பார்க் என்ற இடத்தில் பயிற்சியாளராக இருந்ததாகக் கூறப்படும் ஜெசிகா ராட்க்ளிஃப் என்பவர், திமிங்கலத்தின் (Orca) நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது, திமிங்கலம் தண்ணீரிலிருந்து குதித்து அவரை இழுத்துச் சென்று கொன்றதாக காட்டப்பட்டது.
சில விநாடிகளில் தண்ணீர் சிவப்பாக மாறி, பயிற்சியாளர் உயிரிழந்ததாகக் கூறப்படும் அந்த வீடியோ டிக்டாக், ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வேகமாக வைரலானது. இதனால், “திமிங்கலங்களின் நிகழ்ச்சிகள் பாதுகாப்பானதா?” என்ற கேள்வி உலகம் முழுவதும் விவாதமாகியது.
ஆனால் உண்மையை ஆய்வு செய்தபோது, ஜெசிகா ராட்க்ளிஃப் என்ற பயிற்சியாளர் ஒருபோதும் இல்லையே என்றும், பசிபிக் ப்ளூ மரைன் பார்க் என்ற இடமும் எங்கும் இல்லை என்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த வீடியோ முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை காட்சி என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
“>
தடயவியல் ஆய்வில் தண்ணீரின் இயங்குதிறன் இயற்கைக்கு முரணாக இருந்ததோடு, திடீர் குறுக்கீடுகள், குரல்கள் போன்றவை அனைத்தும் AI-யின் உருவாக்கமாக இருப்பது தெரியவந்தது. உண்மையில் 2010-ஆம் ஆண்டு SeaWorld-ல் நிகழ்ந்த திமிங்கலத் தாக்குதல் சம்பவம் போல, அதிகாரப்பூர்வ அறிக்கைகள், ஆதாரங்கள் எதுவும் இங்கு இல்லை.
இதனால், “பயிற்சியாளரை திமிங்கலம் கொன்றது” என்ற வைரல் காட்சி முற்றிலும் AI புனைவு எனவும், அதனை நம்ப வேண்டியதில்லை எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.