தாய்லாந்தின் காங் கிராச்சன் தேசிய பூங்காவில் ஒரு அபூர்வமான நண்டு இனமான ராஜா நண்டு (Royal Crab) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நண்டு ஊதா நிறத்தில் மிகவும் அழகாக இருப்பதால், அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. பூங்கா அதிகாரிகள் ரோந்துப் பணியின் போது இந்த நண்டை கண்டுபிடித்து படம் பிடித்துள்ளனர். இதை “இயற்கையின் விலைமதிப்பற்ற பரிசு” என்று கூறி, அதன் படங்களை பூங்கா நிர்வாகம் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த ராஜா நண்டு “சிரிந்தோர்ன் நண்டு” என்றும் அழைக்கப்படுகிறது. இது தாய்லாந்தின் இளவரசி மகா சக்ரி சிரிந்தோர்னின் பெயரில் அழைக்கப்படுகிறது. பொதுவாக பாண்டா நண்டுகள் கருப்பு-வெள்ளை நிறத்தில் காணப்படும். ஆனால் இந்த ஊதா நிற நண்டு மிகவும் அரிதானது. விஞ்ஞானிகள் கூறுவதப்படி, இந்த நண்டின் ஊதா நிறம் எந்தவொரு சிறப்பு காரணத்திற்காக உருவாகவில்லை, ஆனால் இயற்கையின் ஓர் அடையாள நிறமாகவே தோன்றியிருக்கலாம்.
இந்த அரிய நண்டின் இருப்பு காடு ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. அதே சமயம், பாதுகாப்பு முயற்சிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை காட்டுகிறது. உலக பாரம்பரிய தளமான இந்த பூங்கா, இப்போது தனது பல்லுயிர் பெருக்கத்திற்காக உலகளவில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த அற்புதமான நண்டு இயற்கையின் அரிய அழகையும், எதிர்கால சந்ததிக்காக பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் நினைவூட்டுகிறது.